Skip to main content

பத்திரிகையாளர் கொலையில் திகில் காட்சிகள்!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
kashoggi

 

துருக்கியில் சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஷோக்கி எப்படிக் கொல்லப்பட்டார் என்ற முழுமையான உண்மைகளை வெளியிடப்போவதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக பல்வேறு விஷயங்களை அம்பலப்படுத்தி வந்தார். அவருடைய விமர்சனங்கள் காரணமாக தொடர்ந்து அவர் பழிவாங்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் சவூதியை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றார்.

 

இந்நிலையில் அவர் தனது காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக, தன்னுடைய விவாகரத்து சான்றிதழைப் பெறுவதற்காக துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அக்டோபர் 2 ஆம் தேதி தனது காதலி ஹெட்டைஸுடன் சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பவே இல்லை என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது. அந்தப் பத்திரிகைக்குத்தான் அவர் கட்டுரைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

ஆனால், கஷோக்கி தூதரகத்தின் பின்வழியாக வெளியேறிவிட்டதாக சவூதி அரசு கூறியது. அது பொய் என்றும், தூதரகத்திற்குள்ளேயே சவூதியிலிருந்து வந்த இளவரசருக்கு வேண்டிய ஆட்கள் அவரை கொன்று காணாமல் போக்கிவிட்டதாக துருக்கி அரசு கூறியது.
 

kashoggi


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்த விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்தும்படி சவூதியை வலியுறுத்தின. கஷோக்கி காணாமல் போன விவகாரம் சவூதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத வியாபாரம் உள்ளிட்ட பல உறவுகளை பாதிக்கும் நிலை உருவானது. உண்மை வெளிவராவிட்டால் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பல நாடுகள் அறிவித்தன.

 

இந்நிலையில்தான் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் சவூதி ஆட்களுக்கும் கஷோக்கிக்கும் இடையில் நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதாக சவூதி அரசு கூறியது. ஆனால், இளவரசுக்கோ சவூதி அரசுக்கோ தொடர்பில்லை என்றும் அது கூறியது. இந்த அறிவிப்பை முதலில் வரவேற்ற ட்ரம்ப், பின்னர், இதை பொய் என்று கூறினார். என்ன நடந்தது என்பது முழுமையாக வெளிவர வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

 

இதற்கிடையே, சவூதி தூதரகத்தில் நடந்த படுகொலை தொடர்பான அத்தனை விவரங்களையும் அம்பலப்படுத்தப் போவதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து, சவூதி தூதரகத்திற்குள் கஷோக்கியும் அவருடைய காதலி ஹெட்டைஸும் நுழையும் சிசிடிவி படமும், கஷோக்கியின் உடைகளை அணிந்த ஒருவர் பின்வழியாக வெளியேறி துருக்கியின் பல இடங்களுக்கு தனது நண்பருடன் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

 

கஷோக்கி எப்படிக் கொல்லப்பட்டார், அவருடைய உடல் எப்படி காணாமல் போனது அல்லது எப்படி வெளியே கொண்டுபோகப்பட்டது என்ற உண்மைகள் அம்பலமாகும் நாளை உலகம் திகிலுடன் எதிர்நோக்கி இருக்கிறது.