Skip to main content

பெரியார் பரிந்துரைத்த கலைஞர் சிலை... எம்.ஜி.ஆர். இறப்பில் உடைந்த கதை...

Published on 03/06/2019 | Edited on 01/09/2021
kalaignar statue


உயிரோடிருக்கும் ஒருவருக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே சிலை அமைக்கப்பட்டது என்ற வரிசையின் கடைசி மனிதன் கலைஞர்தான். அவருக்கு பின் அப்படி யாருக்கும் அமைக்கப்படவில்லை அப்படியான பெருமைக்கு சொந்தக்காரர் கலைஞர். 
 

கலைஞருக்கு சிலை, அவர் உயிரோடு இருக்கும்போதே அது பரிந்துரைக்கப்பட்டது, அதுவும் இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என அனைவரும் இருக்கும்போதே. 1968ம் ஆண்டு பெரியார் கலைஞருக்கு சிலை அமைக்க விரும்பினார். மேடையிலேயே அதை அறிவிக்கவும் செய்தார். அப்போது கலைஞர் அய்யா, உங்களுக்கே சிலை இல்லாதபோது எனக்கு எதற்கு. திமுக சார்பில் உங்களுக்கு சிலை அமைத்தபிறகு வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என கலைஞர் கூறிவிட்டார். அதன்பின் திமுக சார்பில் 1971ம் ஆண்டு திமுக சார்பில் அண்ணா சாலையிலுள்ள சிம்ப்சன் கட்டிடத்திற்கு முன் பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டது. 
 

பெரியார் மறைந்தபிறகு, அன்னை மணியம்மை தந்தை பெரியாருக்கும் சிலை அமைக்கப்பட்டுவிட்டது. இனியும் கலைஞர் காரணம் கூற இயலாது எனக்கூறி மீண்டும் அதை பரிந்துரைத்தார்கள். அதன்படி, 1975ம் ஆண்டு ஜெனரல் பீட்டர்ஸ் சாலை நுழைவில் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை தவத்திரு.குன்றக்குடி அடிகளார் திறந்துவைத்தார். மூன்று விரலை நீட்டியபடி (சூப்பர் என்ற சைகை போல்) இந்த சிலை இருக்கும். இது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு  அண்ணா,  திமுக என்பதை குறிக்கும் என்று கூறுவர்.

 

kalaignar statue


 

1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது சிலர் கலைஞரின் சிலையை உடைத்தனர். அப்போது முரசொலியில் கலைஞர் இவ்வாறு எழுதியிருந்தார்.  ‘உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும், அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை - நெஞ்சிலே தான் குத்துகிறான் அதனால் நிம்மதி எனக்கு! வாழ்க! வாழ்க!’.


மீண்டும் அதை நிறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை அது அப்படியே அமைந்தால் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்ற வரிசையில் சிலைகள் அமையும். திராவிட கட்சிகளின் வரலாற்றை விளக்க இவைகளை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்காது.