Skip to main content

"எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி முதல்வரானாரே அது எப்படி?; கட்சியில் சேர்ந்த உடனே ஜெயலலிதா எம்பி ஆனாரே அது வாரிசு அரசியலில் வராதா...?" - கோவி. லெனின் அதிரடி

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

ரகத

 

தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டி பேசியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக இலங்கைத் தமிழர் உரிமை மீட்புக்குழுவின் உறுப்பினர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதியை குறிவைத்து அதிமுக, பாஜக தரப்பிலிருந்து அதிகப்படியான விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். அவருக்கு அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதிமுகவில் இதுவரை அமைச்சரானவர்களுக்கு முதல்வரானவர்களுக்கு என்ன தகுதி இருந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது ஜெயலலிதா கட்சியில் இருந்தாரா? இல்லை அவர் ஆட்சியில் இருந்த முதல் இரண்டு முறை அவர் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லையே, 81ல் அதிமுகவுக்கு வருகிறார், 84ம் ஆண்டுக்குள் கட்சியில் அனைத்து விதமான முக்கிய பொறுப்புக்களிலும் நியமிக்கப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்குச் செல்கிறார்கள். 

 

இந்த இடைப்பட்ட காலங்களில் அவருக்கு என்ன தகுதி வந்துவிட்டது என்று நினைக்கிறீர்கள். அதைக்கூட விட்டுவிடலாம், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு யார் முதல்வராகப் பொறுப்பேற்றது, ஜானகி அம்மையார்தானே, அவர் எம்ஜிஆர் மறைவுக்கு முன்பு என்ன பொறுப்புக்களிலிருந்தார். ஏதாவது கட்சியின் முக்கிய பொறுப்புக்களிலோ அல்லது அமைச்சரவையில் அமைச்சராகவோ அவர் இருந்தாரா? அப்புறம் எப்படி அவர் முதல் அமைச்சராக மாறினார். 

 

இது எல்லாம் வாரிசு அரசியலில் சேராதா? எம்ஜிஆர் மறைந்த பிறகு தானும் உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று ஜெயலலிதா கூறினாரே? அதை இல்லை என்று எடப்பாடி சொல்வாரா? அதிமுகவின் வரலாற்றை இப்படி வைத்துக்கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் என்று எடப்பாடிக்குச் சொல்ல எவ்வித தார்மீக தகுதியும் இல்லை. எனவே வாரிசு என்பதை அடிப்படையாக வைத்து இவரை விமர்சனம் செய்பவர்கள் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற ஒன்றாகவே கருத முடியும்.