புரெவி புயலைப் புறந்தள்ளி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது, ஜனவரியில் கட்சித் துவக்கம் என்ற ரஜினியின் ட்விட். ஆண்டுக் கணக்கில் எதிர்பார்ப்பில் இருந்த ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது இந்த அறிவிப்பு. உடனே பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர் ரசிகர்கள். அதோடு "சிங்கம் ஓன்று புறப்பட்டதே" பாடல் அனைவரின் செல்ஃபோன் ஸ்டேட்டஸ் ஆக மாறியது.
இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல தரப்பட்ட இளைஞர்களிடம் பேசினோம்...
இன்ஜினியரிங் ஓா்க்ஸ் சசிகுமார், "நீண்ட ஒரு போராட்டமும் திட்டமிடுதலின் அடிப்படையிலும் கட்சி ஜனவரி மாதம் துவங்குவேன் என்று தான் கூறியிருக்கிறார். இன்னும் துவங்கவில்லை. துவங்குவேன் என்று ரஜினி கூறியிருக்கும் இந்த நிலையில், சில கட்சிகள் அவரின் முயற்சியை முளையிலே கிள்ளும் விதமாகக் கமென்ட் செய்வது ஆரோக்கியமானதல்ல. இது ஜனநாயக நாடு தானே, அதை வரவேற்கனும். அவரிடம் ஏதோ சிஸ்டம் இருக்கிறது என்று சொல்கிறார். அது நல்லதாக இருந்தா தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லையென்றால் என்ன செய்வார்கள் என்று மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க அவசியமில்லை. ஓட்டுப் போடும் உரிமையைக் கொண்ட ஒரு வாக்காளனாக ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன்" என்றார்.
தனியார் நிறுவன ஊழியர் தாஸ், "நடிகர்கள் அரசியல் கட்சித் தொடங்கக் கூடாது. தமிழக அரசியலில் நடிகர்களின் ஆட்டம் இனி எடுபடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். நானோ நீங்களோ கட்சித் தொடங்கினால் எத்தனை பேருக்குத் தெரியும். சொந்த வீட்டுக்குள்ளே தெரியாது. பப்ளிசிட்டி ஆன ஒருவா், தமிழக மக்களுக்கு நல்லா அறிமுகமான ஒருவர்தான் கட்சி, தொடங்க முடியும். அதைத்தான் ரஜினி செய்ய இருக்கிறார். கட்சித் தொடங்கி அவரின் கொள்கை, செயல்பாடுகள், ஏன் யாராக இருந்தால் என்ன? மக்களுக்கு நல்லதைச் செய்வதாக இருந்தால் மக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பெறுவார்.
என்னைப் பொறுத்தவரை எத்தனை முறையோ ரஜினி கட்சித் தொடங்குறேன் என்று ஏமாற்றி இருக்கிறார். அதையெல்லாம் பொறுத்து அவரின் பின்னால் அவரின் ரசிகர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது, டிசம்பா் 31 -ஆம் தேதி தான் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதற்குள் அவரின் மனநிலைகள் எப்படியும் மாறலாம், மாறாமலும் இருக்கலாம். முதலில் அவா் கட்சியையும் கட்சிப் பெயரையும் அறிவிக்கட்டும்" என்றார்.
இன்ஜினியரிங் பட்டதாரி நிஷாந்த், "நான் ரஜினியின் ரசிகனும் அல்ல அவருடைய பெரும்பாலான படங்களைப் பார்த்ததும் அல்ல. ஆனால், அவர் சமீப காலமாக அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்துச் சுட்டிக்காட்டும் கருத்துகளும் அரசியல் பேச்சுகளும் நடவடிக்கைகளும் வித்தியாசமாகவே உள்ளது. ஜாதி அரசியலைப் பார்த்துப் பழகிப்போன தமிழக மக்களுக்கு ரஜினியின் ஆன்மிக அரசியல், எப்படி இருக்கிறது என்று அதையும் பார்ப்போம். இந்த அரசியல் சிஸ்டத்தை மாற்றி, படித்த இளைஞா்களைக் காப்பாற்றுமா? என்பதைப் பார்ப்போம். இதற்காக என்னுடைய ஓட்டு ரஜினிக்குத் தான்" என்றார்.
ரஜினியின் தீவிர ரசிகன் நாகராஜன் நம்மிடம், "தலைவா் வரவேண்டிய நேரத்துல வருவேன்னு சொன்னது போல வந்துட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு நல்ல ஆட்சியைக் கொடுப்பதற்காகத் தான் தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களுக்காகவே வாழவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியல் களம் இறங்கியுள்ளார். இது அவரை நம்பியிருந்த கோடான கோடி மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நான் இப்போது, பாஜகவில் இருக்கிறேன். தலைவர் கட்சி அறிவித்ததும், அடுத்த நிமிடமே அது தான் எனக்குக் கட்சியும் கொடியும்" என்கிறார் உறுதியாக.