ட்விட்டரில் ஒருவர், 'சாதி என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்கு என்னவென்று எடுத்துச் செல்வீர்கள்? கல்வி நிலையங்களில் சாதி விபரங்கள் கொடுப்பது தொடருமா?' என்று கேட்க, அதற்கு பதிலளித்த கமல், 'நான் எனது இரு மகள்களுக்கும் பள்ளியில் சாதியைக் குறிப்பிடவில்லை. அடுத்த தலைமுறைக்கு சாதியைக் கொண்டு செல்லும் ஒரே விஷயம் இதுதான். அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும்' என்று பதிலளித்தார். இந்த பதில் பல்வேறு தளத்திலும் விவாதத்தையும் எதிர்ப்பையும் உருவாகியுள்ளது. சமூக செயல்பாட்டாளரும் சாதிய ஆணவப் படுகொலைகளை எதிர்த்து செயல்பட்டு வருபவருமான எவிடன்ஸ் கதிரிடம் இது குறித்து பேசினோம்.
"இதை சிறுபிள்ளைத்தனமாக நான் பார்க்கிறேன். சாதிச் சான்றிதழ் என்பது ஒரு 50 வருட காலமாகத்தான் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், சாதி என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. சாதிச் சான்றிதழ் ஒழிந்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பது பாமரத்தனமான கருத்து. சாதிச் சான்றிதழ் என்பதை இடஒதுக்கீட்டுக்காகத்தான் வைத்திருக்கின்றனர், துவேஷத்திற்காக அல்ல. இந்த நாட்டில் சாதி என்பது உளவியல் நோய், அது ஒரு நிறுவனம் கிடையாது. ஆகவே மக்கள் மத்தியில் மனமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.
ஊரையும் சேரியையும் ஒன்றாக்க வேண்டி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடக்கக்கூடிய தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதன்மூலமாகத்தான் சாதியை ஒழிக்க முடியுமே தவிர சாதிச் சான்றிதழை ஒழிப்பதன் மூலமல்ல. சாதியைக் கடைபிடிக்கின்றவர்கள் மத்தியில் இது ஒரு தவறான விஷயம் என்பதை உணரவைக்க வேண்டும். இது ஒரு லாங் டர்ம் பிராசஸ். அதைவிட்டுவிட்டு சாதிச் சான்றிதழை ஒழித்தால் மட்டும் போதும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். அவர் ஒரு மிகவும் மேம்போக்கான தலைவர்.
இப்படியெல்லாம் பேசுகிற கமல்ஹாசன்தான் 'தேவர் மகன்' படம் எடுத்திருக்கிறார், 'விருமாண்டி' படம் எடுத்திருக்கிறார். இரண்டுமே சாதிய படம்தானே? இதையேதான் அமீரையும் கேட்கிறேன். 'பருத்திவீரன்' படம் அவர்தானே எடுத்தார்? இவர்கள் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்கிறார்கள். கமல்ஹாசனுக்குள் ஒரு அமீர் இருக்கிறார். அமீருக்குள் ஒரு கமல்ஹாசன் இருக்கிறார். இவர்கள் இரண்டுபேரையும் மாற்ற முடியாது. இது ஒரு மேம்போக்கான மற்றும் அரைவேக்காடான பதிவு.
சமூக நீதி என்பது மிகப்பெரிய பிராசஸ், அதற்காக நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டி இருக்கிறது, குரல் கொடுக்க வேண்டி இருக்கிறது. சாதிச் சான்றிதழைக் கிழித்து எறிவதனால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைத்துவிடாது. தமிழ் சமூகத்தையும், இந்திய சமூகத்தையும் கடுமையாகப் பிடித்திருக்கும் சாதி நோயை ஒழிக்க வேண்டுமென்றால் தலித் மக்களுக்கு அதிகமான உரிமைகளைக் கொடுக்க வேண்டும், தலித்தல்லாத மக்களை மனமாற்றம் செய்யவேண்டும். இதுபோன்று பல பிரச்சனைகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு சாதிச் சான்றிதழை குறை சொல்வதில் அரசியல் தளத்திற்கு வரும் கமலஹாசனின் சிறுபிள்ளைத்தனம்தான் தெரிகிறது.