உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றம் கூட்டம் ஆகஸ்ட் 7–ந் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தொடர் முடிந்ததும் கவர்னர்களை சந்திக்கவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சா.
குறிப்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் கவர்னர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும், அந்த ஆலோசனையில் கவர்னர்களிடம் சில முக்கிய அசைன்மெண்ட்டுகளை கொடுக்கவிருப்பதாகவும் டெல்லியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் டெல்லிக்கு அழைக்கப்படவிருக்கிறார். சுதந்திர தினம் முடிந்ததும் தமிழக கவர்னருடன் ஆலோசிக்கிறார் அமித்ஷா.
இது குறித்து விசாரித்தபோது, ‘’தமிழக முதல்வர் எடப்பாடி உள்பட 15 அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஏற்கனவே தமிழக கவர்னர் மாளிகை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ஊழல் புகார்களின் கோப்புகளை தூசு தட்ட முடிவு செய்துள்ளது டெல்லி. அதற்கேற்ப, சி.பி.ஐ. மற்றும் வருமானவரிதுறையிடமிருந்தும் கனமான கோப்புகள் கடந்த வாரம் மத்திய உள்துறைக்கு நகர்ந்துள்ளன. இதனை மையப்படுத்தி விவாதிக்கவே தமிழக கவர்னர் அழைக்கப்படவிருக்கிறார் ‘’ என்கின்றன டெல்லி தகவல்கள்.
சி.பி.ஐ. மற்றும் வருமானவரித் துறைகளிடமிருந்து தனது அமைச்சரவை சகாக்களின் கோப்புகள் அமித்ஷாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி, அது குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்துள்ளார். டெல்லியை நினைத்து அமைச்சர்கள் பலருக்கும் இப்போதே கிலி பிடித்திருக்கிறது.