‘தொடர்ந்து 10 வருடங்கள் அதிமுக நடத்திய ஆட்சியில் அனைத்துத் துறையிலும் ஊழல்.. முதலமைச்சர் பதவிக்காக மோதல்... இரண்டு தடவை அதிமுகவை ஆட்சியில் அமரவைத்து நாம் கண்ட பலனென்ன? வாழ்க்கைத்தரம் உயரவில்லையே?’ என்ற எண்ண ஓட்டத்துடன் மக்கள் இருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் வாக்குகளைப் பிரிப்பவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள், ரஜினி, கமல், சீமான் வரிசையில் ஓவைசியும்.
ஓவைசிக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது தமிழகத்தில்?
கடந்த 2016 தேர்தலில், தமிழகத்தில் வாணியம்பாடியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். (அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன்) கட்சியின் வேட்பாளர் வக்கீல் அகமது-வால், 10117 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்துக்கு வரமுடிந்தது. ஓவைசி, ஹைதராபாத் எம்.பி.தான். ஆனாலும், அவரது மஜ்லீஸ் கட்சி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
மக்களவையில் ஓவைசி ‘குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் என்பது, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியாகும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமரியாதை செய்வதாகும். அதனால், இதனைக் கிழிக்கிறேன்.’ என்று ஆவேசமாகப் பேசி, அம்மசோதா நகலைக் கிழிக்க.. இந்தியாவே அவரைத் திரும்பிப் பார்த்தது. மதுரையிலும்கூட கூட்டம் நடத்தி, அவரைப் பேச வைத்து, ‘மாஸ்’ காட்டினார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், கிருஷ்ணகிரி, வேலூர், வாணியம்பாடி, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை. திருநெல்வேலி, ராமநாதபுரம் என, 25 லிருந்து 30 தொகுதிகள் வரை போட்டியிட்டு, தங்களின் பலத்தைக் காட்டுவதற்கு ஓவைசி ஆயத்தமாகி வருகிறார் எனச் சொல்கிறார்கள், மஜ்லீஸ் கட்சியினர். இங்கே இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பல இருந்தாலும், ‘நாங்கதான் டாப்’ எனத் தனித்தன்மையை நிரூபிக்கத் துடிக்கிறாராம் ஓவைசி.
பீகார் சட்டமன்ற தேர்தலில், மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சியால், 5 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது. ஓவைசியின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம் என்று பேச்சு கிளம்ப, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி “இங்குள்ள சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிப்பதற்கு ஹைதராபாத்திலிருந்து ஒரு கட்சிக்கு பணம் கொடுத்து பாஜக அழைத்து வந்திருக்கிறது. பீகார் தேர்தலில் அந்தக் கட்சி வாக்குகளைப் பிரித்தது நிரூபணமாகிவிட்டது.” என்று ஓவைசி குறித்துப் பேச, அவரோ “என்னை விலை கொடுத்து வாங்கக்கூடியவர்கள் இங்கே யாரும் இல்லை..” என்று மறுத்திருக்கிறார்.
மக்கள் நீதிமய்யத்தால் கிறிஸ்தவ வாக்குகளைக் கவர முடியுமா?
“நான், கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சென்டரில் சேர்ந்து, பணத்துக்காக கிறிஸ்தவத்தை பரப்பும் வேலை செய்தேன். எந்த அளவுக்கு என்னுடைய சொந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேனோ, அதே அளவுக்கு கிறிஸ்தவத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். ரூ.120 ஸ்டைஃபண்ட் பணத்துக்காகத்தான் அங்கு சென்றேன். உண்மையில் நான் பகுத்தறிவுவாதி” எனச் சொன்ன கமல்ஹாசனின் வார்த்தைகளே, வாக்குகளைப் பிரிப்பதுதான் அவருடைய நோக்கம் என்று அவருக்கு எதிராகத் திருப்பிவிடப்படுகிறது. கிறிஸ்தவத்தைத் தழுவியது, அதற்கு ஆதரவாகப் பேசுவது என கமல்ஹாசனின் குடும்பத்தினரையும், இந்த மத அரசியலில் வலிய இழுக்கின்றனர்.
கமல்ஹாசனிடம் ‘உங்க கட்சிக்கு ஃபண்டிங் பண்ணுவது கிறிஸ்தவ மிஷனரிகள்தானே?’ என்று முகத்துக்கு நேராகவே கேள்வி கேட்டபோது, “எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.” என்று மறுத்ததும் நடந்திருக்கிறது.
அத்தனையும் நடிப்பா? சர்சைக்கு ஆளாகிவரும் சீமான்!
தமிழின மீட்சி கொள்கையில் தீவிரம் காட்டிவரும் இளைஞர்களைத் தன்னகத்தே கொண்ட, சீமானின் நாம் தமிழர் கட்சி, தேர்தலில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. ஆனாலும், எந்தக் கட்சியோ பலனடைவதற்காக இளைஞர்களின் வாக்குகளைப் பிரிக்கிறார் என, சீமானும் விமர்சிக்கப்படுகிறார். ‘அதிமுக ஆதரித்த போதும் விடுதலைப்புலிகள் ஆதரித்த போதும் அதனால் பலனடைந்தார் என்ற விமர்சனத்தை ஒரு தரப்பு தொடர்ந்து வைக்கிறது. பா.ஜ.க.வை எதிர்ப்பதுபோல் அவ்வப்போது காட்டிக்கொள்வதெல்லாம், சும்மா ஒரு பாவ்லாதான்! அத்தனையும் நடிப்புதான்! ஆடிட்டர்தான் இவரை இயக்குகிறார்’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வரிசைகட்டி நிற்கின்றன.
சீமானோ, “ஏன் தனித்துப் போட்டியிடுகிறோம் என்றால், என்னுடைய தத்துவத்துக்கும், கருத்தியலுக்கும் யாருடனும் கூட்டு சேர முடியாது. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்துக்கட்டுவதே எனது முதன்மையான கொள்கை. ஓட்டரசியல் ஒரு பொருட்டே அல்ல. உரிமை அரசியலே முக்கியம்” என்கிறார்.
ரஜினி மீதும் சந்தேகப் பார்வை!
‘ரஜினியுமா வாக்குகளைப் பிரிப்பதற்காக அரசியலுக்கு வருகிறார்?’ என்ற கேள்விக்கு “மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவே மாட்டார்கள்” என்கிறார்கள், ரஜினி தரப்பில். மேலும் அவர்கள், “பா.ஜ.க.வோ, வேறு யாருமோ, ரஜினியை பின்னால் இருந்து இயக்கிவிட முடியாது. ஏனென்றால், ஆன்மிகத்தைப் போலவே, அரசியலிலும் அவர் போலியானவர் அல்ல” என்று அடித்துச் சொல்கின்றனர்.
திட்டத்துடனே திட்டுகிறார்கள்!
‘இவங்க எல்லாருமே பா.ஜ.க.வின் பி டீம்தான்!’ என்று விமர்சிப்பவர்களோ, “பா.ஜ.க.வால் தமிழகத்தில் பெரிய அளவில் ஓட்டு வாங்க முடியாது. ஆனால், அதிகாரத்தில் இருப்பதால், தங்களுக்கு வேண்டாத கட்சிக்கு விழவேண்டிய ஓட்டுகளைத் தடுத்துவிட முடியும். எதிரிக்கு இரண்டு கண்ணும் போய்விடவேண்டும் என்பதில் அழுத்தமாக இருப்பார்கள். பா.ஜ.க.வின் பி டீம்தான்! ஆனால்... தெரியவே தெரியாது. இவர்கள், பா.ஜ.க.வை கடுமையாகத் திட்டுவார்கள். ஏனென்றால், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக அந்த வேண்டாத கட்சிக்குப் போய்விடாமல் தடுத்து, தாங்களே கவர்வதற்காகத்தான்!
மக்கள் நலக் கூட்டணியின் சாதனை!
2015-ல், தேமுதிக தலைமையில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணி என்ன சாதித்தது? மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்காது என்பது, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அந்த அரசியல் தலைவர்கள் அத்தனை பேருக்கும் மிக நன்றாகவே தெரியும். ஆனாலும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, வேண்டுமென்றே மண்ணைக் கவ்வினார்கள்.
சிதையுமா சிறுபான்மையினர் வாக்கு வங்கி?
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நலனில் மிகவும் அக்கறை கொண்டும், இந்துத்வா கொள்கைக்கு எதிராகவும், அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் பெரிய கட்சிகள் என்றால், இந்திய அளவில் காங்கிரஸும், தமிழ்நாட்டில் திமுகவும்தான். அதனால், சிறுபான்மையினரில் பெரும்பாலானோர், தேர்தலின்போது இந்த இரண்டு கட்சிகளுக்கும், தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். இந்த சிறுபான்மையினர் வாக்குகளைத்தான், கமலும், ஓவைசியும் ஓரளவுக்கு பிரிப்பார்கள் என நம்பப்படுகிறது. ‘அறிவுஜீவி’ என்று தொண்டர்களால் சிலாகிக்கப்படும் கமல்ஹாசனுக்கு ‘பகுத்தறிவாளர்’ முகமும் இருப்பதால், படித்தவர்கள் மற்றும் மதங்களை வெறுப்பவர்களின் ஆதரவும்கூட, கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, வெள்ளித்திரை நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். எல்லாம் சேர்ந்துதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே, ம.நீ.ம.வுக்கு 3.63 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்தது.
நல்லவர் கையில் நாடு இருந்தால் நல்லதுதானே! – மக்களின் ஏக்கம்!
பொதுவெளியில் ‘நிஜமுகம்’ காட்டும் ரஜினியின் எளிமையும், ஈர்ப்புள்ள யதார்த்தமான பேச்சும், அரசியலை சம்பாதிக்கும் தொழிலாக நினைத்தே பார்க்காத நேர்மையும், அவரது ரசிகர்களைத் தாண்டி, ‘ஒரு நல்லவர் கையில் நாடு இருந்தால் நல்லதுதானே!’ என்ற எதிர்பார்ப்புள்ள பொதுமக்களையும் கவர்வதாக உள்ளது என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ‘திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாந்தது போதும்..’ என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்களும் உண்டு. இந்த வாக்குகள் ரஜினி பக்கம் திரும்பும்போது, திமுக – அதிமுக வாக்கு வங்கியும்கூட சரிவைச் சந்திக்கும். இதெல்லாம், தேர்தலின்போது ‘ரஜினி அலை’ உருவானால் மட்டுமே சாத்தியம் என்பதை, ரஜினி மன்றத்தினரே அறிந்து வைத்திருக்கின்றனர். உண்மையிலேயே ரஜினியின் உடல் நலனில் அக்கறைகொண்டவர்கள், ‘தேவையில்லாமல் உங்களை அரசியலுக்கு இழுத்துவிட்டார்கள். ரசிகர்கள் விரும்பாத உங்களின் வயதுக்கே உரிய ஓய்வை நாங்கள் தருகிறோம்’ என்று நினைத்துவிட்டால், அவரால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்குகள் பெறமுடியாது. ஆனாலும், அவரது அரசியல் சூழல், ‘பனைமரத்துக்கு கீழ் நின்று பால்குடிப்பவர்’ போலவே, சத்தமில்லாமல் பா.ஜ.க.வுக்கு உதவுபவராகப் பார்க்கவைக்கிறது. அதனால், கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார்.
ஆக, ‘திமுக ஆட்சிக்கு வந்தால், டெல்லிக்கு குடைச்சல்தான்!’ என்பதை கொள்கை ரீதியான கசப்பான அனுபவங்களால் உணர்ந்திருக்கும் பா.ஜ.க.வின் திட்டத்துக்கு, அறிந்தோ, அறியாமலோ, பி டீம் ஆகிவிடுகிறார்கள், கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் கட்சியினர்.
தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறதோ, பெரிய கட்சிகளுடன் கூட்டணியின் இணைந்து ஐக்கியமாகிறதோ, தற்போது பி டீம் எனப் பெயர் வாங்கியிருக்கும் கட்சிகளுக்கே வெளிச்சம்!
சிறுபான்மையினர் வாக்குகளால் மாறிப்போன முடிவுகள் சில!
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு விழ வேண்டிய சிறுபான்மையினர் வாக்குகளை, இன்னொரு கட்சி எப்படி பிரித்து, வெற்றியைத் தட்டிப்பறித்தது என்பதற்கு சில உதாரணங்கள் -
2001-ல் மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக பி.டி.ஆர். பழனிவேல்ராஜனும், அதிமுக சார்பில் வளர்மதி ஜெபராஜும் போட்டியிட்டனர். நீதிக்கட்சியின் நிறுவனரான பி.டி.ராஜனின் மகன்தான் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன். இப்படியொரு அரசியல் பாரம்பரியம் உள்ள இவர், சட்டப்பேரவைத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என முக்கிய பதவிகளையெல்லாம் வகித்திருக்கிறார். ‘பண்பாளர்’ எனப் போற்றப்பட்ட அரசியல் ஜாம்பவனான பி.டி.ஆர். பழனிவேல்ராஜனை, பெரிதாக எந்தப் பின்னணியும் இல்லாத வளர்மதி ஜெபராஜ், 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம், சிறுபான்மையினர் வாக்குகள் மாறி விழுந்ததுதான்.
வழக்கமாக திமுக வேட்பாளர்களையே சிறுபான்மையினர் ஆதரித்துவந்த நிலையில், அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெபராஜ், அந்தத் தொகுதியில் உள்ள அத்தனை தேவாலயங்களுக்கும், தான் ஒரு கிறிஸ்தவர் என்ற உரிமையுடன் சென்று அப்போது ஆதரவு கோரினார். கிறிஸ்தவர்களைப் பொறுத்த மட்டிலும், சர்ச்சில் பாதிரியார் என்ன சொல்கிறாரோ, அதற்கு அப்படியே கட்டுப்படுவார்கள். அதனால்தான், அதிமுக வேட்பாளராக இருந்தும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ வாக்குகளும் விழுந்ததால், வளர்மதி ஜெபராஜ் வெற்றிபெற்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரானார்.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை, 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தால் தோற்கடிக்க முடிந்தது என்றால், அதற்குக் காரணம், இந்துத்வா கொள்கையில் தீவிரமாக உள்ள எச்.ராஜா மீதான சிறுபான்மையினரின் மிகத்தீவிரமான அதிருப்தி வாக்குகள்தான்.
அதுபோல்தான், 2019 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரான எச்.வசந்தகுமாரால், பா.ஜ.க. வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணனை 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற முடிந்தது. அதற்கு, மதரீதியான பா.ஜ.க.வினரின் தொடர் பேச்சுகளால் வெறுத்துப்போன சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த சீற்றமும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.