தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அண்மையில் வெளியிட்ட தரவுகள் மூலம், பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியைத் தழுவி இருப்பதை மேலும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அதிரடி நடவடிக்கைகளுள் பெரிய அளவில் பேசப்பட்டது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் அதுவரை புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இத்தகைய அதிரிபுதிரியான நடவடிக்கைக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது, பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் கள்ளப்பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அதை முற்றாக அழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது மோடி கூறினார்.
இரண்டாவது, தீவிரவாதிகளின் கைகளுக்கு பணம் செல்வதை தடுக்கவும் பணமதிப்பிழப்பு உதவும். மூன்றாவது முக்கிய காரணம், இனி யாரும் இந்த நாட்டில் போலியாக 500, 1000 ரூபாய் தாள்களை அச்சிட முடியாது. அத்துடன், கருப்புப்பணத்தை முற்றாக ஒழித்து விட முடியும், ஊழல் ஒழிந்து விடும் என்றும் சொல்லி இருந்தார்.
சிலர், 2000 ரூபாய் தாளில் ஜிபிஎஸ் உபகரணம் பொருத்தப்பட்டு உள்ளதால், பூமிக்கடியில் 2000 அடி ஆழத்தில் புதைத்து வைத்தாலும் கண்டுபிடித்து விட முடியும் என சரம் சரமாக பூ சுற்றினர். சில நாள்களுக்குள்ளேயே சேகர் ரெட்டியின் வீட்டியில் இருந்து 30 கோடி ரூபாய்க்கு மேல் புதிய 2000 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இத்தனைக்கும் அப்போது புதிய 2000 ரூபாய் தாள்கள் பெறுவதில் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பணமதிப்பிழப்பு என்பது ஒரு தற்கொலை முடிவுக்குச் சமமானது என்றும், ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத்தாக்குதல் என்றெல்லாம் இன்று வரை விமர்சனங்கள் அடங்கவே இல்லை.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரங்கராஜன், ரகுராம்ராஜன் ஆகியோர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். கட்சிக்குள்ளிருந்தே மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கலகக்குரல் எழுப்பினார். இது ஒருபுறம் இருக்க, அண்மையில் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட சில தகவல்கள் பணமதிப்பிழப்பின் தோல்வியை வேறு ஒரு கோணத்தில் அம்பலப்படுத்தும் விதமாக இருக்கிறது.
நாடு முழுவதும், கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 28.10 கோடி ரூபாய் போலி ரூபாய்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறது என்சிஆர்பி. இது, அதற்கு முந்தைய 2016ம் ஆண்டைக் காட்டிலும், அதாவது பணமதிப்பிழப்பிற்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட 15.10 கோடி போலி ரூபாய்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரு மடங்கு தொகை அதிகம் என்கிறது. என்சிஆர்பி கடந்த அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வெளியிட்ட, 'இந்தியாவில் குற்றங்கள் - 2017' (பக்கம் 1261-1263) என்ற அறிக்கையில் கள்ளப்பணம் பறிமுதல் குறித்து சொல்லப்பட்டு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் 2.81 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ம் ஆண்டிலோ அந்த எண்ணிக்கை 3.55 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவெனில், தேசபக்தாள்கள் அதிகமாக இருப்பதாக காவி கும்பல் அலப்பறை செய்து வரும், குஜராத் மாநிலத்தில்தான் மிக அதிக அளவாக 9 கோடி ரூபாய் கள்ளப்பணம் பறிமுதல் ஆகியிருக்கிறது.
டெல்லியில் 6.7 கோடி, உத்தரபிரதேசத்தில் 2.8 கோடி, மேற்கு வங்கத்தில் 1.9 கோடி ரூபாய் வரை கள்ளப்பணம் பிடிபட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பிற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய ரூபாய்களை அச்சடித்து வந்த கள்ள அச்சகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பது குறைந்து போனதாகவும் மத்திய அரசு, ஊடகங்களுக்கு செய்திகளைச் சொல்லிய வண்ணம் இருக்கிறது.
ஆனால் அரசின் இந்த கூற்றை கருத்தில் கொள்வதில் நம்முடைய பொது தரவுகளில் இரண்டு சான்றுகள் இருக்கின்றன. முதலாவது, என்சிஆர்பி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அந்த அறிக்கை, நாடு முழுவதும் எவ்வளவு கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பேசுகிறது. இரண்டாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு. அதன் வருடாந்திர அறிக்கைகள் மூலம், வங்கி நடைமுறைகளுக்குள் பணம் நுழைந்த பிறகு, அவற்றிலிருந்து எவ்வளவு போலி ரூபாய் தாள்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்பதைக் கூறுகிறது.
அதாவது, கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்படுவது 2017க்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகிறது என்சிஆர்பி. அதேநேரம், வங்கி நடைமுறைகள் மூலம் கள்ளப்பணம் கண்டறியப்படுவது வெகுவாக குறைந்துவிட்டதாகச் சொல்கிறது ரிசர்வ் வங்கி தரவு. மத்திய வங்கியின் தரவுகள்படி, வங்கிகள் மூலம் 2017ம் நிதியாண்டில் 7.62 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளப்பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2018ம் நிதியாண்டில் இது 5.22 லட்சம் கள்ளப் பணத்தாள்களாகவும், 2019ம் நிதியாண்டில் 3.17 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளப்பணமாகவும் குறைந்து இருக்கிறது.
ரிசர்வ் வங்கி இன்னும்கூட நுட்பமான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கி நடவடிக்கைகள் மூலம் கள்ளப்பணம் கண்டறிவது குறைந்து போனதற்கு ஒரே காரணம், பழைய 500, 1000 ரூபாய் தாள்களை மதிப்பிழப்பு செய்ததுதான் என்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை போலி 2000 ரூபாய் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன? என்று பார்த்தோமானால், 2018ம் நிதியாண்டில் 7929 எண்ணிக்கையிலான தாள்களும், நடப்பு நிதியாண்டில் 21847 எண்ணிக்கையிலான கள்ளப்பணமும் பிடிபட்டுள்ளன. ஆனால் இவை, 2017ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் கண்டறியப்பட்ட போலி 1000 ரூபாய் தாள்களின் அளவை எட்டவில்லை.
பணமதிப்பிற்குப் பிறகும் கள்ளப்பணம் பிடிபடுவது அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி சொல்வதையும் நாம் பல வழிகளிலும் விளக்க முடியும். விமர்சகர்களோ, அதிகமாக காவல்துறை சோதனைகளாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பிறகு கள்ளப்பண நடமாட்டத்தை ஒழிப்பது என்பதை மத்திய அரசு சுய கவுரவப் பிரச்னையாக கருதுகிறது. அதனால்தான் கள்ளப்பணம் பிடிபடுவது அதிகரித்துள்ளது என்கிறார்கள்.
மேலும், போலி அல்லது கள்ளப்பண ஒழிப்பை, பணமதிப்பிழப்பு மூலம் சரிசெய்து விடமுடியாது என்கிறார்கள். உதாரணமாக 2017ம் ஆண்டில் 74498 போலி 2000 ரூபாய் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக என்சிஆர்பி கூறுகிறது. அதேபோல் வங்கிகள் மூலமாக நடப்பு நிதியாண்டில் 21847 போலி 2000 ரூபாய் தாள்கள் கண்டறியப்பட்டு உள்ளதும் சாதாரணமானது அல்ல. ரிசர்வ் வங்கி சொல்லும் இன்னொரு தரவு, ரொம்பவும் அச்சுறுத்தலானது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள். அதாவது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள போலி ரூபாய் தாள்கள் குறைந்தது ஒருமுறையாவது வணிகச்சுழற்சியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. போலி அல்லது கள்ளப்பணம் பற்றிய தகவல்களைப் பொருத்தமட்டில், மத்திய அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே முரண்பட்ட தகவல்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு ஆண்டு ஜூலையில் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில், இந்தியா - பங்களாதேசம் எல்லை வழியாக போலி இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டு வந்தது. அவை பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்து விடக்கூடிய குறைந்த தரத்திலானாவை. கம்ப்யூட்டர் மூலம் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு வரை, 2000, 500 ரூபாய் ஆகியவற்றில் உயர்தர கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு நேர்மாறான பதிலைச் சொல்லி இருக்கிறார், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல். அவர், பாகிஸ்தான் மூலமாக உயர்தர கள்ளப்பணம் இந்தியாவில் புழக்கத்தில் விடுவது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்கிறார். என்னென்ன காரணத்திற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி சொன்னாரோ, அதில் ஒன்றுகூட சாத்தியமாகவில்லை என்பதே நிதர்சனம்.