நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூட்யூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், குமரிக்கண்டம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
குமரிக்கண்டம் பற்றிய பல்வேறு விஷயங்கள் குறித்து கடந்த பகுதிகளில் பார்த்தோம். குமரிக்கண்டம் குறித்த மேலைநாட்டினரின் பார்வை என்ன என்பது பற்றியும் பார்த்திருந்தோம். மேற்கத்திய அறிஞர்கள் அதை லெமூரியா கண்டம் என அழைக்கின்றனர். அந்த நிலப்பகுதியில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் அதைக் குமரிக்கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, ராமசாமி என்ற ஒருவர் காய்கறி வியாபாரம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை ராமசாமி என்றும் குறிப்பிடலாம். காய்கறி வியாபாரி என்றும் குறிப்பிடலாம். காய்கறி வியாபாரி என்று அவரைக் குறிப்பிடுவதால் அவர் ராமசாமி இல்லை என்றாகிவிடாது. ஸ்காட் எலியட், ருடால்ஃப் டைசன், லாசன் கார்வே ஆகிய மேற்கத்திய அறிஞர்கள் லெமூரியா கண்டத்தின் காலம் என்பது 2 லட்சம் ஆண்டுகளில் இருந்து 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்வரை எனக் கணித்துள்ளனர். இன்றைக்கு ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள புதைப்பொருட்களை முறையான தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் இதை உறுதிசெய்யலாம். குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் 10ஆம் நூற்றாண்டுவரை நம்மிடம் இருந்துள்ளன.
மாயன்கள் பாணியில் தஞ்சை பெரிய கோவில் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பது, கல்லணை கட்டுமானம் ஆகியவற்றை உதாரணமாக வைத்து லெமூரியா கண்டம்தான் குமரிக்கண்டம் என கடந்த பகுதிகளில் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தேன். லெமூரியா கண்டம் பற்றிய விஷயங்களைத் தமிழ்ச் சங்கங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. முதல் தமிழ்ச் சங்கம் 4,400 ஆண்டுகள் இருந்திருக்கிறது. அதில், 60க்கும் மேற்பட்ட அரசர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். முதல் சங்கம் இருந்த இடம் முதல் மதுரை. அது தெற்குப் பகுதியில் இருந்தது. தெற்கை எமதிசை என்று கூறும் பழக்கம் ஆரிய மரபில் உள்ளது. அதை நம்முடைய பழக்கத்திலும் இன்று பயன்படுத்துகிறோம். தென்திசை மிகப்பெரிய அழிவை எதிர்கொண்ட திசை என்பதால் அதை எமதிசை என்று அழைக்கின்றனர். தென்திசையில் இருந்த முதல் மதுரை கடற்கோளால் அழிவுக்கு உள்ளான பிறகு, அதிலிருந்து தப்பிய பகுதியை நோக்கி மக்கள் இடம்பெயர ஆரம்பிக்கின்றனர். இடப்பெயர்வு அடைந்த அவர்கள் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பிக்கும்போது இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரம் உருவாகிறது. காலப்போக்கில் அந்த நிலமும் அழிவுக்கு உள்ளாகிறது. அங்கிருந்து உயிர் பிழைத்த மக்கள், அடுத்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கின்றனர். மணவூர் என்ற இடத்தில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. குமரிக்கண்ட அழிவு என்பது ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. படிப்படியாக காலப்போக்கில் நிகழ்ந்த அழிவுதான் குமரிக்கண்ட அழிவு.
கபாடபுரம் பற்றிய குறிப்புகள் ராமாயணத்திலும் மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் உள்ளன. கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் இலங்கையை தாப்ராபரணே எனக் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு நெல்லையில் தாமிரபரணி என்று நதி உள்ளது. ஆதியில் தாமிரபரணி என்ற பெயரில் மிகப்பெரிய நதி வேறொரு இடத்தில் இருந்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டையும் இலங்கையையும் ஒரு நதிதான் பிரித்துள்ளது. அந்த நதி தாமிரபரணி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நிலம் இறங்க இறங்க அந்த நதிதான் கடலாக மாற்றம் கண்டிருக்க வேண்டும். இன்று கடலாக உள்ள பகுதிகள் அன்று நிலப்பரப்பாக இருந்தது பற்றியும் இன்று இமயமலையாக உள்ள பகுதிகள் ஒருகாலத்தில் கடலாக இருந்தது குறித்தும் முன்னரே நாம் பேசியிருக்கிறோம்.
சிலப்பதிகாரத்தில் மாடலன் என்ற கதாபாத்திரம் குமரி ஆற்றில் நீராடினான் என்று ஓரிடத்தில் உள்ளது. கோவலன் இறந்த பிறகு, அதே இடம் குமரிக்கடல் என அடையாளப்படுத்தப்படுகிறது. கால ஓட்டத்தில் நிலம் இவ்வாறு மாற்றமடைவதை இளங்கோவடிகள் கதையின் போக்கிலேயே அழகாகப் பதிவு செய்துள்ளார்.