![ரக](http://image.nakkheeran.in/cdn/farfuture/gpZ2StfjeAVsEMsjyItx04L0QZgMjyYFdUAceO3lxO4/1599897587/sites/default/files/inline-images/fgh_43.jpg)
கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.
லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த பல்வேறு நபர்கள் இதற்கு திமுகதான் காரணம் என்றும், அவர்கள் தூண்டுதல் இதில் இருக்கிறது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இதில் உண்மை இருக்கிறதா, இல்லை இது வழக்கம் போல் எதிர்தரப்பு மீது செய்யப்படும் அரசியலா என்ற பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க ஆதரவாளர் டான் அசோக் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இந்தி தெரியாது போடா’ என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்களின் எதிர்ப்பு திமுக பக்கம் திரும்பியுள்ளது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லித் தரப்படவில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதற்கு நாம் ஒரு பதில் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. திமுககாரர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி இருக்கிறதா, இல்லை மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் இந்தி இருக்கிறதா அதற்காகத்தான் திமுக அரசு சமச்சீர் கல்வியை கொண்டுவந்தது. அதனை ஜெயலலிதா அரசு பல்வேறு தடங்களை ஏற்படுத்தியது. கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால் மாநில அரசுகளே அதற்கான முடிவுகளை எடுத்துக்கொள்ள போகிறார்கள். இது மத்தய அரசின் பாடத்திட்டத்தின் கொள்கை. அதற்கு பள்ளி நடத்துபவர்கள் என்ன செய்வார்கள். யார் அதனை மாற்ற வேண்டும். எனவே தனி மனிதர்கள் மீது பழி போட கூடாது. இதை நீ மாற்ற வேண்டும், பள்ளி ஓனர் இதை மாற்றுவானா, இந்த ஒரு அறிவு கூட இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்.
இந்தி சொல்லித்ததரும் பள்ளியை ஏன் நடத்தமாட்டோம் என்று திமுகவினர் ஏன் கூற மாட்டேன் என்கிறார்கள் என பாஜகவினர் கேட்கிறார்களே?
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு இந்தி தெரிந்திருந்தாலும் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற முழு உரிமை எனக்கு இருக்கின்றது. இது பாஜகவினருக்கே உள்ள மேம்போக்கான வாதம் என்ற அளவில்தான் இதனை பார்க்க வேண்டும்.
சிபிஎஸ்சி பள்ளிகளில் வசதியான மாணவர்கள் இந்தி கற்கிறார்கள். ஏழை மாணவர்கள் இந்தி படிக்க விரும்பினால் அவர்கள் எவ்வாறு படிப்பார்கள் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்களே?
பணக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் காலையில் நீச்சல் பயிற்சிக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்கள், யோகா வகுப்புக்கு அனுப்புகிறார்கள், பணம் வைத்துள்ளவர்கள் அதை தெண்டமே என்று வீணாக செலவு செய்வார்கள். வேண்டாம் என்றாலும் பிள்ளைகள் மீது அவர்கள் திணிக்க முற்படுவார்கள். ஆனால் ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியுமோ அதனை செய்ய வேண்டும். இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டை விட முன்னேறிவிட்டார்கள் என்று ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறீர்களா, அப்படி இருந்தால் கொடுங்கள். அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம். அண்ணா தெளிவாக கூறியிருக்கிறார், பெரிய வழி இருக்கும்போது எதற்காக சின்ன வழியை உருவாக்குகிறீர்கள் என்று, எனவே இந்தி என்பது தேவையில்லாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும்.