ஈரைப் பேனாக்கும் தேர்தல் நேர அரசியல் களத்தில் வாண்ட்டடாக வண்டியில் ஏறியிருக்கிறார் தி.மு.க.வின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன். உளறலும் குழறுலுமாக அவர் குரலில் அண்மையில் ஒரு ஆடியோ வெளியானது. பரபரப்பான இந்த ஆடியோவை கேட்ட போலீசார், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதனை தீர்த்து வைக்க முயன்று, டென்சன் ஆன மாவட்ட செயலாளர் சரமாரியாக அந்தப் பெண்ணை பேசியது என்பது தெரிந்தது.
சொந்தக் கட்சிக்காரர்களே தான் இதனை பரப்பி மா.செ.வுக்கு சூனியம் வைத்திருக்கிறார்கள். திருச்சியின் அனைத்து வாட்ஸ் ஆப் குருப்புகளிலும் அது சுற்றிவர ஆரம்பித்தது. இந்த ஆடியோவில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக காடுவெட்டி தியாகராஜன் மீது புகார் மனு கொடுத்த நிலையில் காவல்துறையும் 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தது. மா.செ. பதவிக்கு குறி வைக்கும் மாஜி மகன் உள்ளிட்ட தி.மு.கவினர் சிலரே ஆடியோவை வைரலாக் கியதையும் போலீஸ் கண்டறிந்தது.
தற்போது இந்த ஆடியோ சர்ச்சையை அ.தி.மு.க. கையில் எடுத்து கொண்டுள்ளது. முன்னாள் எம்.பி.யும் அ.தி. மு.க.வின் தெற்கு மா.செ.வுமான குமார், தி.மு.க.வுக்கு எதிரான அரசியல் குரலை உயர்த்தினார். தன் மீதான குற்றச்சாட்டு தேர்தல் நேரத்தில் பின்னடைவை கொடுக்கும் என்பதை அறிந்த தியாகராஜன் கடந்த வியாழக் கிழமை (19-11-20) இரவு வெள்ளாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் அதன் உறுப் பினர்களை அழைத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதையும் தாண்டி ஆனாலும், 20ந் தேதி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு முன் நின்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் காடுவெட்டி தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கண்டித்து முழங்கியபடி பேரணி யாக சென்றனர். ஆளுந்தரப்பின் லோக்கல் அரசியல் போட்டியால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் கண்டன ஆர்ப் பாட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
காடுவெட்டியின் அடாவடிப் பேச்சை வைரலாக்கி ஆளுங்கட்சி வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள் திருச்சி தி.மு.க.வினர்.