தமிழகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதனை பாஜக பயன்படுத்தி வரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசியதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து திமுகவின் இள.புகழேந்தியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " அமித்ஷாவுக்குத் தமிழ்நாடே புதுசு. அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இப்போது அவர்களுக்கு ஒரு நப்பாசை வந்துள்ளது. அமித்ஷா எப்போதும் அரசுக்காக இருப்பதில்லை. தனியாருக்காகவே வேலை செய்பவர்.
மோடி, அமித்ஷா இருவருடைய சிந்தனைகள் என்பது அரதப்பழசானது. சனாதனம், வர்ணாசிரமம் இதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர்கள். இதைத் தாண்டி அவர்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பமாட்டார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டின் மீது ஒரு காதல் பிறந்துள்ளது. அதனால் வரும்போது எல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசுகிறார்கள்.
அமித்ஷாவைப் போன்றவர்கள், மத வெறி ஆசை கொண்டவர்கள் இதுவரை இருந்ததில்லை என்ற வெற்றிடம் தமிழகத்திலிருந்து வந்துள்ளது. குஜராத்தில் உத்தரப்பிரதேசத்தில் அந்த மக்களை ஏமாற்றியதைப் போல் இங்கே அவர்கள் செய்ய நினைக்கிறார்கள். அதற்காகத் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்ற கதையை அவர்களால் ஆன முடியச் சொல்லிப் பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சியைப் பார்த்து இந்திய ஒன்றியத்தில் உள்ள முதல்வர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். மிகச் சிறப்பான ஆட்சியை இந்தியாவில் யாரும் கொடுக்காத வகையில் வழங்கி வருகிறார். நீங்கள் இத்தனை வருடங்களாகக் குஜராத்தில் ஆட்சியிலிருந்தீர்களே என்ன செய்துள்ளீர்கள், எத்தனை மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்துள்ளீர்கள், பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளதில் பாதியாவது வைத்துள்ளீர்களா? அப்புறம் எந்த நம்பிக்கையில் தமிழகத்தில் ஆட்சி சரியில்லை, நிர்வாகம் சரியில்லை என்று கதை அளந்து விடுகிறீர்கள். தமிழக அரசைப் பற்றிப் பேச உங்களுக்கு கூச்சமாகவல்லவா இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் ஆண்ட மாநிலத்தில் கூட நீங்கள், நாங்கள் செய்ததில் பாதி அளவு கூடச் செய்யவில்லை. அப்புறம் எந்த நம்பிக்கையில் எங்களுடன் போட்டிப்போட நினைக்கிறீர்கள்.
மேலும் அந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் தொடர்பாகப் பேசிய அமித்ஷா திமுகவில் வாரிசு அரசியல் நடந்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவிலும் தலைமை இல்லாத தன்மை நிலவுவதால் அதனை நாம் பயன்படுத்தி பாஜகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நான் ஒன்றைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன், தகுதியும் திறமையும் இருக்கும் யாரையும் கட்சி வரவேற்கும், மக்களுக்கு அவர்கள் தொண்டாற்றுவார்கள். அதை நாம் எப்படித் தடுக்க முடியும். பாஜகவில் பதவியில் இருப்பவர்கள் குடும்பத்தினர் எல்லாம் அரசியலுக்கு வருவதில்லையா? உங்கள் மகனை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக்கி கோடிகோடியாக பணத்தை வைத்துள்ளீர்கள்.
அரசு வேலைகளை எல்லாம் தனியாருக்குக் கொடுத்து அதன் மூலம் அவரின் மகன் வருமானம் பார்த்து வருகிறார். மக்களுக்கு இதுவரை உழைத்துள்ளார்களா என்றால் ஒரு துரும்பைக் கூட இதுவரை அவர்கள் போட்டிருக்கமாட்டார்கள். திமுக அழிந்து போக வேண்டும், நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய நபராக நீங்கள் இருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் எங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கும்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு போங்கள் என்று சிறையில் கூறினாலும் நாங்கள் அப்படி வளரவில்லை சிறைச்சாலையில் தொடர்ந்து இருக்கிறோம் என்று ஓராண்டுக்கு மேல் சிறையிலிருந்தவர் எங்கள் தளபதி. உங்களைப் போல் காவல்துறைக்குப் பயந்து ஒளிந்து வாழவில்லை. எங்களைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்றார்.