அதிமுகவில் எடப்பாடியின் நோக்கம் அறிந்து செயல்படுபவர்கள் செங்கோட் டையன், ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர்தான். அமைச்சரவையில் இருப்பவர்கள் பலர் சசிகலா டீமோடு டச்சில் இருக்கிறார்கள். அவர்களையும் எடப்பாடியால் கேட்க முடியவில்லை. அதற்குக் காரணம், அவரும் சசிகலாவைத் திட்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை என்பதோடு சசிகலா வகையறாக்களின் ரியல் எஸ்டேட் விவகாரமான -ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்னை பின்னி மில் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரங்களுக்கு உதவியாக இருக்கிறார். அத்துடன் இளவரசி குடும்பத்தினருடன் எடப்பாடியின் மகன் மிதுன் நெருக்கமாக இருக்கிறார். சசிகலாவோட சேர்ந்தே போவோம் என்பதுதான் இ.பி.எஸ். டீல்'' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
இதனால் சசிகலா ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் இந்தத் தேர்தலுக்குப் பிறகு உயிர்பெற ஆரம்பித்துள்ளன. சசிகலாவை "சின்னம்மா' என ராஜேந்திர பாலாஜி பேசுவதும், இந்த ஸ்லீப்பர்செல் விவகாரம்தான் என்கின்றன மன்னார்குடி வகையறாக்கள். இதற்கிடையே ஓ.பி.எஸ். ஆதரவு பதினோரு எம்.எல்.ஏ.க் கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்ததனால் அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை எனக் கேட்டு தொடர்ந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இறுதிக் கட்டத்தை எட்டி நிற்கிறது. அதில் எதிரான தீர்ப்பு வருமானால் ஓ.பி.எஸ்.ஸின் துணைமுதலமைச்சர் பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தத்தை ஆதரித்து அவர் பின்னால் அணி திரண்டவர்களை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. திருப்பரங்குன்றம் முத்துராமலிங்கம், சூலூர் செ.ம.வேலுச்சாமி போன்றவர்களுக்கு இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ்.ஸால் சீட் வாங்கித்தர முடியவில்லை. ஏற்கனவே தனது ஆதரவாளர்களான மைத்ரேயன், செம்மலை போன்றவர்களுக்குப் பதவிகள் வாங்கித்தர ஓ.பி.எஸ். ஸால் முடியவில்லை.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும், கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை எந்த கமிட்டியிலும் ஓ.பி.எஸ். நியமிப்பதை எடப்பாடி அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் ஓ.பி.எஸ். நினைத்தால் அ.தி.மு.க.வை இரண்டாகப் பிளந்து மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை தொடங்க முடியும். அதை ஓ.பி.எஸ். செய்யத் துணியமாட்டார் என எடப்பாடி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். எனவே எடப்பாடியின் அசைவுகளையும் சசிகலாவின் கணக்குகளையும் பா.ஜ.க.விடம் எடுத்துச் சொல்லி மீண்டும் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டும், தனது மகன் ரவீந்திரநாத்குமார், மத்தியில் மந்திரியாக வேண்டும் என ஓ.பி. எஸ். முயற்சி செய்துவருகிறார்.
தான் பா.ஜ.க.வில் இணையப்போவதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், "அ.தி.மு.க.வே என் உயிர்' என உருக்கமாக அறிக்கை வெளியிட்டார் ஓ.பி.எஸ். நேரடியாக பா.ஜ.க.வில் சேர்வது, தற்போதைய அதிகார அரசியலுக்குப் பயன் தராது என்பது அவருக்குத் தெரியும்; அதனால் ஓ.பி.எஸ். தலைமையில் பா.ஜ.க. ஆதரவு அ.தி.மு.க. உதயமாகத் தயாராகி வருகிறது. அத்துடன் சசிகலா ஆதரவு அ.தி.மு.க., தினகரன் எதிர்ப்பு அ.தி.மு.க. இவற்றையும் எடப்பாடியின் ஆளும் அ.தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்துடன் அ.ம.மு.க.விலும் அ.தி.மு.க.வினர் பலர் இணைய தயாராகிவருகிறார்கள். அதனால் என் வழி தனி வழி. நீங்களும் வாங்க என நிர்வாகிகளுடன் டீல் போட்டிருக்கிறார் தினகரன். யாராக இருந்தாலும் மே 23-க்குப் பிறகுதான் எந்த முடிவையும் எடுப்பார்கள். ஆக மே 23 தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்பதிலும், அதன்பிறகு அ.தி.மு.க. என்ன வாகும் என்பதிலும் பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.