சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சமத்துவம், சமூகநீதி தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது, "ஜனநாயகம் என்ற அமைப்பு உருவாகிய பிறகே சமத்துவம் என்ற கோட்பாடு உருவானது. ஜனநாயகம் இருந்தால்தான் சமத்துவம், சமத்துவம் இருந்தால்தான் ஜனநாயகம். வெறும் ஓட்டு போட்டு ஒரு அரசை தேர்ந்தெடுப்பது மட்டுமே ஜனநாயகம் என்று நாம் புரிந்துகொள்ளக் கூடாது. 51 வாக்குகள் பெற்றவர்கள் வெற்றி பெற்றார்கள், 49 வாக்குகள் பெற்றவர்கள் தோல்வி அடைந்தார்கள் என்ற எண்ணிக்கை பெரும்பான்மைதான் ஜனநாயகம் என்று நாம் ஒருபோதும் நினைக்க கூடாது. ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதிப்பது. கருத்துக்களை அனுமதிப்பது. யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் அவரின் உணர்வுகளை மதிப்பது. மாற்றுக் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அனைத்தையும் சொல்ல அனுமதிக்க வேண்டும். அது குற்றம் சுமத்துகின்ற கருத்தாக இருக்கலாம், பழி சுமத்துகிற கருத்தாக இருக்கலாம், முற்போக்கு கருத்தாக இருக்கலாம் அல்லது பிற்போக்கு கருத்தாக இருக்கலாம். இவை அனைத்தையும் நாம் அனுமதிக்க வேண்டும். உணர்வுகளுக்கு எப்போதும் நாம் அனுமதி அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை அதுவாகத்தான் இருக்கும். அதில் இருந்துதான் சமத்துவம் பிறக்கிறது. பெரிய ஆள் சொல்வதைத்தான் கேட்பேன், சின்ன ஆள் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று சொல்வதெல்லாம் சமத்துவம் இல்லை.
கட்சியின் பொதுச்செயலாளர் சொல்வதைக் கேட்பேன், தொண்டர் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று கூறுவது எல்லாம் சமத்துவம் இல்லை. யார் என்ன கருத்து சொன்னாலும், கூறுங்கள் கேட்கிறேன் என்று சொல்வதுதான் ஒரு நல்ல சமத்துவமாக இருக்கும். சமத்துவம் என்றால், அனைவரும் ஆறடி உயரத்தில் இருக்க வேண்டும் என்று நாம் விரும்ப முடியுமா? அனைவரும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்ப முடியுமா? இது சமத்துவம் இல்லை. அல்லது எல்லோரும் மோடி மாதிரி ஆடை அணிய வேண்டும் என்று விரும்ப முடியுமா? அவ்வாறு அணிந்துகொள்ள சாத்தியம்தான் இருக்கிறதா? இந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இது இயற்கையான ஒன்று. மேடு இருந்தால் பள்ளம் இருக்கும்; பகல் இருந்தால் இரவு இருக்கும். இதை மாற்ற முடியாது. ஆனால் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் அவை இருக்குமென்றால் அதனை யாரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெண்கள் எல்லாம் கருத்தே சொல்லக் கூடாது என்ற அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தாய் மாமன் அவன், அவனுக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று கூறும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இந்த உளவியல் இந்தச் சமூகத்தில் எப்படி உருவானது என்று பார்க்க வேண்டும். இந்த வகையான சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு எந்த மாதிரியான அணுகுமுறையை இங்கே பின்பற்றி இருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும். சாதியின் அடிப்படையில் இந்தச் சமூகம் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்வதே நாம் சமூகநீதியைப் புரிந்துகொள்வதற்கான வழியாக இருக்கும்" என்றார்.