தமிழ்த் திரைப்படங்களில் துப்பறியும் நடிகர்களை நிறையப் பார்த்திருப்போம். குறிப்பாகப் பழைய படங்களில் இந்த துப்பறியும் கதைகளில் முக்கிய நடிகர்கள் அதிகம் நடித்திருப்பார்கள். திரைத்துறையில் வருவதைப் போலத்தான் துப்பறியும் பணி இருக்குமா? அதில் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து பெண் துப்பறிவாளர் ஜாஸ்மின் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,
தமிழ் திரைத்துறையில் எத்தனையோ துப்பறியும் நபர்களையும், கதைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். திரைத்துறையில் வரும் நபர்களைப் போலத்தான் நிஜத்திலும் துப்பறியும் பணி இருக்குமா? இல்லை வேறு மாதிரியான கோணத்தில் அணுகுவீர்களா?
அதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும், நாங்கள் ஒரு கேஸ்ஸ ஒருநாள் ஃபாலோ பண்ணுவோம், சில சமயம் 15 வரை ஃபாலோ செய்ற மாதிரி சூழ்நிலை இருக்கும். ஆனால் படத்தில் அப்படிச் செய்ய முடியாது. அதற்கான நேரமும் அவர்களுக்கு இருக்காது. இரண்டரை மணி நேரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் அவர்கள் சுருக்கி காட்ட முடியும். பெரும்பாலான காட்சிகள் இரண்டிற்கும் பொதுவாக அமைந்திருக்கும். சில சம்பவங்கள் திரையில் ஒரு மாதிரியாகவும், நேரில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். எந்த துப்பறியும் படம் சிறந்தது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தெகிடின்னு ஒரு படம் வந்தது; அதுவேணா நாங்க செய்கிற மாதிரி காட்சிகள் பல ஒத்துப் போயின. வேறு படத்தைப் பத்தி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. எனக்கு எப்பவுமே ஜேம்ஸ்பாண்ட் தான்.
நீங்கள் பல கேஸ்சில் புலனாய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்திருப்பீர்கள், ஆரம்பத்தில் உங்களுக்கே டஃப் கொடுத்த சம்பவமாக எதைப் பார்க்கிறீர்கள்?
ஒரு ஜோடி ஐந்து வருடம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 10 வருடங்களாகக் குழந்தை இல்லை. இதனால் அந்த வீட்டில் அதிக அழுத்தம் தர ஆரம்பித்தார்கள். இருவரும் மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்து செக் பண்ணி பார்த்தார்கள். இதில் அந்த ஆணுக்கு விந்தணு போதிய அளவு இல்லாதது தெரிய வந்திருக்கிறது. இதை அந்த வீட்டில் சொல்ல முடியாது. கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள். அந்த ஜோடிகள் எதைச் சொன்னாலும் இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். அதையும் தாண்டி அந்தப் பெண்ணை மலடி, குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியில்லாத பெண் போன்ற கடினமான வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணும் இதைப் பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் பற்றி இருவருமே யாரிடமும் கூறவில்லை. ஏனென்றால் இருவருமே அதிகப்படியான அளவு நேசித்தார்கள். ஆனால் அந்தப் பெண் கணவரிடம் பேசி இதை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் அனைவரும் கேட்கும்போது நம்மால் பதில் சொல்ல முடியாது. கடினமாக இருக்கும் இருவருக்குமே, அதனால் டோனர் மூலம் சிகிச்சை எடுத்து அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதற்கு அவரின் கணவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பெண் அந்த சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
நாளடைவில் அந்தப் பெண்ணின் கணவர் மனைவியிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். குழந்தையைக் கொஞ்சுவதைக் கூட நிறுத்திவிட்டார். குடிப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார். என்ன செய்வது என்று யோசித்த அந்தப் பெண் எங்களிடம் வந்து கணவரின் செயல்பாட்டில் சந்தேகம் உள்ளது. வேறு ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறதா? என்பதைக் கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று கூறினார்.
நாங்களும் அவர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வரை அவரை பல நாட்கள் தொடர்ந்து கவனித்து வந்தோம். அவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. இதை அவரின் மனைவியிடம் கூறினோம். இல்லை, அவர் என்ன நினைத்துக்கொண்டு இவ்வாறு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துக் கூறுங்கள் என்றார். நாங்கள் கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறினோம். அவர் தினமும் மது அருந்தும் பாரில் எங்களின் ஆள் ஒருவரை அவரிடம் பேசிப் பழக வைத்தோம்.
கிட்டதட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு என் மனைவிக்கு இன்னொருவர் மூலம் குழந்தை பிறந்துள்ளது. 10 வருடத்துக்குப் பிறகு எங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அதை எனக்குப் பிறக்கவில்லை என்று என் உறவினரிடம் என்னால் சொல்ல முடியவில்லை என்றார். இதை அவரின் மனைவியிடம் நாங்கள் கூறினோம். அவருக்காக எல்லா கஷ்டங்களையும் நான் ஏற்றுக்கொண்டு இத்தனை நாள் இருந்தேன். கடைசியில் என்னையே அவர் சந்தேகப்படுகிறார் என்று வருத்தப்பட்டார். பிறகு இருவரையும் கூப்பிட்டு கவுன்சிலிங் கொடுத்தோம். தற்போது நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள்" என்றார்.