சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..
“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.
இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?
இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?
ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா?
பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.