நெடுநாளாக பேச்சிலும் போராட்டத்திலும் இருக்கும் நில உரிமை என்ற முழக்கத்தை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறது 'காலா' திரைப்படம். தமிழ்நாட்டில் விடுதலைக்கு முன்பே அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்தது. ஆனால், அது முழுமையாக பலனளிக்காமல் ஆதிக்க சக்திகள் பார்த்துக்கொண்டன.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட விளைநிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள். செங்கல்பட்டின் ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் அந்தப் பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றி ஒரு அறிக்கையை தயார்செய்து 1891ல் ஆங்கிலேயே அரசுக்கு அனுப்பிவைத்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்குவதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்று குறிப்பிட்டிருந்தார். 1892, மே16ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 1892 30ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதிலும் 12.5 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பட்டியலின மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போதைய சென்னை மாகாணத்தில் மட்டும் இரண்டு இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலங்களை ஆதி திராவிடர் அல்லாதோர் பயன்படுத்த முடியாதபடி சட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன்படி, குறைந்தது இந்த நிலத்தில் விவசாயம் செய்தோ, வீடு கட்டியோ பயன்படுத்தவேண்டும். அதன்பின்தான் இந்த நிலங்களை பிறருக்கு விற்க முடியும். அதிலும் இந்த நிலத்தை அதே இனத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் விற்க முடியும். இந்த சட்டம் கொண்டுவந்ததன் முக்கிய காரணம் அவர்களை ஏமாற்றி யாரும் நிலங்களை அபகரித்துவிடக்கூடாது என்பதற்காகதான். அப்படி யாரும் பத்திரப்பதிவிற்காக வந்தால் பத்திரப்பதிவாளர் அதிலுள்ள வில்லங்கத்தைக்கூறி பத்திரப்பதிவிற்கு தடைவிதிக்கவேண்டும். இப்படி சட்ட ரீதியான தடைகள் வலிமையாக இருக்கின்றன, ஆனால் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
அதனால்தான் காலங்காலமாக பலர் அந்த மக்களை ஏமாற்றி அவர்களது நிலங்களை அபகரித்துவந்தனர். இன்றும் பல பஞ்சமி நிலங்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட பாதி நிலங்கள் ஆக்கிரமிப்பிலேயே இருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையும் வருடாவருடம் மீட்கிறோம் என்று கூறிக்கொண்டே வருகிறது.
ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேறச் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த திட்டம்தான் பஞ்சமி நிலச் சட்டம். ஆனால் அந்த நிலங்களையும் பிடுங்கிக்கொண்டனர். சிலர் நிலத்தின் மதிப்பறியாமல் மிகக் குறைந்த விலைக்கு சட்டத்திற்கெதிராக விற்றனர். அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர். 1994 அக்டோபர் 10ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடைபெற்றது. அப்போதிருந்த ஜெயலலிதா அரசு துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது. தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்ததுபோலவே அப்போதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். ஜான் தாமஸ் என்ற நில மீட்புப் போராளியின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. பலர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
இன்றும் பஞ்சமி நில மீட்புக்காக பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன. வெற்றி எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை.