Skip to main content

மத்திய அரசின் தொடர் தோல்விகள்... 

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

மத்திய அரசாக பாஜக பதவியேற்றது முதல் அதாவது 2014 முதலே ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம் என்பதை மிக தீர்க்கமாக தொடங்கியது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்நாடுதான். எந்தளவிற்கு என்றால் தமிழ்நாடு என்ற பெயர்கூட அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாக அதை தொடர்ந்தார்கள். 
 

modi amitshah


அதற்கேற்றார்போல் தற்போதைய ஆட்சியாளர்களும் செயல்பட்டனர். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதில் தீவிரமான ஆட்சியாளர்களால் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களே நேரடியாக களத்திற்கு வந்து போராடும்படி ஆனது, எதிர்கட்சிகளாலும், இயக்கங்களாலும் அது வலுப்பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம், கல்வி மாநிலப்பட்டியலிலிருந்து, மத்திய பட்டியலுக்கு சென்றது அதன்விளைவாக வந்த நீட், தமிழ்நாடு இல்லம் பெயர்மாற்றம், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது, ஹைட்ரோ கார்பன், புயல்கள் வந்தபோது அவர்களின் நடவடிக்கை இப்படி 2018 முழுவதும் போராட்டக் களமாகவே இருந்தது தமிழ்நாடு. இவற்றிற்கு பதிலாகதான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதோடும் முடியவில்லை.

மோடி சர்க்கார் 2.0 வின் தொடக்கத்திலேயே மும்மொழிக்கொள்கை என மீண்டும் போராட்டத்தைக் கிளப்பியது. அதைத்தொடர்ந்து தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று தெற்கு இரயில்வே கூறியது. ஆனால் இவையெல்லாம் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் பெறப்பட்டன. இப்படி தமிழ்நாட்டிற்கு தொடர்ந்துவந்த பிரச்சனைகளையெல்லாம் தமிழ்நாடு மிகப்பெரிய எதிர்ப்பால் நிறுத்தியுள்ளது. நிறுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தமிழ்நாடு சிறிது வித்தியாசமானது. பிரச்சனைகளுக்கேற்றார்போல் முடிவெடுக்கக்கூடியது, ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டுக்காக உழைத்தவர்களை மறக்காதது, தன்னை அரவணைத்து செல்ல நினைப்பவரை அணைக்கும், திணிப்பவர்களை எதிர்க்கும், தனது சுயத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும்.

அதனால்தான் மிகவும் பெரும்பான்மையான மக்கள் இங்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தும், கடவுளே இல்லையென்று சொன்ன பெரியாரின் சிலையை உடைத்தபோது கொந்தளித்து, மிகவும் தீவிர எதிர்வினையாற்றியது. இந்துத்துவாவை பரப்பவந்த ரதயாத்திரை பறந்துபோனது. தமிழ்நாடு எப்போதும் தனக்கு தேவையானதை தானாக வரவேற்றுக்கொள்ளும், வேண்டாததை யார் திணித்தாலும் எதிர்த்து நிற்கும் திறன்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.