அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. வியூகம்' என்கிற தலைப்பில் கடந்த நக்கீரனில் வெளியான செய்தி ஆளுங்கட்சியில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக சில அதிரடி நட வடிக்கைகளை எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நடந்துமுடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கான பலத்தை எடப்பாடி அரசு பெற்றிருந்தாலும் அதனை உடைக்கும் முயற்சியில் இருக்கிறது தி.மு.க. இதற்கு வசதியாக, சபாநாயகர் மீது கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாமா? என்கிற யோசனையும் தி.மு.க.வில் விவாதிக்கப்படுகிறது என்கிறார்கள். இந்த மனமாற்றத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கிறதாம். அதாவது, சபாநாயகர் தனபாலும் தி.மு.க. தலைமையும் தற்போது நட்பு பாராட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் சபாநாயகருக்கு எதிராக என்பதை தவிர்த்து முதல்வருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பதே தி.மு.க.வின் யோசனை என அறிவாலயத் தரப்பில் எதிரொலிக்கிறது.
இந்தச் சூழலில், உளவுத்துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை அதிக நேரம் விவாதித்திருக்கிறார் எடப்பாடி. அதன் தொடர்ச்சியாகவே, திங்கள் காலை 11 மணிக்கு தனது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க் களுடன் நீண்ட நேரம் ஆலோசித்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிவதற்கான ஆலோசனை என சொல்லப்பட்டாலும் அதில் பல்வேறு விசயங்கள் பேசப்பட்டுள்ளன.
உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஆட்சிக்கான பெரும் பான்மையை உடைக்க தி.மு.க. ரகசியமாக காய்களை நகர்த்தி வருகிறது என உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்கள் ஏற்கனவே முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், தி.மு.க.வின் திட்டமாக அ.தி.மு.க.வின் 15 எம்.எல்.ஏ.க்களை இழுக்க வலைவிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் 7 பேர் சிக்கியுள்ளனர் என நக்கீரனில் வந்த செய்தியால் மேலும் சீரியஸாகி விட்டார் எடப்பாடி. அவர்கள் யார், யார் என்பதை கண்டறியுமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அதிகாரிகளும் சுறுசுறுப்பாக இறங்கினார்கள். ஆட்சியை அகற்ற தி.மு.க.வால் முடியும் எனில் தி.மு.க. விற்கு உதவுவதாக பல பேர் ரகசியமாக சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்கிற தகவல் கிடைத்தது. அதன்படி, 30 எம்.எல்.ஏ.க்கள் சந்தேக லிஸ்ட்டில் வந்தனர். இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஆட்சிமீது அதிருப்தி இருக்கிறது. இதனை எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள். உடனே 30 எம்.எல்.ஏ.க்களையும் கண்காணிக்குமாறு உளவுத்துறையைக் கேட்டுக்கொண்டார் எடப்பாடி.
மேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அசைன்மெண்டில் இருக்கும் தி.மு.க.வின் திருச்சி நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி ஆகிய மூவரின் நடவடிக்கைகளையும் க்ளோஸாக வாட்ச் பண்ணவும் உத்தரவிடப்பட்டது. இதையறிந்து, உளவுத்துறையால் 30 எம்.எல்.ஏ.க்கள் + தி.மு.க. புள்ளிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எடப்பாடிக்கு சொல்லப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில்தான், உளவுத்துறை சொன்ன யோசனையின்படி, அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர்''என விவரித்தனர். இதுகுறித்து அ.தி.மு.க. மா.செ.க்கள் சிலரிடம் பேசியபோது, கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டமாக எடப்பாடி இதனை நடத்தவில்லை. வீட்டிலேயே வைத்துக் கொண்டார். எல்லோ ரிடமும் தோல்விக்கான காரணங்களை கேட்டுவிட்டு, "இந்த ஆட்சியை கவிழ்க்க அல்லது கலைக்க ஸ்டாலின் கடும் தவம் செய்துகொண்டிருக்கிறார். இனி இருக்கும் 2 வருடமும் ஆட்சிக்கு சிக்க லில்லாமல் இருக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் அறிவுறுத்தினேன். ஆனால், வலிமையான கூட்டணி இருந்தும் ஜெயிக்க முடியவில்லை' என சொன்னார் எடப்பாடி.
அப்போது பேசிய எம்.எல்.ஏ.க்களும் மா.செ.க்களும், "கூட்டணி பலமாக தெரிந்தாலும் தோழமைக் கட்சிகளின் வாக்குகள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்கவில்லை. குறிப்பாக, ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் நம்மை கைவிட்டுவிட்டனர். பா.ஜ.க.வுடன் கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்' என விளக்கமளித்திருக்கிறார்கள்.
அதற்கு எடப்பாடி, "போனது போகட்டும். உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதில் தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். அதில் சீரியசாக இருங்கள்' என அட்வைஸ் செய்த அவர், "ஆட்சியை கவிழ்க்க நம் எம்.எல்.ஏ.க்களுக்கு தி.மு.க. வலை விரிக்கிறது. நீங்கள் யாரும் அந்த வலையில் சிக்கமாட்டீர்கள் என தெரியும். தொடர்ந்து உங்களை அப்ரோச் செய்வார்கள். அவர்களின் ஆஃபர்களுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு என்ன தேவையோ அது சரி செய்யப்படும். இந்த ஆட்சியை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும்' என அழுத்தமாக சொன்னார் எடப்பாடி. அதனை அப்படியே பலரும் கேட்டுக்கொண்டனர் என சுட்டிக்காட்டினர்.
உளவுத்துறையின் சந்தேகப் பட்டியலிலிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் மட்டும் தனியாகப் பேசியிருக்கிறார் முதல்வர். அவர்களிடம் தனது கோபத்தை காட்டவில்லை. கோபம் காட்டினால் அதிருப்தி அதிகமாகிவிடும் என யோசித்து மென்மையாகப் பேசி, அவர்களுக்கு சில உத்தரவாதங்களை தந்திருக்கிறார். அவர்களும் பாசிட்டிவ்வாக பதில் சொல்ல, முதல்வருக்கு நிம்மதி கிடைத்துள்ளது. மேலும், மா.செ.க்கள் சிலரிடம் சந்தேக லிஸ்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கவும் சொல்லியிருக்கிறார் முதல்வர்'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.