இந்தச் சம்பவத்துக்குப் பின்னால நெறைய அரசியல் புள்ளிகள் இருக்கறாங்க. அவங்க யார்னு என் உயிரே போனாலும் பரவாயில்லை... வெளியே சொல்லுவேன்'' பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு போலீசிடம் சிக்குவதற்கு முன் வெளியிட்ட ஆடியோவில் சொன்ன வார்த்தைகள் இவை. கோவை மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு , ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கடந்த வெள்ளிக்கிழமையன்று சேலம் மத்திய சிறைக்கு சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறார்கள் போலீசார்.
"எதற்காக இந்த சிறை மாற்றம்..?' என நாம் போலீஸ் சோர்ஸ் ஒருவரிடம் பேசினோம். இவங்களுக்காக பொள்ளாச்சி, கோவை வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரல. கோர்ட்டிற்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்போது பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் தாக்குதல்கள் நடத்தவும் தயாராக இருக்கின்றனர். அதனால் வழக்கின் நீதிபதியான நாகராஜிடம்... வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் நான்கு பேரும் வாக்கு மூலம் அளித்து வந்தனர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு ரவிக்குமார் என்பவரை நீதிபதியாக போட்டுட்டாங்க. அதே சமயத்துல... என்.ஐ.ஏ. ரெய்டால் கைதான முஸ்லிம் நபர்களை கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறோம். இரண்டுமே சென்சிட்டிவ் விவகாரம்.
சிறைக்குள் இருக்கும் சில கட்சிக்கார நபர்களால்கூட இந்த பாலியல் வழக்கு குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது... அதனால் நாங்கள் சேலம் சிறைக்கு மாற்றுகிறோம்' என எங்கள் ஆட்கள் 5-வது குற்றவாளியாய் சேர்க்கப் பட்ட மணிவண்ணனையும் கொண்டு போய் விட்டார்கள். பாலியல் வழக்கை தற்போது விசாரிக்கும் சி.பி.ஐ. முழுமையான சார்ஜ்ஸீட் சப்மிட் செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும். அப்போது குற்றவாளிகளை ஆஜர்படுத்த சேலம் சிறையில் இருந்து கோவைக்கு கொண்டுவர வேண்டும். அப்படி விடியற்காலை 4 மணிக்கெல்லாம் சேலத்திலிருந்து குற்றவாளிகளை ரெடியாகச் சொல்லி அழைத்துக் கொண்டு வரும் போது "வழியில் திருநாவுக்கரசு எங்களை பலமாகத் தாக்கி தப்பிச் செல்ல நினைத்தான். பாதுகாப்புக்காக அவனை துப்பாக்கியால் சுட நேர்ந்தது' என எங்கள் ஆட்கள் வாக்குமூலம் கொடுக்கத் தயாராகி விட்டார்கள். நீதிமன்றம் அருகே உள்ள கோவை சிறையில் இருந்து திருநாவுக்கரசைக் கூட்டிக்கொண்டு வந்தால் இந்த என்கவுன்ட்டர் ஸ்கிரீன்ப்ளே ஒர்க்அவுட் ஆகாதே...
திருநாவுக்கரசு உயிரை உடலில் இருந்து புல்லட்டுகளால் எடுத்துவிட்டால்... இந்த பாலியல் வழக்குல நாம சிக்காம இருந்துவிடலாம் என சில அரசியல் புள்ளிகள் கணக்குப் போடுகிறார்கள். அதற்கு எங்கள் டிபார்ட்மென்ட்டும் துணை போகிறது'' என அதிர வைத்தார். இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாய் சேர்க்கப்பட்ட மணிவண்ணன், "நான் எந்தவித தப்பும் செய்யலை. அடிதடி வழக்குல சரண்டர் ஆன என் மீது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நிஷா பார்த்திபன் என்னை இந்த பாலியல் வழக்குல சேர்த்து விட்டுட்டாரு. எந்த ஆதாரத்தின் அடிப் படையில இந்த வழக்குல சேர்க்கப்பட்டேன்னு இதுவரை எனக்கு சொல்லவில்லை. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதால் எனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டுகிறேன்' என புதிய நீதிபதி ரவிக்குமாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மணிவண்ணன் வேண்டியிருக்கிறான். அதே நாளில் புதிய அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த "பார்' நாகராஜ், ஜாமீன் வாங்கி வெளியே வந்தான். சிறையில் மணிவண்ணனை சந்தித்து பேசினானாம் "பார்' நாகராஜ்.