மோடியின் பொய்களுக்கு அளவே இல்லாமல் போயிற்று. உண்மையை மறைக்கும் அவருடைய பொய்களில் கர்நாடகா தேர்தல் முடிவுக்கு அவர் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு புதுவிதமானது. கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி என்பதைப் போலவும், அது நிகரில்லாத வெற்றி என்றும் தனிப்பெருங்கட்சியாக வளர்ச்சியடைய வாக்காளர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி என்றெல்லாம் மோடி தெரிவித்துள்ளார்.

இது முழுப்பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சி என்று அரசியல் பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள். பதிவான வாக்குகளில் 36.2 சதவீதத்தைதான் பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரசுக்கு 37.9 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதுபோக, மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 18.5 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்த்து 56.4 சதவீதம் வாக்குகளுடன் 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதை மறைத்து, பாஜகவுக்கு நிகரில்லாத வெற்றி என்று மோடி பொய்யை உண்மையாக்க முயற்சிக்கிறார்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற இடங்களில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. தோற்ற இடங்களில் மிகக்குறைவான வாக்குகளில் தோற்றிருக்கிறது. இதையும் மோடி மறைக்கப் பார்க்கிறார்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை மோடியுடன் சேர்ந்து மீடியாக்களும் மறைக்கப்பார்க்கின்றன. அதாவது, பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் 29 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறது. அதிலும் 12 தொகுதிகளில் தமிழ்நாட்டைப் போல நோட்டாவுக்கு கீழாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த கேவலமான உண்மையை மக்களிடம் மறைக்கப்பார்த்தால் இந்த வாட்ஸாப் காலத்தில் முடியுமா? நிச்சயமாக முடியாது. பா.ஜ.க. டெபாசிட் இழந்த தொகுதிகளும் வாக்குகளும் இங்கே தரப்பட்டுள்ளன.
Maddur 3,948, Melukote. 1,587, Magadi 4,379, Rama Nagaram 4,837, Sharvanabelagola 7,506
Nagamangala 1,781, Krishnarajapete 3,839, Holenarasipur. 1,781, Periyapatna 4047,
Krishnarajanagara 2,515, Mulbagal 4,906, Srinivaspur 1,544, Chintamani 1,961,
Sidlaghatta 3,596, Begaballi 4,140, Madhugiri 2, 333, Sirs 6,469, Chikkaballapur 5,576
Kanakapura 6,213, Malavalli. 8,372, Shirirangapatna 11,326, Arsikere 25,258, Arkalgud 18,982,
Pulikesinagar 9,479, Devanahalli 9,799, Kolar 12,230, Gauribindanur 35,579, Pavagada 9,668
Kortagere 11,102.
உண்மை இப்படி இருக்க, கர்நாடகாவில் மக்கள் இரண்டு கட்சிகளையும் நிராகரித்துவிட்டதாகவும், பாஜகதான் வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்திருப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களில் பாஜக கையாண்ட தந்திரங்களை மறந்துவிட்டு, காங்கிரஸை போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறது. பாஜக எதிர்பாராத வகையில் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததை அந்தக் கட்சியால் யூகிக்கக்கூட முடியாமல் இருந்திருக்கிறது. இதுதான் பாஜகவின் புலம்பலுக்கு காரணம். இப்போது காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்திற்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி, எம்எல்ஏக்களை விலைபேச பாஜக முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஆனால், குமாரசாமியை சந்தித்து பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சமில்லாமல் கேட்டிருக்கிறார் ஜவடேகர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், நிமிடத்துக்கு நிமிடம் பேச்சை மாற்றிப் பேசி, எப்படியாவது ஆளுநரைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது.
தனிப்பெருங்கட்சியாக வந்தால் மட்டுமே ஒருகட்சியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அமைக்க வேண்டும் என்று இல்லை. பெரும்பான்மையை உறுதிசெய்கிறவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதன்படி, கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா இப்போது அழைக்க வேண்டியது மஜத-காங்கிரஸ் கூட்டணியைத்தான் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.
குதிரை பேரத்தை ஊக்குவித்து, கர்நாடகா அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயன்றால் அடுத்த ஐந்து ஆண்டுகள் அங்கு நிலையற்ற ஆட்சிக்கு காரணமாகிவிடும்.