கடந்த வருடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி சக்கைபோடு போட்டது. அதில் ஓவியாவின் ரசிகர்கள் எல்லாம் ராணுவமாக மாறினார்கள், அதான் ஓவியா ஆர்மி அமைத்தார்கள். அதே போல இந்த வருடமும் பிக்பாஸ் ஆரம்பமாகி யாஷிகாவுக்கு ஆர்மி தொடங்கப் போறாங்களோ, இல்ல ஜனனிக்கு ஆர்மி தொடங்கப் போறாங்களோ என்று எதிர்பார்த்தால், பிக்பாஸ் பக்கம் இந்த முறை ஆர்மி ஆரம்பிக்காமல் 'எம்ஜிஆர் நகர்' பிஜிலி ரமேஷுக்கு ஆர்மி தொடங்கி வச்சுருக்காங்க நம்ப சமூக வலைதள நண்பர்கள்.
'காலா' படம் வெளியான சமயத்தில் வெளியானதுதான் பிஜிலி ரமேஷ் பற்றிய 'பிளாக் ஷீப்' யூ-ட்யூப் சேனல் வீடியோ. அது, பொதுமக்களிடம் நகைச்சுவையாக நடித்து கேலி செய்து இறுதியில் 'நாங்கள் தொலைக்காட்சியிலிருந்து வருகிறோம்' என்று சொல்லி அவர்களை அசடு வலிய செய்து சிரிக்கவைக்கும் நிகழ்ச்சி. இதில் ஒரு பகுதியாக வந்த பிஜிலி ரமேஷ் பெற்ற வரவேற்பை பார்த்து அவருக்கென தனி வீடியோவே விடப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக இருக்கிறார் பிஜிலி.
காத்திருந்த மீம் கிரியேட்டர்களுக்கு இப்படி ஒரு அருமையான டெம்ப்லேட் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? அவரை வைத்து மீம்ஸ்களும் எக்கச்சக்கமாக வளம் வர துவங்கின. அவற்றில் சில இங்கே...
இன்னொருவருக்கு பிடித்தமான ஒரு பொருளை கேட்கிறோம் என்றால் உதாரணத்திற்கு.
நண்பன் 1 : அந்த கேக் கொடுடா !
நண்பன் 2: அதுதான் தவறான விஷயம்
பாட்ஷா படம் வெளியானபோது, ரஜினி பேசிய "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" வசனம் எத்தனை பேமஸோ அந்த அளவிற்கு ரஜினி ரசிகர் பேசிய "அதுதான் தவறான விஷயம்" வசனமும் பேமஸ் ஆகியிருக்கிறது. 'சிவனேனு போட்டுயிருந்தவன புடிச்சு லாக் பண்ணி... ஆஹ்ன்...' இதுவும் அவருடைய பேமஸ் வசனம் தான். வசனத்தைவிடவும் அவரது பாடி லாங்குவேஜ்தான் செம்ம என்கிறார்கள் பிஜிலி ரமேஷ் ஆர்மிகாரர்கள். சோழிங்கநல்லூரில் இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஐடி ஊழியர்கள், இவர் கூட செல்பி எடுத்துக்கொள்ள சண்டையிடும் அளவுக்கு தமிழகத்தின் பேமஸ் ஸ்டாராக வளம் வருகிறார்.
வார்த்தைக்கு வார்த்தை ரஜினி, ரஜினி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரில் இருந்து எல்லாமே ரஜினி என்று மட்டுமே வாயை திறந்தால் சொல்கிறார் இந்த பேமஸ் ஸ்டார் பிஜிலி ரமேஷ். ரஜினியின் ரசிகன் என்பதை விட வெறியன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் இவரின் வளர்ச்சி என்ன என்றால், அவருக்கே தெரியாத ஒரு கூட்டம் அவரை பின்னோக்கியுள்ளது. "யூ ஆர் த பெஸ்ட்" (you are the best) என்று அவரைப் பார்த்து சொன்னாலும், 'அது நான் இல்லை தலைவர் ரஜினிதான்' என்பார். காலா படத்திற்காக காசி தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட பிளக்சில் பிஜிலியின் படம் ஒரு ரசிகனாக இருக்க, தற்போது பிஜிலி ரமேஷுக்கும் அதுபோன்று கட் அவுட்கள் வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டனர். பிஜிலி ரமேஷ் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் போட்டு, 'ரஜினிகாந்த் கொடுத்து வைத்தவர், எங்கள் தலைவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்' என்றெல்லாம் சற்று ஓவராகவே பிஜிலி ரமேஷ் புகழ் பாடி வருகின்றனர். 'பிஜிலி ரமேஷைப் பற்றி நீ சொல்லப்பா' என்றால் அவர் பாணியிலேயே 'நீ மூடப்பா' என்கிறார்கள். ரஜினியின் ரசிகர் என்பதால் அவரைவிட பாபா முத்திரையை அழகாக வைத்து பாபா முத்திரையை தமிழகத்தில் மீண்டும் பிரபலமாக்கியுள்ளார்.
பிஜிலி ரமேஷ் ஆர்மி பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் கேட்ட பொழுது, 'தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகள், அலுவலகங்களில் இருக்கும் பிரச்சனைகள் என சுற்றியிருக்கும் பிரச்சனைகளை பேச, மறக்க, மீம்கள் தான் இப்பொழுது பெரும் வடிகாலாக இருக்கின்றன. அவற்றில் அவ்வப்போது இது போல வரும் புதிய கான்சப்ட்டுகள், டெம்ப்லேட்கள்தான் எங்களை குஷிப்படுத்துகின்றன. அதனால்தான் இதெல்லாம்' என்கிறார். இப்பொழுதெல்லாம் எல்லா பிரச்சனைகளுமே கான்சப்ட்டாகவும் டெம்ப்லேட்டாகவும் மாறி மறக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதுதான் தவறான விசயம்.