தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.
மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.
தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.
எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக உள்ளமையினை அறிய முடிகின்றது.
குண்டெழுத்தாணி
அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.
கூரெழுத்தாணி
எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.
வாரெழுத்தாணி
இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.
மடக்கெழுத்தாணி
ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.
தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.