Skip to main content

இப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில் 

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
k c palanisamy - sasikala - ops - eps

 

 

''சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக நடைபெறும்; அதில் மாற்று கருத்தே இல்லை'' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், ''இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!'' என இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சர்கள் இருவரும் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ளள நிலையில், 'ஜூம்' செயலி மூலம் அதிமுகவினரிடம் வாரம் இருமுறை பேசி வரும் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியிடம் இதுபற்றி கேட்டோம்.

 

அப்போது, ''எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் மட்டும் பலமாக இருப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியைவிட ஓரளவு ஆதரவு வைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் செல்வாக்கு மிக்க நபர் அதிமுகவில் யாரும் இல்லை. 

 

எல்லோரும் இணைந்த ஒன்றுபட்ட அதிமுகவையே தொண்டர்கள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், நான், சசிகலா இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவை முன்னெடுத்து எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என பார்த்து சீட் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.

 

யாருடைய ஆதரவாளர் என்பதை விட, யார் நின்றால் வெற்றி பெற முடியும் என்பதை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். உங்களுக்குள் பதவி சண்டையை போட்டு ஆட்சியை பலி கொடுத்துவிடாதீர்கள் என்றும் தொண்டர்கள் சொல்கிறார்கள்.

 

எனவே தேர்தலுக்கு பின்னரே முதலமைச்சரை தேர்வு செய்வது உகந்ததாக இருக்கும். முன்பே சொன்னால் வாக்குகள் சிதறும். ஜாதி ரீதியிலான மண்டல ரீதியிலான விசயங்கள் வீழ்ச்சிகளை உருவாக்கும். தேர்தலில் வெற்றியை பாதிக்கும்'' என்கிறார் கே.சி.பி.