Skip to main content

கடவுளைத் தொட்டு வழிபாடு செய்ய வேண்டும்!-அர்ச்சக மாணவர்களின் 14 ஆண்டு காலப் பரிதவிப்பு! 

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

must be touched God and worshiped!

 

‘14 ஆண்டுகளாய் நீதியில்லை! அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இட ஒதுக்கீட்டை தடுப்பது யார்?’ எனத் தொடர்ந்து போராடி வருகிறார்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்..’ எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 -ஆவது முறையாக சட்டம் நிறைவேற்றி, இன்றுடன் (ஆகஸ்ட் 22) 14 ஆண்டுகள் முடிவடைகிறது.

‘அம்பி.. நீ படிச்சா கலெக்டர் ஆகலாம்.. ஆனா அர்ச்சகர் ஆக முடியாது’ என கருவறை தீண்டாமை குறித்து, நாளை (23-ஆம் தேதி) முதல் ட்விட்டர் பரப்புரையைத் தொடங்கவிருக்கின்றனர். தங்களின்  போராட்ட பின்னணி குறித்து, அம்மாணவர்களே விவரிக்கின்றனர்.

இந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையில், 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் ஆகியும், எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை. இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்துச் சமயங்களும் போதித்தாலும், குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

28-2-2007, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் வெளியானதும், திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல், மதுரை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோவில்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு, 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில்களில், 50-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு கால  அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.

 

must be touched God and worshiped!


கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு, இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படிச் செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும்,  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே, 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்களது நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோவில்கள் உள்ளன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –இல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு, 2015-ஆம் ஆண்டு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனக் குறிப்பிட்டு, கோவில்களில் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை. அதனால், பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. 

இரண்டாண்டுகளுக்கு முன்பு, மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு.மாரிச்சாமி என்பவருக்கு, மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு,  தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு, மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளன.

 

must be touched God and worshiped!

 

இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி- தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி, ஒவ்வொரு சாதிக்கும் தனிச்சுடுகாடு அமைத்துக் கொடுப்பதுபோல, தனியாக உள்ள சிறு கோவில்களில், குறிப்பிட்ட பிரிவினர் அல்லாத மற்ற சாதி மாணவர்களைப் பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாகச் செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதலும் கிடையாது.
 

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் ‘தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம்..’ என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை, அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.


பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட, மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில், அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 200-க்கும் மேலான மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை  பணிநியமனம் வழங்க வேண்டும். 

 

பணிநியமன நிகழ்வு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்துச் சாதி மாணவர்களுக்கான சைவ - வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான, குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.  

 

http://onelink.to/nknapp


எனவே, கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சங்கங்களும், அனைத்து முற்போக்கு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில்  அரசு கட்டுப்பாட்டில் 38,000 கோவில்கள் உள்ளன. அதில்  தகுதி, திறமை  உள்ள அனைத்துச் சாதியினரையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். சைவ-வைணவ வழிபாட்டு முறையில், முறையாக பயிற்சி பெற, மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களை, அரசு மீண்டும்  திறக்க வேண்டும் என, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


அர்ச்சக மாணவர்களின் 14 ஆண்டு கால போராட்டம் எப்போது முடிவுக்கு வருமோ?

 

 

சார்ந்த செய்திகள்