Skip to main content

குஜராத்தில் முடிசூடும் பாஜக? இமாச்சலில் ஆட்சியைப் பிடிக்குமா காங்கிரஸ்...? - பரபரப்பான சூழ்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

kl;

 

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கிடக்கிறார்கள். குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜகவுக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 

 

குறிப்பாகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 182 தொகுதிகளில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. கடந்த தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று கடுமையான நெருக்கடியை பாஜக தரப்புக்கு ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது எவ்வித சிறு சலசலப்புக்கும் இடம் தராமல் பாஜக மிக உறுதியாக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் அனைவரும் ஒருசேரத் தெரிவித்துள்ளனர். 

 

இதனால் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் பாஜகவினர் குஜராத்தில் வரலாற்று வெற்றியை நிச்சயம் பதிவு செய்வோம் என்று உறுதிப்படக் கூறுகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத வகையில் தொடர்ந்து எட்டாவது முறையாக நாங்கள் ஆட்சியமைப்போம் என்று பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் டெல்லியில் இன்று நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததைப் போல் குஜராத்தில் நடைபெறாது என்று என்ன நிச்சயம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்குக் காரணமாக டெல்லி மாநகராட்சியைக் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாஜக வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இதனைச் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குஜராத் பாஜகவுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட மாநிலம் அல்ல, இந்த முறை பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இழுபறி நிலை இருப்பதைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு சில இடங்கள் காங்கிரஸ் கட்சியை விடக் கூடுதலாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் சில செய்தி ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.