Skip to main content

ஒற்றை ஆளாய் சட்டமன்றத்தில் கர்ஜித்ததும்... உயிரைக் காத்துக்கொள்ள ஓடியதும்... பரிதியின் வாழ்க்கை    

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

தீவிர திராவிட பற்றாளர், சென்னை திமுக தளகர்த்தாவாக இருந்த, கழகத்தின் பிரபல பேச்சாளர் இளம்வழுதி. அவரது மகனாக 1959 நவம்பர் 11ந்தேதி சென்னையில் பிறந்தார் காந்தி. 10வது படிக்கும்போதே பெரியார் திடலில் உள்ள நூலகத்துக்குச்  சென்றுவிடுவார். அங்குதான் திராவிடம் குறித்து முழுமையாக அறிந்துக்கொண்டார். பெரியார் திடலில் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை பேசக்கற்றுக்கொண்ட காந்திக்கு 20 வயதாகும்போது திமுக மேடையில் பேசும் வாய்ப்பு முதன் முதலாக கிடைத்தது. அந்த பேச்சை காந்தியின் தந்தையும் மேடையில் அமர்ந்து கேட்டார். ஒருமுறை இவரது பேச்சை கேட்ட கலைஞர், பெயர் என்னவென கேட்க காந்தி என்றார். அந்தப் பெயரை பரிதிஇளம்வழுதி என மாற்றினார் கலைஞர். அதன்பின்பே காந்தி என்பவர் பரிதியானார்.

 

paridhi ilamvazhuthi



பேச்சு மட்டுமல்ல, அவரது சுறுசுறுப்பும் கலைஞரின் மகனாக அப்போது கட்சியினரிடம் அடையாளமாகியிருந்த ஸ்டாலினை கவர்ந்தது. பரிதி, அன்பகம் கலை, கீழ்பென்னாத்தூர் பன்னீர்செல்வம் போன்றவர்கள் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்காக போய் பணியாற்றியவர்கள். அதன்பின் ஸ்டாலினும் – பரிதியும் ஈருடல் ஓருயிராகிப்போனார்கள். 1980ல் கோபாலபுரம் திமுக இளைஞரணி என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். 1982ல் அதை கட்சியின் ஒரு அமைப்பாக அங்கீகரித்து தமிழகம் முழுக்க இளைஞரணியை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது, அதனை அங்கீகரித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியை உருவாக்க 5 பேர் கொண்ட குழுவை திமுக அதிகாரப்பூர்வமாக அமைத்தது. அந்தக் குழுவில் மூன்றாவதாக இருந்தவர் பரிதி. அதோடு சென்னை மாவட்டத்தின் இளைஞரணி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

1985ல் சட்டமன்ற தேர்தல், மாநில அமைச்சராகவும், பின்னர் மத்திய அமைச்சராகவும் இருந்த சத்தியவாணி முத்துவை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வேட்பாளராக திமுகவால் நிறுத்தப்பட்டார் பரிதி. அப்போது அவரது வயது 25. பாக்கெட்டில் நூறு ரூபாய் கூட இல்லாத பரிதி வேட்பாளர், அதுவும் மத்திய அமைச்சராக இருந்தவரை எதிர்த்து. ஸ்டாலின் தன் நண்பனுக்காக களமிறங்கி, நிதி திரட்டித்தந்தார். பரிதி வெற்றி பெற்றார். ஆனால், அந்தத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியிடம் தோற்றுப்போனார். தனது தோல்வியை மறந்து நண்பனின் வெற்றியை தனது வெற்றியாக நினைத்து தனது காரிலேயே பரிதியை சட்டமன்றம் அழைத்துச் சென்று, வாழ்த்தினார் ஸ்டாலின்.

 

stalin parithi



1988ல் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வானாலும் திமுக ஜாம்பவான்கள் மத்தியில் பத்தோடு பதினொன்றாக இருந்தவரை 1991 தேர்தல் தான் பரிதியை தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. 1991 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முன்னாள்  பிரதமர் இராஜிவ்காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றது. அந்தப் படுகொலை பழி திமுக மீது விழுந்ததால் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்ற 7 இடங்கள் தவிர மற்றயிடங்களில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. துறைமுகம் தொகுதியில் வெற்றி  பெற்றிருந்த கலைஞர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. திமுக வேட்பாளராக செல்வராஜ் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

சுயேட்சை வேட்பாளர் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட எழும்பூர் தொகுதி தேர்தல் நடைபெற்றது. ஜெ பதவிக்கு வந்திருந்த நேரம். இந்தத் தொகுதியில் வெற்றி பெற அனைத்து சட்டவிதிமீறல்கள் நடைபெற்றும் எழும்பூரில் பரிதி வெற்றி பெற்றார். சட்டமன்றத்துக்குள் பரிதி வந்தார். அதிமுக உறுப்பினர் ஒருவர், தமிழகத்தில் திமுக செத்துவிட்டது என கிண்டலாகப் பேசினார். 'திமுக மறைந்துவிட்டதாக யாரும் எண்ணவேண்டாம், கல்லறையினையும் கிழித்துக்கொண்டு வருபவன்தான் உதயசூரியன், இதோ வந்திருக்கிறேன் பார் பரிதியாக' என்று சொல்ல சட்டமன்றமே ஸ்தம்பித்தது.

1991ல் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின்போது, விடுதலைப்புலிகள் பற்றிய பேச்சுவர அந்த காரசார விவாதத்தில், காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்களால் தாக்கப்பட்டு அவரின் வேட்டி – சட்டை உருவப்பட்டு உள்ளாடைகளோடு சட்டமன்றத்தை விட்டுத் தூக்கி வெளியே வீசப்பட்டார் பரிதி. அன்றிலிருந்து தனது உடையை மாற்றினார். சட்டமன்றத்தில் வெள்ளை வேட்டி – வெள்ளை சட்டையாக தெரிந்த அந்தக்கூட்டத்தில் கறுப்பு பேன்ட் – வெள்ளை சட்டையென தனித்துத் தெரிய தொடங்கினார் பரிதி.

 

parithi jeyalalitha



சட்டமன்றம் கூடும்போதெல்லாம், பரிதியின் கேள்விகளை சமாளிப்பதே பெரும் தலைவலியாக இருக்கும் ஜெ. தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு. சட்டமன்றத்தில் அவரது கர்ஜனை நடக்கும்போதெல்லாம் பரிதியை அபிமன்யூ என வர்ணித்து தினம் தினம் கட்டுரை எழுதினார் கலைஞர். இந்த உத்வேகம் சட்டமன்றத்துக்கு வெளியேவும் பரிதியை கர்ஜிக்க வைத்தது. இதனால் உரிமை மீறல் பிரச்சனைகளை எதிர்கொண்டார்.

1993ல் சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக இருந்தார். அப்போது சட்டசபையில் அமைச்சராக இருந்த சோமசுந்தரத்துக்கும் – பரிதிக்கும் இடையே காரசார விவாதம். பரிதி,  2 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களே குடும்பம் நடத்த முடியாமல் தடுமாறுகிறார்கள், 1 ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வர் ( ஜெ ) எப்படி சந்தோஷமாக இருக்கிறார் என கேள்வி எழுப்ப ஜெவின் முகம் சிவந்தது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, 'இப்படிப்பட்ட மரியாதை தெரியாத மனிதரை நான் பார்த்ததேயில்லை' என பரிதியை சாடினார். உடனே பரிதி, மரியாதையுடன் முதல்வரின் காலில் விழும் சபாநாயகரை நானும் இதுவரை பார்த்ததேயில்லை என்றபோது சேடப்பட்டியால் பதில் சொல்ல முடியவில்லை. வழக்கம் போல் தூக்கி வெளியே வீசுங்கள் என உத்தரவிட்டார்.

பரிதியின் இந்த அதிரடிக்கு எதிரடியாய் 1996 – 2000 ஆம் காலக்கட்டத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற துணை சபாநாயகராக்கினார் கலைஞர். கட்சியின் மா.செ பதவி, கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி என பரிதியை தேடிவந்தது.

 

stalin at parithi



2001 சட்டமன்ற தேர்தல் எழும்பூர் தொகுதியில் மீண்டும் நின்றார் பரிதி. அதிமுக சார்பில் பரிதிக்கு எதிர்ப்பாக ஜான்பாண்டியன் நிறுத்தப்பட்டார். தேர்தல் நாளன்று, தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளை பார்வையிட சென்ற பரிதியை கொலை செய்ய ஜான்பாண்டியன் ஆட்கள், அவரை சாலையில் விரட்டினார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர் புரசைவாக்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் வீட்டுக்குள் நுழைந்து தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார். ஜான்பாண்டியனிடமிருந்து அவர் தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார், அந்தத் தொகுதி மக்கள் ஜான்பாண்டியனிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொண்டார்கள். ஜான்பாண்டியனை விட 100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் பரிதி.

2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதே எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார் பரிதி. கலைஞர் தனது மந்திரி சபையில் பரிதியை அமைச்சராக்கினார். பின்னர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2013ல் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவினார். அதன்பின் அவர் புகழ் மங்கதொடங்கியது, அவரது வாழ்க்கை பயணம் 2018 அக்டோபர் 13ந்தேதியோடு முடிவுக்கு வந்தது.

'திமுக மறைந்துவிட்டதாக யாரும் என்னவேண்டாம், கல்லறையினையும் கிழித்துக்கொண்டு வருவான் உதயசூரியன்' என கம்பீரமாக கர்ஜித்த பரிதி மௌனமாய் படுத்திருப்பதை அவரது இளமைக் கால இயக்க நண்பர் ஸ்டாலின் அருகில் நின்று சோகத்துடன் பார்த்தார்.