தமிழகத்தின் அரசியல் மையப் பேச்சாக இருக்கும் திராவிடத்தை நகர்த்திவிட்டு, ஆன்மிகத்தைக் கொண்டுவருவதற்கு பா.ஜ.க. பிரம்ம பிரயத்தனம் செய்துவருகிறது. ஆனால் திராவிடக் கட்சிகளோ… பா.ஜ.க. பாணியை தங்களுடையதாக்கி டஃப் தருகின்றன.
தமிழக பா.ஜ.க. வேல் யாத்திரை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டுவைக்க, கடந்த மாதம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் ஆறடி உயரத்தில் வெள்ளியிலான வேலை ஓ.பி.எஸ்.ஸுக்கு பரிசாகக் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது சில குருக்கள் ஸ்டாலினுக்கு வேலை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அடுத்தடுத்து வேலை அன்பளிப்பாக வாங்கிய பட்டியலில் துரைமுருகனும் இடம்பெற்றுவிட்டார்.
விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் தேர்தல் களத்தில் குதித்து மும்முரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது முதல் உற்சாகமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார் எடப்பாடி. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸோ தனது தொகுதியிலுள்ள நகரங்களையும் பட்டி தொட்டிகளையும் குறிவைத்து பிரச்சாரம் செய்துவருகிறாரே தவிர தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை.
இந்நிலையில் ஓ.பி.எஸ். பிரச்சாரம் செய்யப் போகும் புதிய பிரச்சார வாகனத்தை ஓ.பி.எஸ்.சின் இளைய மகனான ஜெயபிரதீப் திருப்பதிக்கு கொண்டுசென்று அங்கு அய்யரை வைத்து சிறப்பு பூஜை செய்திருக்கிறார். இந்த பிரச்சார வாகனத்துக்கு நடுவில் ஜெயலலிதா படம் பெரியளவில் உள்ளது. வாகனத்தின் உள்பகுதியில் ஓ.பி.எஸ். உட்காரும் இடத்திற்கு எதிரே வழக்கமாக இருக்கும் ஜெ. படத்துக்குப் பதில், ஒரு ஜான் உயரத்தில் புதிதாக வேல் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு கட்சிக்காரர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
திருப்பதியில் சிறப்பு பூஜை செய்யப் பட்ட ஓ.பி.எஸ்.சின் பிரச்சார வாகனத்தையும் சென்னைக்கு கொண்டுவந்து தற்பொழுது நிறுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ஓ.பி.எஸ். தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கவிருப்பதால் அதற்கான பணிகளில் கட்சிப் பொறுப்பாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வேலை ஆதரிப்பவர்கள் பக்கம் நிற்கப்போகிறார்களா?… வேல்நுனி போல் கூர்மையான கேள்விகளால் மக்கள் பிரச்சனையைப் பேசுபவர்கள் பக்கம் நிற்கப் போகிறார்களா? பார்க்கலாம்!