இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் பகுதியில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் (ஈழவர், புலையர், தீயர்) நடமாடுவதற்குத் தடை இருந்தது. இதனை எதிர்த்து வெகுண்டெழுந்த போராட்டம் தான் வைக்கம் போராட்டம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் இந்தச் செயலை எதிர்த்து 1924 ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் கட்சி போராட்டக் களத்திற்கு வந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்கள் போராட்டத்திற்கு வந்தால் அவர்களுக்கு கிடைத்து வரும் சில சலுகைகளும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் யாரும் போராட்டத்திற்கு வரவில்லை. ஆனால் இதையெல்லாம் பெரிய தடையாகக் கருதாமல் டி.கே மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், ஏ.கே.பிள்ளை, உள்ளிட்ட சில முன்னணித் தலைவர்கள் போராட்டம் நடத்த முன்வந்து 1924 ஆம் ஆண்டு மார்ச் முதல் நாளில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் காலதாமதம் ஏற்பட்டு போராட்டம் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு முன்பே வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது திருவாங்கூர் சமஸ்தானம்.
இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல், தடையை மீறி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டக்காரர்கள் நடந்தார்கள். அதில் புலையர் சமூகத்தைச் சேர்ந்த குஞ்ஞப்பி, ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த பாகுலேயன், நாயர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தப் பணிக்கர் அகிய மூன்று பேரையும் காவல்துறை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைத்தது. இதனால் அடுத்து வரும் நாட்களில் இது குறித்த செய்திகள் வெளிவரவே வைக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டம் பற்றியெரிய ஆரம்பித்தது. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. டி.கே. மாதவன், கேசவ மேனன் காவல்துறையின் தடுப்புகளை மீறியதால் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தின் வீரியம் குறையாதவாறு நாராயண குரு வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு போராட்டக்காரர்கள் தங்குவதற்காகத் தனது பேளூர் மடத்தை வழங்கினார்.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த திருவாங்கூர் சமஸ்தானம் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. தலைவர்கள் இல்லாததால் போராட்டக்களம் திக்குமுக்காடவே கே.டி. மாதவன் வைக்கம் போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்று அப்போதைய தமிழக காங்கிரஸ் காரிய கமிட்டியின் தலைவராக இருந்த பெரியாருக்கும், ராஜாஜிக்கும் கடிதம் எழுதுகிறார். வெளி ஆட்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறி ராஜாஜி போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்க, தீண்டாமையின் கொடுமையை உடைக்க பெரியார் வைக்கம் விரைந்தார். பெரியாரின் அனல் கக்கும் பேச்சுக்களால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து மக்கள் ஆதரவு திரட்டப்பட்டது. இதனால் பெரியாரின் பேச்சுக்கள் அமைதியைக் குலைக்கும் எனக் கருதுவதால் கோட்டயம் மாவட்டத்தில் பெரியார் நுழைவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை கொல்லம் மாவட்டம் வரை நீட்டிக்கப்பட்டது. இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாத பெரியார் மே மாதம் கைது செய்யப்பட்டு ஒரு மாத கடுங்காவல் தண்டனைக்குப் பிறகு ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே பெரியாரின் மனைவி நாகம்மையாரும் அவரது சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தில் பல முறை கலந்துகொண்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த பெரியார் முன்பைவிட மிகவும் தீவிரமாகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் இன்னும் பெரியார் மாறவில்லை என்றும், மாஜிஸ்த்ரேட்டின் உத்தரவை மீறிவிட்டார் என்றும் கூறி ஜூலை மாதம் 18 தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு 4 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பெரியாருக்கு கையில் விலங்கிட்டு, கடுமையாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கிடையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் உயிரிழந்தார். ஆட்சிப் பொறுப்பை ராணி எற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரியார் விடுதலை செய்யப்பட்டார். பிறகு நெடுங்கனா, நாகர்கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த பெரியார் ஈரோட்டிற்குச் சென்றபோது அங்கு வைத்து தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இருப்பினும் வைக்கத்தில் போராட்டங்கள் தொடர்ந்தன.
போராட்டம் தொடங்கி ஓர் ஆண்டை நிறைவு செய்யவிருந்த நிலையில் 1925 ஆம் ஆண்டும் மார்ச் 9 ஆம் தேதி வைக்கம் வந்த காந்தி திருவிதாங்கூர் ராணி, நாராயண குரு உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியிருக்கிறார். அதன்பிறகு ஜூன் மாதம் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளில் கிழக்கு தெருவைத் தவிர மற்ற மூன்று சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சந்திப்பின் போது, சாலைகளில் அனுமதித்தால் பின் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் என்ன செய்வது எனும் கேள்வி எழுந்துள்ளது. பெரியாரும் நம் லட்சியம் கோயிலுக்குள் செல்வதே, தெருவில் அனுமதித்து என்ன பயன் என்று தெரிவித்துள்ளார்.
சமூகநீதி வரலாற்றில் முக்கிய போராட்டமான வைக்கம் போராட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்து பெரியாருடன் எஸ். ராமநாதன், சந்தானம், சீனிவாச ஐயங்கார், தங்கப் பெருமாள் பிள்ளை, வரதராஜூலு நாயுடு உள்ளிட்டவர்களும் முக்கிய பங்காற்றினர். இதில் வைக்கம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் மொத்தம் 141 நாட்கள் அங்கிருந்தார். 141 நாட்களில் அவர் இரண்டு முறை சிறை சென்று, 74 நாட்களை சிறையிலேயே கழித்தார். ஆனாலும், சமூக நீதியை நிலைநாட்டி ஏற்றத்தாழ்வை உடைத்தெறிய அவரின் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்றார்.