தனது குடும்ப வறுமையிலும் கிராம மக்களின் ஆரோக்கியம் காக்க 5 ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தில் ஆயிரம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் சூப் வழங்கியுள்ளார் பள்ளி மாணவி ஒருவர். மாணவியின் இந்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் அபி என்ற மாணவி அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிப்பிலும் சுட்டி. கல்வித் தொடர்பான பல போட்டிகளில் வென்று பரிசுகளையும், விருதுகளையும் வென்றவர்.
கடந்த 5 ஆண்டுகளாக தனது பெற்றோர் வழங்கிய சில்லரை காசுகளை, தனது செலவு போக மீதியை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளார். 3000 ரூபாய் உண்டியலில் சேமித்து வைத்துள்ளதை தனது வீட்டில் உள்ளவர்களிடம் பெருமையாக அவ்வப்போது கூறிக்கொள்வார்.
இந்தநிலையில் கரோனா வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் வகையில் மூலிகை சூப் வழங்க வேண்டும் என தீர்மானித்தார். அதற்காக தான் சேமித்து வைத்த 3000 ரூபாய் பயன்படும் என நினைத்த அவர், இதனை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். 'அபி'யின் தாயாரும் சம்மதம் தெரிவித்துள்ளார். தனது தாயாரின் உதவியோடு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் சூப்பை தயாரித்து கிராமம் முழுக்க வழங்கினார்.
இதுகுறித்து மாணவி அபி கூறுகையில், என்னால் முடிந்த அளவு எனது கிராமத்தை காப்பாற்ற எனது சேமிப்பு பணத்தை பயன்படுத்தினேன். மனிதன் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவி செய்துள்ளேன் என்றார்.
மாணவி அபியின் தந்தை அண்மையில் ஒரு விபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தகப்பனாரை இழந்து தனது குடும்பம் வறுமையில் வாடினாலும், மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்றே தான் நினைத்தாகவும், தான் படித்து ஐஏஎஸ் அதிகாரியாக வந்து சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்வேன் என்றார் நம்பிக்கையுடன் அபி.
குடும்ப வறுமையிலும் தனது கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இந்த இளம் வயதில் செயல்படும் குழந்தையின் அரிய செயலைக் கண்டு கிராம மக்களும் பொது நல ஆர்வலர்களும் போற்றுகின்றனர்.