சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனைக்கு பிறகு, ரஜினி மற்றும் விஜயை வைத்து அரசியல் ரீதியான கருத்துக்கள் பேசப்படுகின்றது. ரஜினி பாஜகவுக்கும், விஜய் திமுகவுக்கு சார்பாக இருப்பதை போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
விஜய் திமுக பக்கம் போனதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ரஜினி பாஜக பக்கம்தான் இருக்கிறார். தொடர்ந்து அவர் அவர்களை ஆதரித்து வருகிறார். தற்போது இஸ்லாமியர்களுக்கு ஒன்றென்றால் முதலில் குரல் கொடுக்கும் ஆளாக நான் இருப்பேன் என்று தெரிவிக்கிறார். அவர் எப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ஏதாவது ஒரு நிகழ்வை அவரால் முடிந்தால் சொல்லட்டும். காஷ்மீரில் ஆசிபா என்ற முஸ்லிம் பெண் குழந்தை இந்து பயங்கிரவாதிகளால் கோயிலில் வைத்தே வன்புணர்வு செய்யப்பட்டு கைகால்கள் உடைக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்பினர் பேரணி நடத்தினார்கள். இதற்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தாரா? உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி ஒரு முஸ்லிம் பெரியவரை அடித்தே கொன்றார்களே, அப்போது ரஜினி குரல் கொடுத்தாரா? இந்தியாவின் உச்சபட்ச நடிகராக இருக்கின்ற அமீர்கான் தன்னுடைய மனைவி தன்னிடம் நாட்டில் பாதுகாப்பின்மை குறைவாக இருப்பதாக கூறியதாக ஒரு கருத்தை தெரிவிக்கிறார். உடனே அவரை நாட்டை விட்டுபோங்கள் என்று கொந்தளிக்கிறார்கள். அதே போன்று பிரதமர் ஒரு கூட்டகத்தில் ஊழல்வாதிகளால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறுகின்றார். அவரும் நாட்டில் பாதுகாப்பின்மையை உணர்கிறார். ஆனால் அவ்வாறு கூறிய அவருக்கு எந்த எதிர்ப்பும் வருவதில்லை. இந்த மாதிரியான எந்த பிரச்சனைக்காவது ரஜினி வாய் திறந்துள்ளாரா?
மாணவர்களுக்கு ரஜினி அறிவுரை கூறுகிறார். மாணவர்களுக்கு அறிவுரை கூற ரஜினிக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர்களுக்கு எல்லாம் தெரிந்ததால்தான் போராடுகிறார்கள். இந்த நாட்டை இந்த சட்டம் துண்டாடும் என்று தெரிந்தததால்தான் வீதிக்கு வந்து போராடுகிறான். அவர்களுக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார்? நீங்கள் சினிமாவில் கேமரா முன்னாடி மட்டும் சண்டை போடுவீர்கள். மற்ற நேரங்களில் வாய் மூடி மவுனியாக இருப்பீர்கள். இதுதான் காலங்காலமாக நீங்கள் செயல்படுகின்ற முறை. அவர் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லலாமா? மாணவர்களுக்கு அவர் அறிவுரை சொல்ல வேண்டுமானால் என்னுடைய படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வராதீர்கள், படிக்கின்ற வேலையை பாருங்கள் என்று தானே சொல்லியிருக்க வேண்டும். இதை ரஜினிகாந்த் சொல்வாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கின்றதா? எனக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டம், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று அவரால் ஏன் சொல்ல முடியவில்லை. உங்கள் குடும்பத்தை பாருங்கள், எனக்காக மண் சோறு சாப்பிட வேண்டாம் என்று அவரால் ஏன் சொல்ல முடியவில்லை. படங்களில் சிகெரட் குடிக்கின்ற காட்சிகளை முதலில் வைத்து யார். வன்முறை காட்சிகளை படங்களில் அறிமுகம் செய்தது யார். தர்பார் படத்தில் மனித உரிமை ஆணையத்தில் இருந்து வருகிறவர்களின் நெத்தி பொட்டில் எதற்காக துப்பாக்கி வைத்தீர்கள். சண்டை காட்சிகளே படத்தில் வைக்காதீர்கள். அன்பாக பேசி வில்லனை திருந்துங்கள். அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.