Skip to main content

'சிதம்பரம் கைது காங்கிரஸை வலுப்படுத்தவே உதவும்!' – இந்து என்.ராம் 

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மீடியாக்கள் தவறு இழைத்துவிட்டன. 74 வயதான ஒரு தலைவரை சுவரேறிக் குதித்து கைது செய்ததின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வலுச்சேர்க்கவே சிபிஐயும் மத்திய அரசும் உதவி செய்திருக்கின்றன என்று தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான திரு என்.ராம் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். 
 

n ram

 

 

பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 

ப.சிதம்பரம் கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதே என் கருத்து.   அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. முதல்   தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை. வேறொரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி என்பவர் அளித்த வாக்குமூலத்தின்   அடிப்படையில்தான் சிதம்பரம் இதில்   தொடர்புபடுத்தப்படுகிறார்.

இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை முழுக்க   முழுக்க தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.   அதுவும் சிதம்பரத்தை கைதுசெய்த விதம் மிக மோசமாக இருந்தது. உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழக்கை   விசாரிக்கவிருக்கும் நிலையில், இப்படி இரவில் கைதுசெய்ய வேண்டிய   அவசியம் என்ன?

சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின்   அமைப்புகள் இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வேறு அரசுகளிலும் இதேபோல நடந்திருக்கிறது   என்பது உண்மைதான். ஆனால், அப்போதெல்லாம் அந்த நடவடிக்கைகளை குறைகூறிய பாஜகவினர், இப்போதும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இந்த அரசு செய்த மிகப் பெரிய தவறு இது.

தாமாக சரணடைந்திருக்கலாமே என்பது தவறு. அவருக்கு எதிராக கடுமையான பொய்ப் பிரச்சாரம் நடந்து வந்தது. நீதிமன்றத்தின் முன்பாக அவரது முன் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போது, அவர் எதற்காக கைதாக வேண்டும் அல்லது சரணடைய வேண்டும்? முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதற்காக அவர், யார் கண்ணிலும் படாமல் விலகியிருந்திருக்கலாம். அதற்காக தலைமறைவு என்பது 'நான்-சென்ஸ்'.

ப.சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர். நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எனவேதான், மற்ற தலைவர்களை நெருங்க முடியாத அளவில் ப.சிதம்பரம் குறிவைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தால் காங்கிரஸுக்கு பாதிப்பில்லை. சொல்லப்போனால், அவர்களை இது ஒருங்கிணைத்திருக்கிறது. அவர்கள் மீது ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி பதவி விலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கும். சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அப்படிப்பட்ட ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே செய்யும்.

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் திமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் சரியெனக் கருதலாம். ஆனால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். 2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்டவிதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை அணுக முடியாது.

சிதம்பரம் கைது விவகாரத்தில், பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன. எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று, அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்திருக்கலாம். பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை. முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள். பிறகுதான் சரணடைவார்கள்.
 

chidambaram

 

 

காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது. பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச் செயல்பட்டன என்பது தெரியவில்லை.