Skip to main content

கூட்டணியில் நீடிக்குமா பா.ம.க? அல்வா தரும் அ.தி.மு.க.! 

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

dddd

 

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் உயர்த்திப் பிடித்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா என்கிற சந்தேகம் வலுத்து வந்த நிலையில், இடஒதுக்கீட்டு கொள்கையின் வடிவத்தை அவர் மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணியையும் வேலுமணியையும் தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தச் சந்திப்பில், ஒதுக்கீடு பிரச்சனைகளை மட்டுமல்ல கூட்டணி பற்றிதான் அதிகம் விவாதித்திருக்கிறார்கள் அமைச்சர்கள். 

 

சந்திப்பு குறித்து அமைச்சர்களுக்கு நெருக்கமான தொடர்பில் நாம் விசாரித்தபோது, “தன்னை சந்தித்த அமைச்சர்களிடம், ‘தனி இடஒதுக்கீடு (20%) போராட்டத்தைக் கையிலெடுத்துவிட்டேன். ஆனால், அது தற்போது சாத்தியமில்லை என உங்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதை அடுத்து தனி இடஒதுக்கீடு என்பதை உள் இடஒதுக்கீடாக மாற்றிக்கொண்டேன். மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பான்மை சதவீதத்தை வன்னியர் சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். ஒதுக்கினால் அ.தி.மு.க. கூட்டணியை தொடர்வதில் பா.ம.க.வுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது' என ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

 

dddd

 

அதற்கு அமைச்சர் தங்கமணி, "வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அ.தி.மு.க. அரசுக்கோ எந்த நெருடலும் இல்லை; ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தற்போது தேர்தல் நேரமென்பதால், வன்னியர்களுக்கு மட்டும் பெரும்பான்மை சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தால், எம்.பி.சி. பட்டியலிலுள்ள மற்ற சாதியினர் கிளர்ச்சி செய்வார்கள். அது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் மாறும். தேர்தல் நேரமாக இல்லையெனில் நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார் முதல்வர். அதனால், கூட்டணியை உறுதிப்படுத்துங்கள். தேர்தல் முடிந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இட ஒதுக்கீடு பிரச்சனை சரி செய்யப்படும்'' என தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்போது பேசிய ராமதாஸ், "உள் இடஒதுக்கீடு கொடுப்பதால் எந்தப் பிரச்சனையும் வராது'' எனச் சொல்ல, குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் வேலுமணி, "வன்னியர்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே ஜனார்த்தனன் கமிட்டி சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. இந்த நிலையில், உங்கள் கோரிக்கையை ஏத்துக்கிட்டும் மற்ற சமூகத்தைப் பகைத்துக்கொண்டும் உள் இடஒதுக்கீடு வழங்கினால், வன்னியர் சமூகத்தின் மொத்த ஆதரவும் அவர்களின் வாக்குகளும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா? அதற்கான உத்தரவாதத்தை பா.ம.க. தருமா? என்கிற கேள்விகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, கட்சியின் சீனியர்கள் அனைவரிடமுமே இருக்கிறது. அதனால் தேர்தல் முடியட்டும், நல்லது நடக்கும்'' என அழுத்தமாக சொல்லியிருக்கிறார். வேலுமணியின் இந்தப் பேச்சுக்கு ராமதாசால் பதில் சொல்ல முடியவில்லை.

 

இதனைத் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் எடுத்துள்ளனர். அப்போது, "வட தமிழகத்திலுள்ள 120 தொகுதிகளில் 80 இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தி பா.ம.க.வுக்கு மட்டுமே இருக்கிறது. பா.ம.க. இருப்பது கூட்டணிக்கு பலம். அதனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இரண்டாவது இடமும், 32 சீட்டுகளும் வேண்டும்'' எனச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். இதனை ஏற்காத அமைச்சர்கள், "கூட்டணியில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க. கேட்பதையும், அதனால் பா.ம.க.வுக்கு அதிகபட்சம் 20 சீட்டுகள் ஒதுக்க முடியும்' என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த டீலுக்கு ராமதாஸ் தயக்கம் காட்ட... "இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறோம்” என கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்தை விட்டு தங்கமணியும் வேலுமணியும் கிளம்பியிருக்கிறார்கள்‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

 

மேலும் “இந்தச் சந்திப்பில் தேர்தல் செலவுகள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதத்தையும் அமைச்சர்கள் தரப்பில் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள். டாக்டர் ராமதாசுடனான பேச்சுவார்த்தையில் நடந்ததை எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் இருவரும் விவரித்திருக்கிறார்கள். முழுமையாக அதனைக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, "எதார்த்த அரசியலை டாக்டர் அய்யா புரிந்துகொள்ள மறுக்கிறார். முந்தைய தேர்தல்களில் பா.ம.க.வால் அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்? பா.ம.க.வால் எத்தனை தொகுதி அ.தி.மு.க. ஜெயித்தது? என்றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூட்டணி அமைத்து தி.மு.க. தேர்தலை சந்திப்பதால்தான் நாமும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லைன்னா, தனித்தே நாம் போட்டியிட முடியும். பா.ஜ.க.வை இறுதி செய்துவிட்டு பா.ம.க.வை கவனிப்போம்” என கமெண்டடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறது அ.தி.மு.க. தரப்பு.

 

பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, "தேர்தல் முடிந்ததும் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்கிற எடப்பாடி பழனிசாமியின் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. பா.ம.க.வுக்கும் வன்னியர்களுக்கும் அவர் அல்வா தருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் கூட்டணியில் அய்யா எதிர்பார்ப்பது நடக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்காது'' என்கிறார்கள் ராமதாசின் உறுதி மீது நம்பிக்கை வைத்தபடி.