Skip to main content

இளைஞர்களை எச்.ராஜா கைபிடித்து கூட்டிச் சென்றுவிடுகிறார்... - கரு.பழனியப்பன்  

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் "இதுதான் ராமராஜ்யம்" நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பனின் உரை...
 

karu palaniyappan suba vee



புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு முன்பு என் கல்லூரிப்பேராசிரியர் எனக்கு ஏழு முறை போன் செய்திருந்தார். நான் திருப்பி அழைத்து பேசினேன். "சுப.வீரபாண்டியன் புத்தக வெளியீட்டுக்கு போகிறாயா?" என்றார். "ஆம்" என்றேன். "அவர் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவார், நீ சீக்கிரமாகச் செல்" என்றார். சுப.வீரபாண்டியன் அவர்களும் என் ஆசிரியரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். அதனால்தான் எனக்கு ஏழுமுறை போன் செய்துள்ளார். நான் வந்தவுடன் மெசேஜ் செய்தேன், 'மூன்று நிமிடத்திற்கு முன்பே வந்துவிட்டேன்' என்று. வரும்பொழுது "இது தான் ராமராஜ்யம்" புத்தகத்தை படித்துவிட்டு வந்தேன். முன்னூறு பக்கம் கொடுத்தாலும் படிக்கக் கூடியவர்கள்தான் கவிக்கோ மன்றத்திற்கு வருவார்கள். இது முப்பது பக்கம்தான், கண்டிப்பாக அனைவரும் படித்திருப்பார்கள். நமக்கு பெரியார் பிடிக்கும், சுப.வீ பிடிக்கும் என்று நினைத்து இந்தக் கூட்டத்துக்கு வந்தால், அரசியல் கூட்டத்திற்கு வந்த ரஜினி ரசிகன் மாதிரி ஆகிவிட்டது. சுற்றி சுற்றி இவ்வளவு செய்திகள் இருக்கின்றன. நமக்கு எதுவுமே தெரியலையேனு வருத்தப்படுறேன்.

இன்றைய சூழ்நிலையில் 'இது தான் ராமராஜ்யம்' போன்ற புத்தகங்கள் அவசியமாக உள்ளது. இதற்கு முன்பு பேசிய மணிகண்டன் சொன்னார், 'அம்பேத்கர் சிலை உடைப்பு ஒரு செய்தியாக மட்டும் உள்ளது' என்கிறார். இதுதான் இன்றைய சூழ்நிலையில் இளைஞனின் மனநிலை. அவனுக்கு எல்லாவற்றின் மீதும் ஆர்வம் உள்ளது. அவன் எங்கு வேண்டுமானாலும் வருவான், வர தயாராக உள்ளான். ஆனால் அப்படி வருபவர்களை எச்.ராஜா மாதிரியான ஆட்கள் முதலில் வந்து கைபிடித்து கூட்டிப்போய்டுறாங்க. 

 

periyar



எனக்கு இருபது வயதாக இருக்கும்போது, ஒரு செய்தி வந்தால் அது மறுநாள் செய்தித்தாளில் வரும். அதற்கு மறுநாள் அதைப்பற்றி ஒருவர் கட்டுரை எழுதுவார், மறுநாள் அதற்கு இன்னொருவர் அதற்கு எதிர் கட்டுரை எழுதுவார். அதன் பின்தான் அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் நால்வர் அமர்ந்து பேசுவார்கள். அப்பொழுது ஒரு செய்தி வெளியாகி நிதானமாக ஜீரணம் ஆவதற்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டது. இப்பொழுது ஒரு செய்தி வந்துவிட்டால் அதனை உடனே ஒரு பதினாறு சேனல்களில் நான்கு பேர் அமர்ந்துகொண்டு பேசுகிறார்கள். இதில் எதைப் பார்ப்பது என்று தெரியவில்லை, சத்தமாகப்  பேசுவது எல்லாம் சரி என்பது போல தோணுது. ஆனால் அவர்கள் எல்லாம் பி.ஜே.பியை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பேசும் கருத்துகள் பலமாக உள்ளது. முடிந்த பிறகு யோசித்துப் பார்த்தால் அதெல்லாம் தவறாக உள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு படம் பார்த்து விட்டு அவரவர் கருத்துக்களை பேசுவோம் அது காற்றோடு கரைந்துவிடும். இப்போது பார்த்தால் திரையரங்கிற்குச் சென்ற மூன்றாவது நிமிடமே, 'படம் மொக்கடா'னு சொல்லிவிடுகிறான். சமூகவலைதளத்தில் அவன் மொழி இவ்வாறாக உள்ளது. காரணம், அவன் படிக்கவில்லை. அதற்குள் எழுத வந்துவிட்டான். அதற்கு மேல் அவனால் யோசிக்க முடியாது. இந்த காலகட்டத்தில்தான் பெரியார் மிகவும் அவசியமாக உள்ளார். அவர்தான் அனைத்தையும் கேளுடா என்றார். பெரியார் தன்னுள் ஒரு கருத்தை வைத்திருப்பார். ஆனால் அவர் அனைவர் பேசுவதையும் கேட்பார். இந்த உலகத்தில் பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி இனி பிறக்கவே முடியாது. பெரியார் ஒரு கருத்தை வைத்துக்கொண்டே இன்னொருவர் பேசுவதை கேட்பார். அவர் அலங்காரத் தமிழில் பேசவில்லையே தவிர அவர் பேசிய தமிழ் எல்லாம் அவ்வளவு அழகு. திருக்குறளை முதலில் திட்டியவர் பின் அதனை ஆதரித்தார். 'ஏன் முதலில் திட்டினீர்கள் இப்போது ஆதரிக்கிறீர்கள்?' என்று கேட்டால், 'ஆமா திட்டினேன். இவையெல்லாம் தவறு என்று அறிவாளிகள் சொன்னார்கள். இது பரிமேலழகர் என்ற ஒருவர் எழுதிய உரை. அவர் பல விஷயங்களையும் சேர்த்து எழுதிவிட்டார். அர்த்தம் இது இல்லை என்று சொன்னார்கள். அதனால் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கடைக்குச்  செல்கிறோம். நூறு பொருள் இருக்கு, நூறையும் வாங்குவியா? தேவையான பத்து பொருளை மட்டும்தானே வாங்குவாய்?' என்றார். அந்த உதாரணம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

பி.ஜே.பிக்கு குழப்பம் என்னவென்றால், 'தமிழ்நாட்டில் எழுபது சதவீதம் பேர் சாமி கும்பிடுகிறார்கள். அதில் அறுபத்தொன்பது சதவீதத்தினர் அதிதீவிரமாக கும்பிடுகிறான். ஆனால் பெரியாரை ஏதாவது சொன்னால் கோபப்படுகிறான்' என்பதுதான் பி.ஜே.பிக்கு உள்ள குழப்பமே. 'என்னடா இந்த ஆளு சாமி கும்பிடாதனாரு, காட்டுமிராண்டினாரு, சாமி சிலையை உடைத்தாரு.  அவரை சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறதே. இவனை நம்மில் ஒருவனாக மாற்றமுடியவிலையே' என்று. இன்று ஸ்மார்ட் போன் கையில் வைத்திருப்பவனுக்கு எல்லாம்  பெரியார் பற்றி தெரிகிறது. அவர் சாமி கும்பிடுவதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை என்று. இவர்கள் பெரியார் குறித்து மூன்று விஷயம் திரும்பத் திரும்பக் கூறுவார்கள். ஒன்று இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பது. அது பொறாமையில் சொல்வது, அதை தள்ளிவைத்து விடுவோம். அது தனிப்பட்ட விஷயம். அடுத்து இந்து மதத்தை மட்டும் கடுமையாக எதிர்த்தார், மற்ற இரண்டு மதங்களையும் கடுமையாக எதிர்க்கவில்லை என்பார்கள். 
 

h.raja



மூன்றாவது, அவர் பிள்ளையார் சிலையை உடைத்தார் என்பார்கள். இந்த பிள்ளையார் சிலையை உடைத்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிபதிக்கு பெரியார் பற்றி தெரியும் இந்த வழக்கிலிருந்து பெரியாரை விடுவிக்க வேண்டும் என்பதற்காக கேள்விகளை மாற்றி மாற்றி கேட்கிறார். பெரியார் தெரியாமல் கைதவறி விழுந்துவிட்டது என்று கூறுவார், நாம் விடுதலை செய்துவிடலாம் என்பதற்காக. பெரியார் பொறுமை இழந்து, "ஐயா நீங்க மடக்கி மடக்கி கேட்கிறீர்கள். நேரடியாக கேளுங்கள், பிள்ளையார் சிலையை உடைத்தாயா?" என்று. நீதிபதி கேட்கிறார். பெரியார் "ஆம் உடைத்தேன், தண்டனை கொடுங்கள். ஆனால் எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ, அதே தண்டனை அடுத்த வருடம் பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையாரை ஆற்றில், கடலில் கரைப்பவருக்கும் அளிக்கவேண்டும்" என்றார். அந்த நீதிபதி பெரியாரை விடுதலை செய்துவிடுகிறார். அந்த நீதிபதியின் பெயர் என்ன தெரியுமா? ராமன். 

பி.ஜே.பி இந்தியா முழுவதும் ஒரே பழக்கத்தைக் கொண்டு வர நினைக்கிறார்கள், ஏறத்தாழ வென்று விட்டார்கள். இரண்டு எம்.எல்.ஏ உள்ள இடத்திலும் அவர்கள்தான் ஆட்சி நடத்துகிறார்கள்,  எம்.எல்.ஏவே இல்லாத தமிழகத்திலும் ஆட்சி நடத்துகிறார்கள். இதற்கு அவர்கள் எல்லா இடத்திலும் இந்து, முஸ்லீம் வேற்றுமையை சொல்லிக்கொண்டே வந்தார்கள். அது வடஇந்தியாவில் எடுபட்டது. தமிழ்நாடு என்றும் தனி, நாம சொல்லவில்லை அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இங்கு அவன் புதிய திட்டத்துடன் வருகிறான். இந்து-பெரியார் என்று. அவர் இந்துவை எதிர்த்தவர், பிள்ளையாரை உடைத்தவர், முஸ்லீம் கிறிஸ்டீனை எதிர்க்காதவர், இந்துவை எதிர்த்தவர், வாருங்கள் நாம் ஒன்றிணைவோம் என்றான். பிள்ளை பிடிப்பவன் இந்த ரூபத்தில் இப்பொழுது வருகிறான். 

சினிமாவில் ஒரு நடிகர் என்னிடம் வந்து சொன்னார், 'எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சினிமாவிலிருந்துதானே அரசியலிற்கு வந்தார்கள்' என்று. நான் கூறினேன், அவர்கள் அரசியலில் இருந்த பிறகுதான் சினிமாவிற்குள் வந்தார்கள் என்று. அவர், 'அப்படியா?' என்றார். உங்கள் பின்னால் ஊடகம் வந்துகொண்டிருக்கும் அரசியல் அனுபவம் பற்றி கேட்கும். ஆனால் நான் தேர்தல் முடிந்து அந்த மூன்றாவது நாள், வாக்கு எண்ணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அப்பொழுது தெரியும் உங்களுக்கு  அரசியல் என்னவென்று. ஆனால், பெரியார் செய்த அரசியல் என்பது யாரையும் சாராமல், நான் யாரிடமும் சென்று ஓட்டு கேட்க மாட்டேன் என்று சொன்ன அரசியல். அது மிகப்பெரிய சாகசம். அதனால் முப்பது பக்கத்தில் போட்டிருக்கும்  'இதுதான் ராமராஜ்யம்' போன்று அல்லது அதையும் விட சிறிய புத்தகத்தை இன்னும் சுப.வீ போன்றவர்கள் போடவேண்டும்.