கரோனா உதவி வழங்குவதில் ஏற்பட்ட ஈகோ மோதல் மாவட்டத்துக்குள் இரண்டு அணிகளை உருவாக்கிவிட்டது. அப்படி உருவாகிய அணிகளின் லீடர்கள் மோதிக்கொள்ள, இதில் இரண்டு பக்கமும் சிக்கிக்கொண்டு நொந்துபோன இளைஞர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக என்பது ஆரணி, போளுர், வந்தவாசி, செய்யார் தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த மாவட்டத்தின் செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம். கடந்த பிப்ரவரி மாதத்தில், கரூர் பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் வாங்கிய பணத்தை தரவில்லை என எஸ்.பி அலுவலகத்தில் புகார் தர, நள்ளிரவில் விசாரணைக்காக தூக்கி வந்து விடியவிடிய விசாரணை நடத்தி, பணத்தை தந்துவிடுகிறேன் என உத்திரவாதம் தரவே விடுவிக்கப்பட்டார். இது உள்பட மேலும் சில காரணங்களால் சிவானந்தத்திடமிருந்து மா.செ பதவியை பறித்து மாவட்ட துணை செயலாளராக இருந்த வந்தவாசி தரணிவேந்தனிடம் தந்தது தலைமை.
இந்நிலையில்தான் கோஷ்டி பிரச்சனை வெடித்திருக்கிறது. இதுப்பற்றி ஆரணி திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் சிவானந்தம். தலைமைக்கு நெருக்கமான தெற்கு மா.செவும் முன்னாள் அமைச்சருமான வேலுவின் முழு ஆசி இருந்தது. அதனால்தான் 2014ல் எம்.பி சீட், 2016ல் சிவானந்தம் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் என வாங்கி தந்தார். அவர்கள் தோற்றுவிட்டார்கள். இருந்தும் மா.செ பதவியில் நீடித்து வந்தார் சிவானந்தம். பணப்பிரச்சனையில் சிவானந்தத்திடமிருந்த, மா.செ பதவி பறிக்கப்பட்டதும், அந்த வருத்தத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். அதேநேரத்தில் புதியதாக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தரணிவேந்தன், சிவானந்தத்தை அழைத்தால் வேலு கோபித்துக்கொள்வார் என அவரை அழைப்பதில்லை.
சிவானந்தம் மூலம் பதவிக்கு வந்தவர்கள் மாவட்டத்தில் குறிப்பாக ஆரணியில் பலர் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் அவர் சீட் தந்தவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். கரோனா காலத்தில் ஆரணியில் உள்ள சிவானந்தம் ஆதரவாளர்கள் அவரை வைத்து உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இதை மாவட்ட பொறுப்பாளராக உள்ள தரணிவேந்தனும், ஆரணி பகுதியில் உள்ள சில ஒ.செ.க்களும் கேள்வி எழுப்பினர். சிவானந்தம் உதவி வழங்கும் நிகழ்ச்சியை மட்டும் ஏன் முகநூல், ட்விட்டரில் போடுகிறீர்கள் என தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகளிடமும் கேள்வி எழுப்பினார்கள்'' என்று பிரச்சனையை விவரித்தார்.
வந்தவாசியை சேர்ந்த ஒரு கட்சி நிர்வாகியிடம் கேட்டபோது, "சிவானந்தம், பதவியில் குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்து அரசியல் செய்து மற்ற சமுதாயத்தினரை பகைத்துக்கொண்டார். சிவானந்தம் மாவட்ட செயலாளராக இருந்தபோது, முடக்கப்பட்டிருந்த ஒ.செ.க்கள், அவரது மா.செ பதவி பறிக்கப்பட்டதும் அவர்கள் குஷியாகி விட்டனர். அவர்கள் மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தனை அழைத்துவந்து நிகழ்ச்சி நடத்தியது, சிவானந்தத்தை கோபப்படுத்தியது. சிவானந்தம் ஆதரவாளர்களான வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விண்ணமங்களம் ரவி, முன்னாள் சேர்மன் வடுக்கசாத்து வெங்கடேசன், சிட்டிங் ஆரணி வைஸ்.சேர்மன் ராஜேந்திரன் போன்றோர் தங்களது பகுதிகளில் கரோனா உதவிகளை சிவானந்தத்தை வைத்து வழங்கினர், ஆரணி, மேற்கு ஆரணி, ஆரணி ஒ.செ.க்கள், "எங்களை கேட்காமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம்?'' என கேள்வி எழுப்பி, மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தனிடம் பஞ்சாயத்து வைத்தனர்.
அதோடு, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சிலர் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மாவட்ட பொறுப்பாளரிடம் கடிதம் தந்தனர். இதனை கேள்விப்பட்டு நாங்களே விலகிக்கொள்கிறோம் என தகவல்தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் புஷ்ப ராஜ், ஆரணி தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சண்.கதிரவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் உட்பட 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக முகநூலில் பதிவிட்டார்கள், பின்னர் நீக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.
கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படும் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் புஷ்பராஜிடம் கேட்டபோது, "தகவல் தொழில்நுட்ப அணியின் பணி என்பது மிகவும் நுட்பமானது. அதனை திட்டமிட்டு செய்ய வேண்டுமென மேலிடம் உத்தரவு, அந்த பணிகளை செய்து வந்தோம், அதில் சில தடங்கல்கள் வந்ததால் நான் ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கிறேன்'' என்றார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் நிர்வாகிகளாக உள்ளவர்களோ, "எங்களோட வேலை கட்சி நிகழ்ச்சிகளை போட்டோ எடுத்து முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப்பில் பகிர்வது மட்டுமல்ல, அதையும் தாண்டி கட்சிக்காக பல விதமான பணிகளை செய்துக்கிட்டு வர்றோம். கட்சி நிர்வாகிகளுக்கே அதுப்பற்றி தெரிவதில்லை, இதனால் எங்களை மதிப்பதில்லை. சிவானந்தம் பதவி பறிக்கப்பட்டு தரணிவேந்தன் வந்ததும், சிவானந்தம் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி பலரை ஒதுக்கினார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்களில் எங்கள் அணியை சேர்ந்த புஷ்பராஜ், ஆரணி சன்கதிரவன், போளுர் ராஜா போன்றவர்கள். கட்சி நிர்வாகிகளிடம் கட்சி நிகழ்ச்சிகள் எது நடத்தினாலும் எங்கள் பிரிவுக்கு தகவல் சொல்லுங்கள் எனச் சொல்லப்பட்டது.
எங்கள் தலைவர் மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்களிடம், வீடியோ கான்பரஸ் முறையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். இதுப்பற்றிய தகவல் எங்களுக்கு சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்கள். அதற்காக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை புஷ்பராஜ் தொடர்பு கொண்ட போது, 3 நிர்வாகிகள் போனை எடுக்கவேயில்லை. அவர்களை நேரில் சந்திக்க அந்த பகுதி அணி நிர்வாகிகளை அனுப்பி, ஒ.செ.க்களின் போன்களில் ஆப் இன்ஸ்டால் செய்து, நெட் பேக் போட்டு பேச வைத்தார். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரின் பெயரையும் பதிவிட வேண்டும் என்பது எங்களுக்கான உத்தரவு. நீ இந்தந்த பெயர்களை மட்டும்தான் பதிவிடனும் அப்படின்னு ஒன்றிய, நகர நிர்வாகிகள் உத்தரவு போடறாங்க. ஒ.செ, மாவட்ட நிர்வாகிகள் சொல்றது போல செய்தால் பெயர் விடுபட்டவங்க எங்களை திட்டறாங்க. இவர்கள் கோஷ்டி பிரச்சனையில் சிக்கிக்கிட்டு முழிக்கறோம். அதனால்தான் அவர்கள் ராஜினாமா கடிதம் தந்துவிட்டார்கள். இந்த ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ள பி.டி.ஆர்.பி.தியாகராஜன் யோசிக்கிறார்'' என்றார்கள்.
கடந்த மே 30ந்தேதி, திருவண்ணாமலை நகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், வடக்கு மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பற்றி தகவல் அறிந்த முன்னாள் மா.செவான சிவானந்தம், தன்னையும், தனது ஆதரவாளர்களையும் ஒதுக்குவது குறித்து நியாயம் கேட்க தனது ஆதரவாளர்களை 15 கார்களில் திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். முன்னாள் அமைச்சர் வேலு கலந்து கொண்ட இந்த கூட்டத்துக்கு சிவானந்தத்தை மட்டும் அனுமதித்தனர். மாவட்ட கமிட்டி கூட்டத்துக்கு பின், காரசாரமாக நடந்த பஞ்சாயத்தின் இறுதியில் முன்னாள் மா.செ சிவானந்தத்தை ஒதுக்கிவைக்காமல் எல்லா நிகழ்ச்சிக்கும் அவரை அழையுங்கள் என தரணிவேந்தனிடமும், ஈகோ பார்க்காமல் தற்போதைய மாவட்ட பொறுப்பாளருக்கு ஒத்துழையுங்கள் என சிவானந்தத்திடம் கூறினார் வேலு என்கிறார்கள். கட்சி அலுவலகத்தில் இருந்து வேலுகாரில் வெளியே வரும்போது, தங்களை மதிக்கவில்லையென சிவானந்தம் ஆதரவாளர்கள் கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதுபற்றி கருத்தறிய சிவானந்தம் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள அவர் போனை எடுக்கவில்லை. வடக்கு மா.செ தரணி வேந்தனிடம் நாம் இதுக்குறித்து கேட்டபோது, "கலைஞர் பிறந்தநாள், கட்சிப்பணிகள் குறித்த மாவட்ட கமிட்டி கூட்டம் அங்கு நடை பெற்றது. அதற்காக ஆரணி பகுதியில் இருந்து கும்பலாக வந்தார்கள், கரோனா பரவி வரும் நேரத்தில் எதற்காக கும்பலாக வந்தீர்கள் எனக்கேட்டதால் பிரச்சனையானது. நான் அனைவரையும் அனுசரித்து போகிறவன், அப்படித்தான் கட்சி பணிகளை செய்கிறேன், எங்களுக்குள் எந்த கோஷ்டி பிரச்சனையும் கிடையாது. தகவல் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் தனக்கு சொந்த பணிகள் உள்ளதாக கூறித்தான் என்னிடம் ராஜினாமா கடிதம் தந்துள்ளார்'' என்றார்.
கட்சி நிர்வாக ரீதியாக வடக்கு மாவட்டம் ஏற்கனவே வீக்கா இருக்கு. இவுங்க சண்டையால் வரும் தேர்தல் இன்னும் சிக்கலாகும்போல என வெதும்புகிறார்கள் கட்சியின் தீவிர பற்றாளர்கள்.