வெள்ளிக்கிழமை ஐநா சபையின் 74 ஆவது மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசிய போது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஐநா அலுவலகத்திற்கு வெளியே பாகிஸ்தானின் சிறுபான்மை குழுக்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் குரலின் மத்தியில் மிகமுக்கிய குரலாக ஒலித்தது 32 வயது பாகிஸ்தான் பெண் ஒருவரின் குரல். அவர்தான் குலலை இஸ்மாயில்
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பிறந்தார் இவர். ஆப்கானிஸ்தான் எல்லை என்பதால் எப்போதும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அறிவிக்கப்படாத கட்டுப்பாட்டிலேயே இருக்கும் இப்பகுதியில் பிறந்து, வளர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கான போராட்டங்களை இளம் வயது முதல் முன்னெடுத்து வந்துள்ளார். மக்களின் அமைதிக்காக போராடக்கூடிய அமைப்பு ஒன்றிலும் பங்குகொண்ட இவர், அதற்கு தலைவராகவும் இருந்தார்.
இந்தநிலையில் தான் சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். பாகிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த குற்றச்சாட்டு. இதனையடுத்து பாகிஸ்தான் அரசு இவரை தேடி வந்த நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தானிலிருந்து தப்பித்து இலங்கை வழியாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ள நிலையில், நேற்று அவரது போராட்டம் அமெரிக்க வீதிகளில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா சபையில் உரையாற்றிக்கொண்டிருந்த போது ஐநா சபையின் தலைமையகத்திற்கு வெளியே முஹாஜிர்கள், பஷ்டூன்கள், பலூச்சிகள், சிந்திகள் மற்றும் பல சிறுபான்மையினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் குலலை. பல எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தியபடி "பாகிஸ்தான் இராணுவம் அரசியலில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய குலலை இஸ்மாயில், "பயங்கரவாதத்தை ஒழிக்கும் பெயரில் பாகிஸ்தானில் அப்பாவி பஷ்டூன் மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இராணுவத்தின் தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. சித்திரவதை மையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை அவர்கள் விடுவிக்க வேண்டும். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் சர்வாதிகாரம் நடக்கிறது. ஆனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினால் பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டப்படுகிறோம்" என பேசினார்.
பாகிஸ்தானிற்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் எதிராக உலக அரங்கில் இதுவரை பல்வேறு நாடுகளிலிருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் அந்நாட்டு பிரதமர் ஐநாவில் உரையாற்றும் அதே நேரத்தில் அந்நாட்டு சிறுபான்மையின மக்கள் பலர் ஐநா தலைமையகத்திற்கு முன் திரண்டு நடத்திய இந்த போராட்டம் உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு ஒரு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள தனது பெற்றோர்களையும், அவர்களை போன்ற அப்பாவி மக்களையும் நினைத்து வருந்துவதாக கூறிய குலலை, அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து மக்களுக்காக போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.