கரோனா பாதிப்பால் சுங்கடி நகரமான சின்னாளபட்டியில் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 10 கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 5 கோடி மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த நகரமாகும் தமிழகத்தில் அதிக அளவில் கைத்தறி மற்றும் சுங்குடி சேலைகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாகச் சின்னாளபட்டியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் தமிழகத்தில் அனைத்து முன்னணி ஜவுளி கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.
கோடைக்காலத்தில் தான் சேலைகளுக்கு கஞ்சி ஏற்றப்பட்டு வெயிலில் உலர வைக்கப்பட்டு உற்பத்தி செய்வது வழக்கம். தற்போது கோடைக் காலம் தொடங்கிய நிலையில் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாகச் சின்னாளபட்டியில் ஊரடங்கு பின்பற்றப்பட்டுள்ளன. நெசவாளர்கள் நெய்யும் தறி கூடங்களும் பூட்டியே கிடக்கின்றன.
இதைத் தவிர வீடுகளில் தனித்தனியாகத் தட்டிப்போட்டு நெய்யும் நெசவாளர்களுக்குப் பாவு சாயம் ஏற்றிய கலர் நூல், நாடா மற்றும் தறி உபகரணங்கள் கிடைக்காததால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பிரின்டிங் பிரஸ் சேலைகள் பிரிண்டிங் செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. ஜவுளி கடைகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சேலைகளைப் பந்தல் போட முடியாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் ரூபாய் 10 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு ரூபாய் 5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.
இது சம்பந்தமாக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் ஆறுமுகம் கூறுகையில், ஒரு மாத காலமாக நெசவாளர்கள் யாரும் தரியில் உட்கார்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 800 வரை சம்பாதித்து வந்த நாங்கள் இன்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்.
சௌராஷ்டிரா காலனி சேர்ந்த சுரேஷ் கூறுகையில், சின்னாளபட்டியில் உள்ள பிரிண்டிங் பட்டறைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 சேலைகள் வரை பிரிண்டிங் செய்து கஞ்சி போட்டு தேய்ப்பதற்கு அனுப்பி வைப்போம். ஒரு மாதம் காலமாகச் சின்னாளபட்டி வட்டாரத்தில் எந்த ஒரு பிரிண்டிங் பட்டறையும் செயல்படவில்லை என்கிறார்.
இது பற்றி வள்ளுவர் காலனி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், சின்னாளபட்டியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். சமூக விலகலோடு செய்யும் இந்தத் தொழிலுக்கு முறையாக நூல் மற்றும் பாவு கிடைக்காததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில் இருந்துதான் தறி உபகரணங்கள் மற்றும் நூல்கள் வரும் அதைக் கொண்டு வருவதற்கு நல வாரியம் மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்கிறார்.
சின்னாளப்பட்டி வட்டாரச் சுங்கடி சேலை உற்பத்தியாளர்கள் வட்டார ஜவுளி மற்றும் சுங்க உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ஒருமாத காலமாக சுங்குடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு ரூபாய் 5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கின்றன.
இது சம்பந்தமாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, கரோனா பாதிப்பால் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவுத் தொழிலும், சுங்கடி தொழிலும் முடங்கிவிட்டது. கைத்தறி நெசவாளர்கள் சுங்கடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய மாநில அரசுகள் நலவாரியம் மூலம் ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் உதவி உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நெசவாளர்கள் தறியில் நூல் பூட்டி வெளி மாவட்டங்களில் இருந்து நூல் மற்றும் பாவு நாடா உள்ளிட்ட தறி உபகரணங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் வசதி செய்து மற்றும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்.