Skip to main content

பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியவில்லை! குமுறும் பக்தர்கள்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

ஊரடங்கு உத்தரவால் பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியாமல் முருக பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
 

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் பழனி முருகன் திருக்கோயில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படிப் பழனிக்கு வரும் முருக பக்தர்களை நம்பி பழனி திருக்கோவில் தேவஸ்தானம் மற்றும்  கிரி வீதி அடிவாரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பஞ்சாமிர்தக் கடைகள் உள்ளன.

 

 

palani panchamirtham


குறிப்பாகப் பழனி என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம். இப்படிப்பட்ட பஞ்சாமிர்தத்தை முருக பக்தர்கள் வாங்கத் தவறுவதில்லை. சுண்டி இழுக்கும் சுவை கொண்ட பஞ்சாமிருதத்தை மலை வாழைப்பழம், பேரிச்சை, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு, தேன் முதலிய மூலப்பொருட்களைக் கொண்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதைத்தான் முருகன் கோவிலில் பிரசாதமாக முருக பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது.
 

palani panchamirtham


இதுதவிர கோவில் கடைகள் அடிவாரத்தில் உள்ள கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தினமும் கோடிக் கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பழனி முருகன் கோவிலுக்கு முருகபக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
 

http://onelink.to/nknapp

 

மேலும் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிவாரம் பகுதியில் உள்ள தேவஸ்தானம் மற்றும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தக் கரோனா வைரஸ் காரணமாகப் பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி பஞ்சாமிர்தத்தை ருசிக்க முடியாமல் முருக பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
 

 

இது சம்பந்தமாகப் பழனி கோயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சாதாரண நாட்களில் 15 டன் என்ற அளவிலும் தைப்பூசம் பங்குனி உத்திர  திருவிழா நாட்களில் 50 டன் அளவிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாகப் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு முன்னதாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பங்குனி உத்திரத் திருவிழாவும் நடைபெறவில்லை. இதனால் பஞ்சாமிர்தம் தயாரிப்பு முடங்கியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இதுபற்றி கடை வியாபாரிகள் சிலரிடம் கேட்டபோது, தைப்பூசம் பங்குனி உத்திரம் திருவிழா காலங்களில் பஞ்சாமிர்தம் மற்றும் அலங்காரப் பொருட்கள் பொம்மைகள் அதிக அளவில் முருக பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கரோனா மூலம் ஊரடங்கு போடப்பட்டு உள்ளதால் திருக்கோயில் மூடப்பட்டதின் மூலம் வர்த்தகமும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி இருந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்கள்.
 

 

Next Story

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.