Skip to main content

மோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா?

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
modi

 

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் நேற்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் விவரம் குறித்து தெரிவித்துள்ளார்.
 

பிரதமர் மோடி மேற்கொள்ளும் வெளிநாடு பயணங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களில் தொடங்கி எதிர் கட்சி தலைவர்கள் வரை வெளிநாட்டு பயணங்களை விமர்சிக்கின்றனர். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினாய் விஸ்வம், மோடி பிரதமராக பதவியேற்று இதுவரை எத்தனை நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளார், அவருடன் எத்தனை எம்பிகள் சென்றுள்ளனர், எத்தனை ஒப்புதல்களில் கையெழுத்திட்டுள்ளார், அவரின் பயணத்திற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளனர் என்று மாநிலங்களவையில் எம்பி விகே சிங்கிடம் கேட்டிருந்தார்.
 

இதற்கு பதிலளித்த விகே சிங், மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்காக செலவாகிய மொத்த பணம் 2000 கோடி. அதில் ஏர் இந்தியா விமான சேவை மற்றும் அவருடைய பாதுகாப்பிற்காக செலவிடப்பட்டதும் அடங்கும். விமான பராமரிப்பிற்காக ரூபாய் 1,583.18 கோடியும், தனி விமானத்திற்காக ரூபாய் 429.28 கோடியும், பாதுகாப்பிற்காக ரூபாய் 9.12 கோடியும் இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மே மாதம் 2017 முதல் தற்போதுவரை மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு செலவுகள் இதில் வழங்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் வெளியான விவரத்தில், மே மாதம் 2014ல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தற்போதுவரை 42 வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜூன் 15ஆம் தேதி 2014 முதல் ஜூன்10 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு வரையிலான செலவுகளை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தில் 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். 2015-2016 ஆம் காலகட்டத்தில்தான் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2017-2018 ஆம் காலகட்டத்தில் 19 நாடுகளுக்கும், 2016-2017 காலகட்டத்தில் 18 நாடுகளுக்கும், 2014-2015 காலகட்டத்தில் மிகவும் சொற்பமாக 13 நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்று முதன் முதலில் ஜூன் மாதம் 2014ல் பூட்டானுக்கு சென்றார். 
 

2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து இதுவரை 23 நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷிண்டே அபே ஆகியோரை பலமுறை சந்தித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில்கூட அர்ஜெண்டினா தலைநகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, பிறகு தனியாக ஜப்பான் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோரை சந்தித்தார். அப்போது மோடி, இந்த மூன்று நாடுகளும் உலக அமைதியை நிலைநாட்டுவது பற்றி கலந்து பேசினோம் என்றார்.