‘நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது’ என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இந்த பரிந்துரை பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகாமையில் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் இந்தத் திட்டமானது தொடங்கப்படுவதற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதிருந்தே அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயாரிக்கத் தேவையில்லை. இது சிறப்புத்திட்டம் என்பதால் பொதுமக்களிடமும் கருத்து கேட்கத் தேவையில்லை. இந்த ஆய்வகத் திட்டத்தினால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் துளியளவும் இருக்காது’ என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு கடந்த மார்ச் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இந்த பரிந்துரையினை முன்வைத்துள்ளது.
நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி, பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு தடைவிதித்தது.
தற்போது சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு அதில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியிருக்கும் நிலையில் பூவுகலகின் சுந்தர்ராஜன் நம்மிடம், ‘இது முற்றிலும் தவறான விஷயம். ‘தேசிய முக்கியத்துவம்வாய்ந்த திட்டம்’ என்று நியூட்ரினோ திட்டத்தை சொல்கிறார்கள். அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுதானே இருக்கமுடியும்? தமிழ்நாடு அரசு வைகை ஆற்றுப்படுகை, பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை கருத்தில்கொண்டு ஆய்வு நடத்தவேண்டும் என்று இந்தத் திட்ட முன்மொழிவிற்கு பதிலளித்திருந்தது. ஆனால், தேசிய முக்கியத்துவம் என்ற பெயரில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் ஒரு திட்டத்தை கொண்டுவரும் பரிந்துரை சரியான விஷயமாக இருக்கமுடியாது. கதிர்வீச்சு பாதிப்புகள் இல்லை என்று அதற்கான துறைக்குப் பதிலாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு எப்படி சொல்லமுடியும்? இத்தனை காலம் அறிவியல் ஆராய்ச்சி என்று சொல்லப்பட்டுவந்த ஒரு திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகளை கொண்டுவந்து நிறுத்தவேண்டிய அவசியம் என்ன? சுற்றுச்சூழல் அனுமதிபெற இந்த பரிந்துரை போதுமானது. அதன்பிறகு வனத்துறையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதியளிக்கவேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் அனுமதி பெறுவதற்கான எல்லா வேலைகளும் இந்த பரிந்துரையில் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தால் அதற்கெதிரான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுப்போம். நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம். எந்தத்திட்டம் எங்கே வரவேண்டும் என்கிற அனுமதியை மக்கள்தான் தரவேண்டும். எந்த சிறப்புத் திட்டமானாலும் மக்களுக்குத்தான் திட்டமே தவிர, திட்டத்திற்காக மக்கள் கிடையாது’ என்கிறார் உறுதியாக.
நியூட்ரினோ திட்டத்திற்கான பரிந்துரையை அளிக்கும்போதே பல்வேறு விஷயங்களையும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. குறிப்பாக எல்லா வேலைகளும் முடிந்தபிறகு அங்கு மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. தான்தோன்றியான மகாவனத்தின் ஒரு பகுதியை அழித்துவிட்டு அங்கு மரம் நடச்சொல்வது எத்தனை வேடிக்கையான விஷயம்!