கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில் கணினி இயக்கும் பணிக்கு 2012 ஆம் ஆண்டில் அதே ஊரைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை சேர்த்துள்ளனர். அதன்பிறகு இந்த அலுவலகத்தில் சுமார் 8 வட்டாட்சியர்கள் பணிக்கு வந்து மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர். சிலர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த அலுவலகத்திலிருந்து மாதந்தோறும் முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு உதவித்தொகை அனுப்பப்படுகிறது. அதேபோல் விபத்தில் இறந்தவர்களுக்கு 1,02,500 ரூபாய் காப்பீட்டுத் தொகை, கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை என இந்த அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் சுமார் 20,000 பேருக்கு மேல் உதவி பெறுகிறார்கள்.
அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் பட்டியல் தயார் செய்து, கணினியில் பதிவேற்றம் செய்து கருவூலத்துறைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பப்படும். இப்பணிகள் அனைத்தையும் வட்டாட்சியர்களிடம் நம்பிக்கையைப் பெற்ற அகிலாதான் செய்வார். காலப்போக்கில் கணினியில் பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொண்ட அகிலா, கடந்த சில ஆண்டுகளாக சமூகநலத் துறையில் பயனாளிகளுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையில் உபரித் தொகையைத் தன் பெயருக்கும், தனது தாயார் விஜயா, கணவர் வினோத்குமார், சித்தப்பா மணிவண்ணன், உறவினர் பாலகிருஷ்ணன் உட்படத் தனது உறவினர்கள் ஏழு பேரின் வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பரிமாற்றம் செய்துள்ளார். அந்த வகையில் அவர் சுமார் ஆறு கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் ஒரு குழுவை அனுப்பி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அகிலாவிடம் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில், அகிலா பண மோசடி செய்ததும், அதிலிருந்து கிடைத்த தொகையில், திட்டக்குடி, கூத்தப்பன் குடிக்காடு பகுதியில் ஆடம்பரமான பங்களா வீட்டைக் கட்டியிருப்பதாகவும், சொகுசு கார்கள், லாரிகள், நகைகளை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே திட்டக்குடி சமூக நல வட்டாட்சியராகப் பணி செய்த ரவிச்சந்திரன், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அதே அலுவலகத்தில் ரெகுலர் வட்டாட்சியராகப் பணி மாறுதல் பெற்றுள்ளார். அவரிடமும் அதிகாரிகள் அகிலாவின் கையாடல் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், மாதந்தோறும் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் தொகையை அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தில் ரவிச்சந்திரனும் கையெழுத்திட்டபோதும், அகிலாவின் முறைகேட்டில் வட்டாட்சியருக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று கூறுகிறார்கள் அங்குள்ள ஊழியர்கள். இந்த வட்டாட்சியரின் நேர்மையான செயல்பாடு குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் குறிப்பிட்டிருக்கிறோம். மேலும் விசாரிக்கையில், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராமப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் இவர் குறித்து நல்ல விதமாகவே கூறுகிறார்கள்.
திட்டக்குடி இளமங்கலத்தைச் சேர்ந்தவரும், தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநிலச் செயலாளருமான ராமசாமி, “வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தனது நேர்மைத்தன்மையின் அடிப்படையில் படிப்படியாக உயர்ந்து துணை வட்டாட்சியராக, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றவர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை முதல் சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் வரை அனைத்தையும் நேரடியாகத் தலையிட்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பார். எனக்கு மட்டுமல்ல, இந்த வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலானவர்களுக்கு அவரது செயல்பாடுகள் தெரியும்” என்றார்.
சி.பி.ஐ. கம்யூனிஸ்ட் கட்சியின் கோடங்குடி சுப்பிரமணியன், “வட்டாட்சியர் ரவிச்சந்திரன் எந்தப் பாகுபாடும், எதிர்பார்ப்புமில்லாமல் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பவர். பயனாளிகளுக்கு உதவித் தொகை அனுப்புவதற்கு கையெழுத்திடும் பொறுப்பு அதிகாரியான அவர், ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை தினசரி போடும்போது பெரும்பாலான அதிகாரிகள் மேலோட்டமாகப் பார்த்துத்தான் கையெழுத்து போடுவார்கள். தங்களுக்கு கீழே செயல்படும் ஊழியர்களின் மீதான நம்பிக்கையின் பேரில் கையெழுத்திடுவதும் உண்டு. அதைப் பயன்படுத்திக்கொண்டு அகிலா, தனக்கும், தனக்கு வேண்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார். இந்த மோசடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வது நெருடலாக உள்ளது” என்றார்.
விசாரணை நடைபெற்று வருவதால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாதென்று வட்டாட்சியர் கூறிவிட்டார்.
அகிலாவிடம் இதுகுறித்து கேட்டபோது, “என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னிடம் ஆடம்பர வாகனங்கள், பங்களா இருப்பதாகக் கூறுவதும் தவறு” என முற்றிலும் மறுக்கிறார். யாரோ செய்யும் தவறுக்கு யாரோ பாதிக்கப்படக்கூடாது.