ஊர்ப் பெயர்களைத் தமிழில் அழைப்பது போன்று ஆங்கிலத்தில் எழுதவும் உச்சரிக்கவும் தமிழக அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 1018 ஊர்களின் பெயர்களைத் தமிழக அரசு தமிழில் அழைப்பது போன்று ஆங்கிலத்திலும் மாற்றியுள்ளது. இது தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளதா அல்லது பல அறிவிப்புக்களைப் போன்று இதுவும் ஒன்றாகப் போகின்றதா என்பது போகப்போகத் தெரிய ஆரம்பிக்கும்.
அதற்கு முன்பு ஆங்கிலத்தில் நாம் எழுதுவதற்கும், தமிழில் நாம் அழைப்பதற்கும் மாறுபட்ட இடங்கள் சென்னை மாநகரில் மட்டும் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக 'எக்மோர்' பகுதியைத் தமிழில் 'எழும்பூர்' என்றும் ஆங்கிலத்தில் 'எக்மோர்' என்றும் அழைப்போம். 'சிந்தாதரிப்பேட்டை', 'திருவல்லிக்கேணி' முதலிய இடங்கள் எல்லாம் ஆங்கில உச்சரிப்புக்கும், தமிழ் உச்சரிப்புக்கும் நிறைய மாறுபாடு இருக்கும்.
இதை எல்லாம் தாண்டி தூத்துக்குடியை ஏதோ இத்தாலியின் ஒரு பகுதியைப் போல ஆங்கிலத்தில் TUTICORIN என்று அழைப்பார்கள். தமிழ் உச்சரிப்புக்கும், ஆங்கில உச்சரிப்புக்கும் துளி அளவு கூட சம்பந்தம் இருக்காது. அதைப் போலவே திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு பகுதியை ஆங்கிலத்தில் படிக்கும் போது பத்தலக்குண்டு என்று படிக்கும்படியாக இருக்கும். தஞ்சாவூர் என்பது ஆங்கிலத்தில் TANJORE என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தது. அது இனி தமிழைப் போன்றே ஆங்கிலத்திலும் (THANJAVUR) தஞ்சாவூர் என்றே அழைக்கப்படும்.
ஆனால் ஆங்கிலத்தில் TAMILNADU என்பதை மட்டும் 'ல்' என்ற எழுத்தை எடுத்துவிட்டு 'ழ்' சேர்ந்து அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்க பல்வேறு அனுமதிகள் பெற வேண்டும் என்பது ஒறுபுறம் இருந்தாலும், ழ் என்பதற்குப் பதிலாக Z போட்டு நாம் அழைக்க ஆரம்பித்தால் தமிழ்ஸ் நாடு என்று தமிழ் தெரியாதவர்கள் அழைக்க வாய்ப்பு உண்டு. எனவே இதை மட்டும் எதிர்காலத்தில் கூட மாற்ற வாய்ப்பு இல்லை. இதுவரை இருந்து வந்த இந்தப் பெயர் குழப்பத்திற்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால் தொடக்கத்தில் நாம் கூறிய வண்ணம் இந்த மாற்றம் செயல்படுத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.