கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு வார்த்தை "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த பல்வேறு நபர்கள் இதற்கு திமுக தான் காரணம் என்றும், அவர்கள் தூண்டுதல் இதில் இருக்கிறது போன்ற கருத்துக்களை தெரிவித்தனர். இதில் உண்மை இருக்கிறதா, இல்லை இது வழக்கம் போல் எதிர்தரப்பு மீது செய்யப்படும் அரசியலா? என்ற பல்வேறு கேள்விகளை பாஜகவை சேர்ந்த கே.டி ராகவனிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி தெரியாது போடா என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவுக்கு எதிர் நிலையில் இருப்பவர்களின் எண்ண ஒட்டம் இதில் பிரதிபலிப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
பாஜகவின் பொதுச்செயலாளராக உள்ள எனக்கும் இந்தி தெரியாது. இந்தி தெரியாது போடா என்றால் அது பாஜகவுக்கு எதிரான மனநிலை என்று எப்படி சொல்ல முடியும். என்னை பொறுத்தவரையில் எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் அதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருந்தது. தற்போது மொழிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனக்கும் அப்போது அத்தகைய வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் பல மொழிகளை கற்றுக்கொண்டிருப்பேன். வாய்ப்புகள் அப்போது குறைவாக இருந்ததால் என்னால் பல மொழிகளை கற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அரசு பள்ளியில்தான் படித்தேன். எனக்கு அந்த வாய்ப்பு சுத்தமாக கிடைக்கவில்லை. வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. மொழியில் அரசியல் செய்யக்கூடாது என்பது எங்களின் எண்ணம். ஆனால் எதிர்ப்புறத்தில் இருப்பவர்கள் அதனை வைத்துத்தான் அரசியல் செய்துக்கொண்டுள்ளார்கள். அது தவறு என்பதுதான் எங்களுடைய தாழ்மையான கருத்து.
அதையும் தாண்டி இந்தி தெரியாது என்று சொல்கிற அனைவரும் அருமையாக இந்தி பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். இந்தி கற்பிக்க மாட்டேன் போடா என்றுதான் அவர்கள் சொல்ல வேண்டும். திராவிட முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த 45 நபர்கள் சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அங்கு இந்தி சொல்லித் தரப்படுகின்றது. எல்லாரும் நீங்கள் சொல்வது மாதிரி நடத்துக்கிறார்கள் தான், ஆனால் கனிமொழியின் புகைப்படத்தை பார்த்ததனால் தான் இதை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அவர்கள் பள்ளி நடத்துவது பற்றி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுகின்றது. அவர்களின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம். அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறதே, அது ஏன் என்பதே என்னுடைய கேள்வி. அவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இந்தியை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் அவர்கள், எப்படி அருமையாக இந்தி பேசுகிறார்கள். இதற்கு அவர்களால் பதில் கூற முடியுமா? நிச்சயம் கூற மாட்டார்கள்.
இருமொழி கொள்கைதான் எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அதிமுக அரசு கூறியுள்ள நிலையில் எதற்காக திரும்ப திரும்ப திமுகவையே நீங்கள் டார்கெட் செய்கிறீர்கள்?
உங்களுக்கு அதிமுகவையும் சேர்ந்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள், நிச்சயமாக அண்ணா திமுகவையும் சேர்த்தே சொல்கிறேன். பனியன் போட்டவர்கள் யாரும் அண்ணா திமுககாரர்களாக நான் பார்க்கவில்லை, ஏனெனில் கனிமொழியுடன் தான் அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். எனவே அதைப்பிரித்துதான் பார்க்க வேண்டும். எங்களுக்கு ஒன்றும் பயம் கிடையாது. அதிமுக இதனை செய்தாலும் அதைப்பற்றி பேசுவோம், கருத்து சொல்லுவோம். அச்ச உணர்வு எங்களுக்கு கிடையாது, இல்லை.
நீங்கள் கனிமொழியை மட்டும் பேசுகிறீர்கள், நிறைய நபர்கள் அந்த பனியனை போட்டுள்ளார்கள். நடிகை, நடிகைகள் அதிக அளவில் போட்டுள்ளார்கள். இதை பற்றி பேசாமல் தொடர்ந்து திமுகவை பற்றி பேசுவது எதற்காக?
எனக்கு தெரிந்த பிரபலத்தை சொல்கிறேன், நீங்கள் ஏன் திமுகவை டார்க்கெட் செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள், எனெனில் திமுகதான் நாங்கள் என்னவோ இந்தியை கட்டாயப்படுத்தி திணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அதற்காக அவர்களின் நிஜ முகத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இல்லை என்றால் தேவையில்லாமல் நாங்கள் ஏன் திமுகவை பற்றி பேசப் போகிறோம். கனிமொழிதான் விமான நிலையத்தில் காவலர் ஒருவர் இந்தியரா என்று கேட்டதாக புகார் கூறியிருந்தார். அந்த காவலர் என்ன பாஜகவை சேர்ந்தவரா என்ன, அவர் அப்படி சொன்னதாகவே இருக்கட்டும், ஆனால் அதற்கான ஆதாரத்தை இதுவரைக்கும் அவர்கள் கொடுத்ததாகத் தெரியவில்லை. காவலர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். இதற்கெல்லாம் அவர்களிடம் பதில் இருக்கிறதா என்றால் நிச்சயம் அமைதியாகத்தான் இருப்பார்கள்.