நம் நாட்டின் பாரத பிரதமர் எய்ம்ஸ் அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரமாகிறது. இன்னும் அதற்கடுத்தகட்ட பணிகளுக்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் நாம் ஒருவரை நினைவுகொள்ள வேண்டும்.
ஜூன் 2018ல், ஒரு சிலை செய்பவர் 1,350 கிலோ மீட்டர் நடந்தே சென்றார், அதாவது ஒடிஷா முதல் டெல்லி வரை. செல்லும் வழியில் அவருக்கு உடல்நலம் குன்றியது இதனால் ஆக்ரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறிவந்த அவர் மீண்டும் என் பயணத்தை தொடர்வேன். நான் கண்டிப்பாக பிரதமரை பார்த்தே தீருவேன் என உறுதி பூண்டார்.
இவ்வாறெல்லாம் அவரை செய்ய தூண்டியது மூன்று வருடங்களுக்கு முந்தைய மோடியின் அறிவிப்பு. நம் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்தது போலவே மூன்று வருடங்களுக்கு முன்பு (2015) மோடி ஒடிஷா சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ராவுர்கேலா சென்ற பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, பாம்பன் பாலம் ஆகிய திட்டங்களை அறிவித்ததுபோலவே, அங்கு இருக்கும் இஸ்பாட் அரசு பொது மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனையாக (super speciality) மாற்றப்படும் என்றும், ப்ராமணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும் என்றும் வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
இதை கண்டிக்கும் விதமாகதான் அந்த மனிதர் 1,350 நடந்து சென்று பிரதமரை சந்திக்க முயற்சித்தார். அவரின் பெயர் முக்தி கந்த பிஸ்வால். தங்கள் ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவ வசதி இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தினமும் மக்கள் கொத்து, கொத்தாக இறப்பதாகவும், அதை தடுக்க முயற்சிகள் எடுக்கவேண்டும் என்றுதான் அவர் தனது போராட்டை தொடங்கினார். ஒடிஷாவில் முக்தி கந்த பிஸ்வால் புறப்பட்டதற்கே அரசு வெட்கப்பட வேண்டும். அவர் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்டவைகள் நடத்தியும், கடைசிவரை அவரை மோடி சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் அவர் பசிக்கொடுமையாலும், யாருடைய ஆதரவு இல்லாததாலும் மீண்டும் அவரது ஊருக்கே சென்றுவிட்டார்.