Skip to main content

தென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து!

பொங்கல் திருநாளை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒருங்கிணைத்து கொண்டாட வேண்டியது அவசியம் என்று தென்கொரியா வாழ் தமிழர்களின் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார். 

 

kk

 

கொரியா தமிழ் தளம் ஒருங்கிணைத்த தென்கொரியாவாழ் தமிழர்களின் தமிழர் திருநாள் ஒன்றுகூடல் திருவள்ளுவர் ஆண்டு 2050, தை 6 அன்று (20 சனவரி 2019), ஞாயிற்றுக்கிழமை, தென்கொரியா, சுவோன் நகரிலுள்ள சுங்கின்வான் பல்கலைகழக வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.

 

kk

 


சரியாக காலை 10 மணியளவில் தொடங்கிய இவ்விழா பறை இசை முழங்க அனைவரையும் வரவேற்பளித்து, குத்துவிளக்கேற்றி இயற்கைக்கு நன்றிகூறும் வகையில் பொங்கல் வைக்கப்பட்டது. 

 

k


நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென்கொரியா, சியோலில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கெல்த்தாவின்  வாழ்த்துரையை தொடர்ந்து தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் பாடல், பறை இசை, நடனம், கரகாட்டம், கும்மிப்பாட்டு, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கயிறிழுத்தல், நகைச்சுவை மற்றும் கவிதை அரங்கேற்றம் போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடந்தேறின. 

 

kk

 


அந்நிய மண்ணில் தமிழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரையாடல் வெளியை அதிகரிக்கும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டது. 

 

k

 


வழக்கமான பரிசுப்பொருட்களுடன், பேராசிரியர். தொ. பரமசிவன் அவர்களின் பண்பாட்டு அசைவுகள், பாவலர் அறிவுமதியின் தமிழ் முருகன், ஆழி செந்தில்நாதனின் எங்கே அந்த பத்துதலை இராவணன் மற்றும் கர்கோ  சாட்டர்ஜியின் உமது பேரரசும் எமது மக்களும் போன்ற புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

 

kk

 

 

இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து நக்கீரன் கோபால் அவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்கள்.

 

kk

 

 

நக்கீரன் கோபால்
ஆசிரியர், நக்கீரன் வாரமிருமுறை இதழ்

 

“இன்று உலகத்தமிழர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் செயல்பாடு எனக்கு பெரும் புத்துணர்ச்சியை தருகிறது. நாம் இந்த பூமிப்பந்தில் பல நாடுகளில் வாழ்ந்தாலும் அறிவியல் வளர்ச்சி நம்மையெல்லாம் இன்று ஒருசேர இணைத்துவிட்டது. உலகில் வாழும் தமிழர் அனைவரும் கொண்டாடுகிற ஒற்றை நிகழ்ச்சியென்றால் அது தமிழர் திருநாள்தான். தை மாதம் முதல்தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு தொடங்கும் நாள் என பல ஆய்வுகள் நமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆக இந்த நாள் தமிழர்களுக்கு இன்றியமையாத, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு கொண்டாடத்தக்க நாள்  என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு முன்வரும் போகி, பொங்கலைத்தொடரும் மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் முதலியன இந்த நாள்தான் தமிழனின் பெருநாள் என்ற வரலாற்று உண்மையை நமக்கு சொல்லி நிற்கிறது.

 

தமிழனின் அடையாளத்தையும் சமூக மதிப்பீடுகளையும் சிதைக்க கங்கணம் கட்டிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில், கடல் கடந்து சொந்தங்களை விட்டு தென்கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழர் திருநாள் தொடர்பான ஒன்றுகூடல்களை நிகழ்த்துவது  மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

 

இங்கு தமிழ்நாட்டில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நமக்கு உணவளித்த உழவர் வாழ்வு தகர்ந்து அவர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், அவர்களுக்கு அரசுகள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் போதிய அளவில் கிடைக்காமல் போனதும், மக்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களை வெகுவாக பாதித்திருக்கிறது.

 

என்றாலும்கூட  தமிழர் திருநாளின் இன்றியமையாமை சற்றும் குறையாமல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் அனைவரும் கொண்டாடவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று” என்றார்.

 

முனைவர் பழ. அதியமான்
கொடைக்கானல் நிலைய இயக்குனர்
அகில இந்திய வானொலி.

 

“தொலை தூரத்திற்க்கு சென்றாலும் கூட, தமிழ் பண்பாட்டை மறந்துவிடாமல் பொங்கல் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்சி அடைகிறேன். நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு சென்றாலும் நம்மை இணைப்பது இந்த தமிழ் மொழியின் இனிமையும், கோடைப் பண்பலையும்தான். நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் உங்கள் தமிழ் மொழியை விட்டுவிடாதீர்கள்” என்றார்.

 

kk
டி.ஜே.சமாதானம்

 

 

டி.ஜே.சமாதானம்
பேராசிரியர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர்.

 

“தை மாதம் முதல் நாளானது வேளாண் பெருங்குடிகளுக்கும், நன்மை வேண்டுபவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்குமென்பதால் உலகெங்கும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தமிழர் திருநாளினை நாம் உற்சாகத்துடனும், பெருமையுடனும், நம்பிக்கையுடனும் கொண்டாட வேண்டும் என்றார்.

 

kk
ச.வின்சென்ட்

 

 

ச.வின்சென்ட்
இலயோலா கல்லூரி பேராசிரியர்

 

“நீங்கள் கொரிய தமிழ்ச் சங்கத்தை நிறுவிய உடன் உலக தமிழ் உள்ளங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இன்று தமிழர்கள் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் பல வழிகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும், அதில் ஒன்றுதான் இந்த ஒருங்கிணைப்பு” என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார். 

 

 

kk
ஆதனுர் சோழன்

 

 

ஆதனுர் சோழன்
எழுத்தாளர்

 

சீர்திருத்தத்தை வலியுறுத்தும் பொங்கல் பண்டிகை சிற்றுர் மற்றும் நகர்ப்புறங்களில் செழிப்பை இழந்து வருவதுபோல் உணர்கிறேன். இதனை அந்நிய மண்ணில் இருக்கும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்  என்றார்.

 

kk
சிவஞானம்

 

 

சிவஞானம் பாலசுப்ரமணியன்
பேராசிரியர்

 

“2009 ஆம் ஆண்டு முதல் முனைவர் ந., திரு. கண்ணன் அவர்களுடன் இணைந்து கொரியாவுக்கு தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், கொரியாவில் உள்ள காயா வம்சம் சார்ந்த கோ குவாங் ஓக் அரசி ஏன் தமிழச்சியா இருக்க கூடாது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். முனைவர் நாகராஜன், கவிஞர் பவளசங்கரி  மற்றும் முனைவர் சுரேஷ் போன்றோரும் இவ்வாறன ஆராய்ச்சியை செய்கின்றனர்” என்றார்.

 

k
எம்.எஸ்.ராஜ்

 

 

எம்.எஸ்.ராஜ்
திரைப்பட இயக்குனர்

 

எனது மெரினா புரட்சி படம் தடை செய்யப்பட்டவுடன், ஒரு தமிழனின் உணர்வு நசுக்கப்பட்டபோது உடனே உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் திரண்டெழுந்து எனக்கு ஆதரவளித்தனர். வெளிநாடுவாழ் தமிழர்களின் கூட்டுமுயற்சியால் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு. தணிக்கை கிடைத்துள்ளது. மிக விரைவில் கொரியாவிலும் திரையிடப்படும். எப்பொழுதும் தமிழர்களின் சக்தி ஒற்றுமையில்தான் இருக்கிறது என்றார். 

 

 

செய்தி்த் தொகுப்பு முனைவர் மோகன்தாஸ், முனைவர் ஜெபக்குமார் எடிசன், முனைவர் முத்துபிரபு, முனைவர் இராமசுந்தரம்