சமூக ஊடகங்களில் ஒரு செய்தி நேற்றிலிருந்து பரவி வருகிறது. அன்று காமராசர் தவறியபோது, மெரினாவில் நினைவிடம் அமைக்க காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இடம் கேட்டபோது, அன்றைய முதலமைச்சராய் இருந்த தி.மு.க தலைவரான கலைஞர், 'ஒரு முன்னாள் முதல்வருக்கெல்லாம் இடம் ஒதுக்க முடியாது' என்று சொல்லியதாக சொல்வதுதான் அந்த செய்தி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணியிடம் இது குறித்த விளக்கத்தைக் கேட்டோம்...
"இந்தக் கருத்தைப் பரப்புவது யார் என்று பார்த்தால், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பசுவதைத் தடுப்பு சட்டத்தில் அன்று காமராசரை உயிருடன் கொளுத்த முயற்சி செய்தார்கள். அப்பொழுது காமராஜருடைய பி.ஏ.வின் புத்திசாலித்தனத்தினால் வீட்டின் பின்வாசல் வழியாகத் தப்பிக்கிறார். இல்லை என்றால் காமராசர் அன்றே அவர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பார். இப்படி இருக்க, இன்னைக்கு திடீர்னு எங்க இருந்து காமராசர் மேல பற்று வந்துச்சு? அன்றைய பத்திரிகைகளைப் பார்த்தாலே தெரியும். முதலில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராசர் உடலை அடக்கம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, 'இல்லை அரசு மரியாதையுடன் காந்திக்கு பக்கத்தில் பண்ணலாம்' என்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் முடிவெடுத்தார்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் கலைஞர் மீதான விமர்சனங்களை காட்டவில்லை. மாறாக பா.ஜ.க. எப்படி அதில் வேலை செய்பவர்களின் மூளையை, மனநிலையை அழுகிப்போகச் செய்திருக்கிறது என்றும், எவ்வளவு கேவலமாகவும் வக்கிரமாகவும் அவர்கள் சிந்தனை இருக்கிறது என்றும்தான் காட்டுகிறது. இதற்காகத்தான் ராகுல் காந்தி அவர்கள் மனதில் அன்பை விதைக்கணும் என்கிறார். ஒரு மனிதர் 95 வயதாகி இறந்து போகிறார், தமிழ் நாட்டின் 5 முறை முதலமைச்சர், 13 முறை தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறைகூட மக்களால் தோற்கடிக்கப்படாதவர். இன்னிக்கு உலகம் முழுக்க அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கும் சூழலில், எவ்வளவு ஒரு அழுகிப்போன மனநிலையில் இருந்தால் இது போல் பேசிட்டு இருப்பார்கள்.
மற்ற எல்லா அரசியலையும் விட்டுவிடுங்க ஒரு 95 வயது வரை வாழ்ந்த முதியவர் இறந்து போகிறார், அவர் ஒரு சாதாரண மனிதன் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மனிதருடைய இறப்பில் இந்த மாதிரியான ஒரு மன நிலையோடு திரிபவர்கள், சாதாரண காலங்களில் மாட்டின் பெயரால் மனிதர்களை கொள்வதற்கும், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவனை விடுதலை செய்யவேண்டும் என்றும் ஒரு கட்சி போராடுவதற்குமான மன நிலை இங்கிருந்துதான் ஊற்றெடுக்கிறது. எனக்கு என்ன அச்சம் என்றால் பா.ஜ.க. என்னும் ஆர்.எஸ்.எஸ் அரசியல் சித்தாந்தம் கொண்ட ஒரு கட்சி அவர்கள் கட்சிக்காரர்களின் மனதில் விஷத்தை மட்டும் இல்லை, அவங்க மனதே அழுகிப் போகக்கூடிய அளவிற்கான விதையையும் சேர்த்து விதைக்கிறார்கள், இது முதலில் அவர்களுக்கு ஆபத்து, அடுத்து அவர்கள் குடும்பத்திற்கும், அடுத்தது தேசத்திற்கும் ஆபத்தானது. அதனால் அவர்கள் இந்த மன நிலையில் இருந்து சீக்கிரம் விடுபட்டு ஒரு ஆரோக்கியமான மன நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.