நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இதுதொடர்பாக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு மனநல மருத்துவர் ஷாலினி உரையாற்றினார்.
அதில், " இன்றைக்கு பெண்களை தினத்தை கொண்டாடி வருகிறோம். ஆனால் இங்கு மேடையில் கருப்பு பெண்கள் தினம் என்று எழுதப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது இந்தியா சுதந்திரம் வாங்கிபோது பெரும்பாலானவர்கள் அதனை கொண்டாடிய போது பெரியார் மட்டும் அதனை கருப்பு தினமாக தன்னுடைய தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை அவர்கள் கட்சியிக்குள்ளேயே பலரும் ஏற்க மறந்த நிலையில், அவர் விடாப்படியாக இருந்தார். "ஆங்கிலேயர் ஆட்சியில் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே இருப்பவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் அவர்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளின் படி மக்களை பிரிப்பார்கள். எனவே இந்த விடுதலையை கருப்பு தினமாக கொண்டாடுங்கள்" என்று பெரியார் கூறினார். தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலைகள் அதனை மெய்பிக்கும் வகையிலேயே இருக்கின்றது.
அதன் ஒரு கட்டமாகவே இந்த சிஏஏ சட்டம் எல்லாம் வந்துள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம் என்ன? எதற்காக இதனை கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அவர்களுக்கு இந்த நாடு இந்து நாடாக வேண்டும். இது ஒன்றுதான் அவர்களின் அஜண்டா. இதற்காகத்தான் அவர்கள் இத்தனை கோல்மால்களை செய்து வருகிறார்கள். இந்த இந்து என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழும்புகிற்து. சிந்து நதியின் வாயிலாக அந்த பெயர் வந்ததாக இன்றளவும் சொல்லப்படுகின்றது. பைபிள் வாசகத்தில் அந்த வார்த்தை இருக்கின்றது. தனக்கு மட்டுமே சொந்தம் போலவும், அதனை தான் மட்டுமே கண்டுபிடித்து போலவும் அவர்கள் பேசி வருகிறார்கள்.
இது அனைத்துமே ஏமாற்று வேலைகள். அவர்களிடம் யாரும் ஆதாரங்களை காட்ட மாட்டார்கள், காட்டினாலும் ஏற்றுக்கொள்ளவா போகின்றோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். முஸ்லிம் மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் நீண்டநெடிய வரலாறு உண்டு. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த காலத்திலேயே அன்றைய மன்னர்கள் முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற மறுத்துவிட்டார்கள். ஆனால் இன்று நாட்டைவிட்டு அவர்களை வெளியேற்ற ஒரு கூட்டம் அலைந்துகொண்டு இருக்கின்றது. அது எப்பொதும் நடக்காது" என்றார்.