திமுகவின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று மு.க.அழகிரி கூறியிருந்த நிலையில், 5-ஆம் தேதி அவர் சென்னையில் நடத்திய அமைதிப் பேரணியில் சில ஆயிரம் பேர்தான் கலந்துகொண்டார்கள். இவர்களெல்லாம் திமுக விசுவாசிகளா? அழகிரி ஆதரவாளர்களா? அழைத்து வரப்பட்டவர்களா? என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், “அழகிரி சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றியிருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அழகிரியை உசுப்பேற்றியபடியே இருப்பார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு, தங்களுடைய எதிர்காலம் குறித்த கவலை இருப்பதால், அழகிரியின் முதுகுக்குப் பின்னால் திருகல் வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த அமைதிப் பேரணியின் பின்னணியிலும், அழகிரியின் அந்தத் தீவிர விசுவாசிகளின் பங்களிப்பு உண்டு.” என்கிறார்கள் மதுரை திமுகவினர்.
மதுரையில் அழகிரியின் நட்பு வட்டத்தில் உள்ள தீவிர விசுவாசிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் அழகிரியால் வளர்ந்தவர்கள். அதனால், எந்தச் சூழ்நிலையிலும் அழகிரியை விட்டுவிடாமல், பின்தொடர்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர், கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்!
பி.எம்.மன்னன் – (முன்னாள் மதுரை துணை மேயர்)
மதுரை ஆரப்பாளையம் – அண்ணா பேருந்து நிலையம் – பெரியார் பேருந்து நிலையம் வழித்தடத்தில், 7-ஆம் நம்பர் அரசு சுற்றுப் பேருந்தில் டிரைவராகப் பணியாற்றினார் மன்னன். ஒருநாள், அழகிரிக்கு டிரைவர் தேவைப்பட்ட நிலையில், மன்னனை அனுப்பிவைத்தது திமுக தொழிற்சங்கம். மன்னனின் பேச்சும் அணுகுமுறையும் அழகிரிக்குப் பிடித்துப்போனது. டிரைவர் என்ற நிலையைக் கடந்து, மன்னனால் அழகிரியின் நண்பர் ஆக முடிந்தது. மதுரை ஸ்டைலில் மன்னனும் ஒச்சு பாலுவும் அழகிரிக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டினார்கள். மன்னனுக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பு கிடைத்தது.
2003-ல் முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மு.க.அழகிரி. அவரோடு, மன்னன் உள்ளிட்ட 13 பேர் கைதாகி வழக்கைச் சந்திக்க நேரிட்டது. 2006 உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சி - ஆரப்பாளையத்தில் வார்டு கவுன்சிலருக்குப் போட்டியிடும் வாய்ப்பு, அழகிரி சிபாரிசில் மன்னனுக்குத் தரப்பட்டது. பக்கத்து வார்டில் திமுக கவுன்சிலராகப் போட்டியிடும் சின்னம்மாள் சீனியர் என்பதால், மேயரோ, துணை மேயரோ ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. சின்னம்மாள் அழகிரி விசுவாசி கிடையாது. திமுக தலைமையை பெரிதும் மதித்து வருபவர். இந்த நேரத்தில் குறுக்குசால் ஓட்டினார் மன்னன். அழகிரியின் ஆசியோடு, அருண்குமார் என்பவரை சின்னம்மா வார்டில் சுயேச்சையாகக் களமிறக்கினார். அந்தத் தேர்தலில் மன்னனும் அருண்குமாரும் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்கள். சின்னம்மா தோற்றுப்போனதால், அழகிரியின் ஆதரவோடு மதுரையின் துணை மேயர் ஆனார் மன்னன்.
என்னதான் அழகிரியின் நட்பைப் பெற்றாலும், அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்துக்கு மன்னனால் வரமுடியவில்லை. பொட்டு சுரேஷ் தடையாக இருந்தார். 2013-ல் பொட்டு சுரேஷ் கொலையான பிறகே, அந்த இரண்டாவது இடம் மன்னனுக்குக் கிடைத்தது. அழகிரியின் தயவால்தான், அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்த மன்னன், இன்றைக்கு சில நூறு கோடிகளைச் சேர்த்து, பொருளாதாரத்தில் மிகவும் வலுவாக இருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன் பெரும் கூட்டத்தைச் சேர்த்து, மதுரையை மிரட்டும் அளவுக்கு ஓஹோ என, தன் மகளுக்கு மன்னன் நடத்திய திருமணமே இதற்கு சாட்சி.
கலைஞரே மன்னனிடம் இப்படிச் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. அழகிரியின் மதுரைக் கூடாரம் கலகலத்து, பலரும் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பியபோது, “எல்லாருமே இங்கே வந்துட்டா எப்படி? நீ ஒரு ஆளாச்சும் அழகிரிக்கு பாதுகாப்பா அவன் கூடவே இரு.” என்றாராம்.
கோபிநாதன் (முன்னாள் மதுரை மேயர் தேன்மொழியின் கணவர்)
திமுகவில் சாதாரண வார்டு பிரதிநிதியாக இருந்த கோபிநாதன், அழகிரியின் கரிசனத்தால், சுப்பிரமணியபுரம் வார்டு கவுன்சிலர் ஆனார். இரண்டு தடவை கவுன்சிலர் ஆன கோபிநாதன், தெற்கு மண்டலத் தலைவராகவும் முடிந்தது. அந்த வார்டு பெண் வார்டாக மாற்றப்பட்டதும், அழகிரியின் ஆலோசனை பிரகாரம், அதுவரையிலும் ‘ஹவுஸ்-ஒய்ப்’ ஆக மட்டுமே இருந்த தேன்மொழியைப் போட்டியிட வைத்து கவுன்சிலர் ஆக்கினார் கோபிநாதன். ஸ்டாலினின் மேயர் தேர்வாக இருந்த சின்னம்மாளைத் தோல்வியடையச் செய்துவிட்டு, எழுதப்படிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்பட்ட தேன்மொழியை மேயர் ஆக்கினார் அழகிரி. தனக்கும் தன் மனைவிக்கும் இப்படி ஒரு கவுரவத்தை அளித்த அழகிரிக்கு, வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டு, அவருடைய விசுவாசியாகவும் ஆலோசகராகவும் நீடித்து வருகிறார் கோபிநாதன்.
உதயகுமார் (முன்னாள் மதுரை மாவட்ட திமுக துணைச்செயலாளர்)
ஏ.ஆர். சந்திரன், நாகேஷ் போன்றவர்கள் ஓரம் கட்டப்பட்ட பிறகு, அழகிரி சம்பந்தப்பட்ட வரவு-செலவு கணக்குகளைப் பார்த்து வந்தார் உதயகுமார். அழகிரியின் முழு நம்பிக்கையைப் பெற்றவர் ஆவார். பூர்வீகம் ராமநாதபுரம் – கமுதி என்றாலும், அழகிரிக்கு வேண்டியவர் என்பதால், மதுரையின் மாவட்ட துணைச்செயலாளர் ஆக முடிந்தது. வில்லங்கமான சமாச்சாரங்களில் இருந்து சற்று தள்ளியே நிற்பவர் என்பதால், வியாபார தொடர்புகளுக்கும் இவரைப் பயன்படுத்தி வருகிறார் அழகிரி. நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதால், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும்போது, உதயகுமாரை அருகில் வைத்துக்கொள்வார் அழகிரி.
இசக்கிமுத்து (முன்னாள் மதுரை வடக்கு மண்டலத் தலைவர்)
அண்ணா காலத்திலிருந்தே திமுகவில் இருந்து வருபவர். மாவட்ட அவைத்தலைவர், கவுன்சிலர், வடக்கு மண்டலத் தலைவர் என அடுத்தடுத்த நிலைக்கு இவரைக் கொண்டு சென்றார் அழகிரி. இன்று வரையிலும், அழகிரிக்கு அறிக்கை எழுதித் தருகிறார். இவருடைய மேற்பார்வையில்தான் அழகிரியின் அறிக்கையே தயாராகும். மதுரையில் என்ன நடந்தாலும், அழகிரியிடம் முதல் ஆளாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார். அதனால், ‘போட்டுக்கொடுப்பவர்’ என்று அந்த வட்டத்தில் பெயர் எடுத்திருக்கிறார். கலைஞர் இறந்தபிறகு அமைதி காக்க நினைத்த அழகிரியை, ஸ்டாலினுக்கு எதிராக முடுக்கிவிட்டவர்களில் இவரும் ஒருவர். “நீங்க இப்படியே சும்மா இருந்தீங்கன்னா, நீங்களும் ஒண்ணுமில்லாம போயிருவீங்க. நாங்களும் ஒண்ணுமில்லாம போயிருவோம்.” என்று சென்னைக்கே சென்று அழகிரிக்கு தூபம் போட்டார்.
இதற்கு முன்பு ஒருமுறை, கட்சியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாகப் பேட்டி அளித்த இசக்கிமுத்துவையும் நீக்கியது கட்சித் தலைமை. ‘இனிமேல் இசக்கிமுத்துவிடம் திமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று முரசொலியில் அறிக்கை வெளிவந்தது. உடனே இசக்கிமுத்துவின் மனைவி கலைஞருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதினார். ‘அய்யா.. நமது கட்சியில் மகளிரணி பொறுப்பில் நான் இருக்கிறேன். இசக்கிமுத்து என் கணவர் ஆவார். முரசொலியில் வந்த அறிக்கை எனக்கும் பொருந்துமா? நான் என் கணவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? தங்களிடமிருந்து பதில் வந்த பிறகுதான், என் கணவர் விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுக்க முடியும்.’ என்று அந்தக் கடிதத்தில் கேட்க, அதைப் படித்துச் சிரித்துவிட்டு, “குடும்பத்தைப் பிரிக்காதீங்கப்பா.. இசக்கிமுத்துவைக் கட்சியில் சேர்த்துக்கங்க.” என்று கலைஞர் கூற, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி, இசக்கிமுத்து அப்போது கட்சியில் சேர்க்கப்பட்டார். மனைவி பெயரில் கலைஞருக்கு அப்படி ஒரு கடிதம் எழுதியவரே இசக்கிமுத்துதான்.
முபாரக் மந்திரி (முன்னாள் மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்)
இவருடைய தந்தை ரங்கூனில் திமுக வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். திமுக குடும்பத்தைச் சேர்ந்த முபாரக் மந்திரி, மதுரையில் எஸ்ஸார் கோபியின் நண்பரானார். அந்தவகையில், அழகிரியை நெருங்க முடிந்தது. தா.கிருட்டிணன் கொலை வழக்கில், முபாரக் மந்திரிக்கும் தொடர்பிருக்கிறது என்று போலீஸ் தரப்பு விசாரித்தபோதுதான், இவர் பெயரே வெளிஉலகத்துக்குத் தெரிந்தது. தா.கிருட்டிணன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அழகிரி வீட்டில் நடந்த பார்ட்டியில், மது அருந்தாதவர் முபாரக் மந்திரி மட்டும்தான் என்பது தெரியவர, அழகிரியின் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக, விசாரணையில் கடுமை காட்டினார்கள் காக்கிகள். டார்ச்சர் அதிகமாக இருந்தும், இவர் வாய் திறக்கவே இல்லை. பிறகு தா.கி. கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை ஆனார்கள். விசாரணை நடந்தபோது, முபாரக் மந்திரி காட்டிய விசுவாசம், அவரை வார்டு கவுன்சிலர் ஆக்கியது. அடுத்த தடவை, சுயேச்சையாகப் போட்டியிட்டும் கவுன்சிலர் ஆக முடிந்தது. இவருடைய சகோதரர் சாலி தளபதிக்கு, செய்தி – மக்கள் தொடர்புத்துறையில் ஏ.பி.ஆர்.ஓ. வேலை கிடைக்கவும் செய்தார் அழகிரி. குவாரி போன்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு அளித்ததால், பொருளாதார முன்னேற்றம் கண்ட முபாரக் மந்திரி, அழகிரியின் நட்பு வட்டத்தில் தொடர்ந்து இருக்கிறார்.
இன்னும் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்ஷா, எம்.எல்.ராஜு போன்ற விசுவாசிகளும் அழகிரிக்கு பக்கபலமாக உள்ளனர்.
இந்த நட்புப் பின்னணியில்தான், தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்துகொண்டு, மத்திய உரம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சரும் ஆகி, கட்சியையும், கட்சியினரையும் தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைத்து, மதுரையின் முடிசூடா மன்னனாக வலம் வந்தார் மு.க.அழகிரி. சென்னையில் நடந்த அமைதிப் பேரணி, அவரும் அவருடைய விசுவாசிகளும், மீண்டும் ஒரு ‘ரவுண்ட்’ வருவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியே!
ஒருமுறை மு.க.அழகிரியின் பிறந்த நாளில், ‘அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை!’ என்று வாழ்த்தினார் கலைஞர்! பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கிறாரா மு.க.அழகிரி?