Skip to main content

திருச்சி தொகுதியை கேட்ட திருநாவுக்கரசர் படத்தில் தார்பூசிய அதிர்ச்சி அரசியல் ! 

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை ஒதுக்கியதன் மூலம் திருச்சியில் வைகோ போட்டியிடுவர் என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் மார்ச் 8 அன்று திருச்சியில் மிக பிரமாண்டமான பெண்கள் தின கொண்டாட்டத்தில் வைகோ தலைமையில் ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

 

congress


இதற்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தனக்கு திருச்சியில் வேட்பாளராக நிற்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் வெளியே இருந்த பேனரில் இருந்த திருநாவுகரசர் படத்திற்கு தார்பூசி எதிர்ப்பைக் காட்டி, திருச்சியில் திருநாவுக்கரசர் நிற்பதற்கு தேர்தல் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தியிருக்கிறது திருச்சி கோஷ்டி காங்கிரஸ். 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வருவதற்கு சில வாரங்களுக்கு முன் திருநாவுக்கரசரின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அவருக்குப் பதில் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றார். திருநாவுக்கரசருக்கு கட்சியில் என்ன நிலை என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் திருநாவுகரசர் ஆதரவாளர்கள் எங்கள் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் இடம் கொடுத்து காங்கிரஸ் வெல்லும் பட்சத்தில் உரிய மரியாதை அளிக்கப்படும் சந்தோஷத்தில் தெரிவித்தார்கள். 
 

திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் அடைக்கலராஜ் 4 முறை வென்றுள்ளார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் வெறும் 4,365 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனது. 2014-ம் ஆண்டு பலரும் பிரிந்து நின்ற நிலையில் மீண்டும் அதிமுக வென்றது. இம்முறை திருச்சியில் காங்கிரஸ் நின்று வெல்லவேண்டும் என நினைக்கிறது. 
 

இதனால் திருநாவுக்கரசர் சொந்த ஊர் மற்றும் பலமுறை வென்ற அறந்தாங்கி தொகுதி இருக்கும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்கிற வாய்ப்பு இருந்தும் அந்த இடத்தில் முஸ்லீம் கட்சியின் சார்பில் கேட்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் திருச்சி பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி தனிப்பட்ட முறையில் தனக்காக திருச்சி தொகுதியை ஒதுக்கக்கோரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார். டெல்லி லாபியிலும் திருச்சி தொகுதியை கேட்டு முயற்சி செய்து கொண்டுயிருந்தார். 

 

vaiko


இந்த நிலையில் வைகோ கடந்த 2 மாதமாக திருச்சியில் போட்டியிடலாம் என தேர்தலை முன்னிறுத்தி தொடர் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் தி.மு.க. மா.செ. கே.என்.நேரு,. வைகோ மாதிரியான கட்சித்தலைவர் திருச்சியில் போட்டியிடுவது சரியாக இருக்காது, அவருக்கு ராஜ்யசபா சீட்டு ஒதுக்கலாம் என தி.மு.க. தலைவரிடம் மறுப்பு சொல்ல அதன் பிறகே வைகோவிற்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியது திமுக தலைமை.
 

இந்த நிலையில் திருநாவுக்கரசர், வைகோ ஒதுங்கியதால் கட்டாயம் திருச்சி நமக்குதான் என்ற வெகுவான நம்பிக்கையில் இருந்த நேரத்தில் திருச்சி காங்கிரஸ் அலுவலகம் உள்ள அருணாசலம் மன்றத்தின் வெளியே இருந்த பிளக்ஸ் பேனரில் இருந்த திருநாவுகரசர் படத்திற்கு தார் பூசி அவருக்கு எதிர்ப்பை காட்டியிருப்பது திருநாவுக்கரருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. 
 

இதற்கு இடையில் திருநாவுகரசர் திருச்சியில் உள்ள தி.மு.க. மா.செ. கே.என்.நேருவிடம், தான் போட்டியிட விரும்புவதை சொல்ல இதை கே.என்.நேரு ரசிக்கவில்லை என்கிறார்கள் தி.மு.க.வின் உள்வட்டத்தை அறிந்த அரசியல் ஆர்வலர்கள். 
 

திருச்சி தி.மு.க. மா.செ. கே.என்.நேருவின் ஒரே சாய்ஸ் உள்ளுர் வேட்பாளர்தான். இதற்கு முன்பு 4 முறை திருச்சியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் அடைக்கலாராஜின் மகன் தொழிலதிபர் ஜோசப்லூயிஸ் தானாம். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர், கெட்டபெயரும் இல்லாத பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் பணத்தில் செல்வாக்கு உள்ள ஜோசப்லூயிசுக்கு கொடுங்கள் ஈசியாக ஜெயித்துவிடலாம். தேவையில்லாம் திருநாவுக்கரசரை கொண்டு வந்து நிறுத்தி ஜெயிக்கிற தொகுதியை சிக்கலாக்க வேண்டாம் என்று திமுக தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். 

 

congress


காங்கிரஸ் கட்சியில் லூயிஸ் அடைக்கலராஜா, திருநாவுக்கரசாரா என்கிற விவாதம் உள்கட்சிக்கு எழுந்துள்ள நிலையில் கே.என்.நேரு திருச்சி தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்குங்கள் நாங்கள் இளைஞர்கள் யாரையாவது நிறுத்தி ஜெயித்து விடுவோம் என்று ஓரே போடாக போட்டு விட்டாரம்.
 

திருச்சி ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ்க்கு காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையிலும், சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்துடன் செல்வாக்குடன் இருப்பதால் சீட்டு அவருக்கு கிடைக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள். 
 

திருச்சியை மிகவும் எதிர்பார்த்து காய் நகர்த்திய திருநாவுக்கரருக்கு தார்பூசி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் கேள்விபட்டது முதல் அப்செட் ஆகியிருக்கிறார். 
 

காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கியுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகளில் திருச்சி தொகுதி இல்லை என்பதுதான் ஹாட்டடாக் விசயம். கேட்காத இடத்திற்கு தான் தற்போது ஆளாளுக்கு காய்நகர்த்தி வருவது தான் அரசியல் சதுரங்கம். இன்னும் போக போக திருச்சி எம்.பி. தொகுதியில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ! 
 

திருநாவுக்கரசரின் படத்தில் யார் தார் பூசியது என்று விசாரிக்கையில் அவர் மாநில தலைவராக இருக்கும் போது வைத்த படம். தற்போது தான் அவரை மாற்றி விட்டு கே.எஸ். அழகிரியை தலைவராக அறிவித்துவிட்டார்கள். ஆனால் புதிய தலைவரின் படத்தை வைக்கவில்லை. காரணம் திருச்சியில் தற்போது இருக்கும் மாவட்ட தலைவர்கள் அனைவரும் திருநாவுக்கரசர் அவர்களால் பொறுப்புக்கு வந்தவர்கள் என்பதால் பேனரை அகற்றவில்லை இதனால் திருநாவுக்கரசரின் எதிர் கோஷ்டியினர் செய்திருக்கலாம் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்