அதிமுக பொதுக்கூட்டங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அங்கு யாராவது ஒருவர் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பதை நம்மால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அசல் எம்ஜிஆரை போலவே வேஷம் போட்டு கட்சிக்காரர்களை ஆச்சரியப்படுத்துபவர் எம்ஜிஆர் வல்லரசு. அவரிடம், "உங்களைப் பார்த்தால் எம்ஜிஆர் வேஷம் போட்ட மாதிரி தெரியவில்லை, எம்ஜிஆர் நேரில் அமர்ந்திருப்பதைப் போல் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறீர்களே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களின் அரசியல் என்னவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்ற நம்முடைய தொடர் கேள்விக்கு, அவரின் அதிரடியான பதில் வருமாறு,
"நாங்கள் எல்லாம் எம்ஜிஆரின் தீவிர விஸ்வாசிகள். அப்படித்தான் எப்போதும் இருந்துவருகிறோம். அவரை பார்த்து அரசியலுக்கு நாங்கள் வந்தோம். எனவே அவரின் சாயல் எங்கள் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் யாரும் இவர்கள் இருவரையும் ஆதரிக்கவில்லை. தீபா அவர்களை ஆதரித்தோம். தமிழ்நாடு முழுவதும் அவரை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்தோம். எம்ஜிஆர் வல்லரசு என்றால் அனைவருக்கும் தெரியும். நான் உண்மையை மட்டும்தான் கூறுகிறேன். பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உடையவர், பிஜேபியை ஆதரிப்பவர். கை முழுவதும் தாயத்து கட்டுபவர். இதுதான் திராவிட சித்தாந்தமா? எம்.ஜி.ஆர். கோயிலுக்குப் போயிருக்கிறார். தன் மனைவிக்காகப் போயுள்ளார்.
இவர்களைப் போல் அவர் எப்போதும் இல்லை. சசிகலா அவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறார். இவர்கள் இருவரும் பால் போட்டால் நீங்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நீங்கள் தொடர்ந்து அவுட்டானால் என்ன செய்ய முடியும். மிக நீண்ட மவுனத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சட்டப் போராட்டத்தில் அவர்கள் எப்போது வெற்றிபெறுவார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். மன்றங்கள் என்ற ஒன்று முன்பொரு காலத்தில் மிக வலிமையாக இருந்தது. அதை அம்மா அவர்கள் டிஸ்மேன்டில் செய்தார்கள். பார்ட் பார்ட்டாகப் பிரித்தார்கள். அதை தற்போது சரி செய்துவருகிறோம். மன்றங்களைச் சேர்ந்தவர்களை அண்ணன் கே.சி.பி., ஓம்பொடியார், நான் உள்ளிட்டவர்கள் இணைத்துவருகிறோம். கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் அண்ணன் ஓம்பொடியாருக்கு நடந்த நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள். அவரை அடித்தது என்பது கடைக்கோடி தொண்டனை, எம்ஜிஆரை அடித்ததற்கு சமம். கடைக்கோடி தொண்டனும் அதிமுக தலைவராகலாம் என்று முதலில் கூறியது யார், எடப்பாடி பழனிசாமி. கொடி பிடிக்கும் தொண்டனும் கோட்டைக்குப் போகலாம் என்று கூறியவர் அவர்தானே. இன்றைக்கு கோட்டைக்கு அல்ல, கட்சி அலுவலகத்துக்குச் செல்லக் கூட அவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
கேட்டால் உறுப்பினர் அட்டை வைத்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். உங்களிடம் உறுப்பினர் கார்டை வாங்கினால், அவர்கள் உங்களிடம் சரண்டர் என்று அர்த்தம் வந்துவிடாதா? உங்களைத்தான் எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறார்களே! உங்களின் தலைமையைத்தான் அவர்கள் ஏற்க மறுக்கிறார்களே! உங்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் உங்களை சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்களே! இதை எதிர்த்து இதுவரை யாராவது பேசியிருக்கிறார்களா? இவர்களால் எதையும் செய்ய முடியாது, எதிர்த்து யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்களைப் பார்த்து நாய்கள் என்று கூறுகிறார்கள், கடைக்கோடி தொண்டனைப் பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் நாய் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இன்றைக்கு டாஸ் வைத்து நிர்வாகிகளைத் தூக்குகிறார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சங்கிகளாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பொருத்திருந்து பாருங்கள், இவர்கள் எல்லாம் எப்போதும் அதிமுகவை கரை சேர்க்கப்போவதில்லை, வெறும் வாய்ச்சவடால் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. தொண்டன் அவர்களைப் பார்த்துக்கொள்வான்" என்றார் கொதிப்புடன்.